Published:Updated:

'கம்ப்யூட்டர்ஜி' முருகய்யன்!

'கம்ப்யூட்டர்ஜி' முருகய்யன்!

'கம்ப்யூட்டர்ஜி' முருகய்யன்!

விகடன் வாசகரும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவுத் தலைவருமான முரளிதரன், 'பல்லா யிரம் சம்பவங்களைத் தேதி வாரியாகக் குறிப்பிடும் ஓர் அதிசய மனிதர், திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் வசிக்கிறார்’ என்ற தகவலை போனில் தெரிவித்தார்.

'கம்ப்யூட்டர்ஜி' முருகய்யன்!

71 வயதான முருகய்யன்தான் இந்த அதிசய மனிதர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவரை 'கம்ப்யூட்டர்ஜி’ எனச் செல்லமாக அழைக்கின்றனர். என்னைப் பற்றி விசாரித்தவர், என் வசிப்பிடத்தின் அருகே முன்பு ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சாராய வியாபாரி முதல் இப்போது உள்ள அரசியல்வாதிகள் வரை படபடவெனப் பட்டியல் இட்டார். திருச்சியில் பிரபல அரசியல் கட்சிகள் நடத்திய மாநாடுகளின் தேதிகள், அதில் கலந்துகொண்ட வி.ஐ.பி-க்கள் பற்றிய விவரம், தி.மு.க., அ.தி.மு.க.எதிர் கொண்ட தேர்தல்களில் வெற்றி பெற்ற இடங்கள், ஐந்து முறை கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற தேதிகள், மூன்று முறை ஜெயலலிதா பதவி ஏற்ற தேதிகள், திருச்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் பிறந்த நாட்கள், போன் நம்பர்கள், அவர்களுடைய வாகனங்களின் பதிவு எண்கள், வீட்டு முகவரி எனப் பல்வேறு தகவல்களையும் மிகச் சரியாகக் கூறி அசத்தினார்.

தமிழ்நாட்டில் நடந்த பிரபல கொலைச் சம்பவங்கள், பேரழிவு நிகழ்வுகள், அரசியல் பிரமுகர்களின் பிறந்த, இறந்த தேதிகள் என, நான் கேட்ட அனைத்துக் கேள்வி களுக்குமான பதில்கள் சற்றும் தாமதம் இன்றி வந்துவிழுந்தன.

முருகய்யன்    திருச்சி வருமான வரித் துறை அலுவலகத்தில் கடைநிலை ஊழிய ராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அந்த அலுவலகம் சுமார் 35 ஆயிரம் நபர்களின் வருமான வரிக் கணக்குகளைப் பராமரித்து வருகிறது. இந்த 35 ஆயிரம் நபர்களின் விலாசம், பான்கார்டு நம்பர், அவர்கள் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தேதி ஆகிய அனைத்தையும் ஞாபகம் வைத்துள்ளார்.

என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவருடைய செல்போன் சிணுங்கி யது. மறுமுனையில் பேசியவருக்கு, ''நீங்கள் கேட்கும் பெயரில் நான்கு நபர் கள் வருமான வரி செலுத்திவருகின்றனர். அவர்களுடைய அட்ரஸைச் சொல்றேன் எழுதிக்கோங்க'' என்றபடி நான்கு விலாசங்களையும் கடகடவெனச் சொல்லி முடித் தார். ''ஒண்ணுமில்லை, இன்கம்டாக்ஸ் ஆபீஸில் இருந்து பேசினாங்க. ஒரு பெயர் குழப்பம். அதான் அட்ரஸ் கேட்டாங்க'' என்றார் அடக்கமாக.

''விஷயங்களை ஞாபகம்வெச்சிக்கிறதுக்காக, விசேஷ பயிற்சி ஏதாவது செய்கிறீர்களா?'' என்று கேட்டால், ''அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க. செய்தித் தாள்களில் வரும் சம்பவத்தைப் படித்தவுடன், அதை ஒன்றுக்கு இரண்டு முறை மனசுக்குள் சொல்லிப் பார்ப்பேன் அவ்வளவுதான். ஞாபக சக்தியைக் கடவுள் எனக்குக் கொடுத்த வரமாகத்தான் நினைக்கிறேன். சிறுவயதில் எனக்குச் சரியான வழிகாட் டுதல் இருந்திருந்தால், நான் மேலும் படித்துப் போட்டித் தேர்வுகள்எழுதி உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியும். அதைச் சாதிக்க முடியாமல் போய் விட்டதே என்கிற குறையைத் தவிர எனக்கு வேறு எந்த ஆதங்கமும் இல்லை'' என்கிறார் அந்த ஆச்சர்ய மனிதர்.

- அ.சாதிக்பாட்ஷா, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

மைக்ரோஸ்கோப் விழிகள்... பால்பாயின்ட் பேனா தூரிகை!

'கம்ப்யூட்டர்ஜி' முருகய்யன்!

ரிசி, பருப்பு, ஜவ்வரிசி, கடுகு, கசகசா இவை கிடைத்தால் அவற்றைவைத்து நாம் சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால், திருச்சியைச் சேர்ந்த குணசேகரன் இந்தப் பொருள்களில் நுண் ஓவியங்கள் வரைந்து அசத்துகிறார். ஒரு அரிசியில் அதிகபட்சமாக 55 ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். அஞ்சல் அட்டையில் 1,800 ஓவியங்களும், விசிட்டிங் கார்டில் 700 ஓவியங்களும், ஒரு சிறிய சிப்பி ஓட்டில் 100 ஓவியங்களும் வரைந்துள்ளார். தன்னுடைய விழிகளை மைக்ரோஸ்கோப்பாகவும் சாதாரண பால்பாயின்ட் பேனாவைத் தூரிகையாகவும் கொண்டுதான் இந்த ஓவியங்களை வரைகிறார்.

''ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோதே அரிசி, கோதுமை, ஜவ்வரிசி, பருப்பு, கடுகு இவற்றில் பேனாவைக் கொண்டு படங்கள் வரைந்து பழக ஆரம்பித்தேன். ஒரு சில மாதங்களில் ஒரு அரிசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை வரைந்தேன். பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நான் வரைந்துவைத்து இருந்த அரிசி ஓவியங்களைப் பார்க்கத்தான் அதிக கூட்டம் கூடியது. இந்த நுண் ஓவியங்கள் எனக்கு 25-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன. 2011-ம் ஆண்டுக்கான நுண்கலைப் பிரிவில் சாதனையாளராக என்னைத் தேர்வுசெய்து, டெல்லியில் உள்ள 'சர்தார் வல்லபாய் படேல் ஃபவுன்டேஷன்’ சர்வதேச விருது வழங்கியது. ஜம்மு-காஷ்மீர் கவர்னர் வோரா இந்த விருதை வழங்கி என்னைக் கௌரவித்தார்'' என்கிறார் குணசேகரன் பெருமையாக.

- அ.சாதிக் பாட்ஷா, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு