Published:Updated:

உப்பளத்தை உள்ளளவும் நினை!

உப்பளத்தை உள்ளளவும் நினை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் நின்று பைனாகுலர்வைத்துப் பார்த்தாலும் கூட, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளைவெளேர் என, உப்பளங்கள்தான் கண்ணுக்குத் தெரி கின்றன. வேதாரண்யத்தைச் சுற்றி  உள்ள ஊர்களில் மட்டும் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு சாகுபடி செய்யப்படுகிறது. அதில் அகஸ்தியம்பள்ளிக்குத்தான் முதலிடம்!

 அதிகாலை 4 மணி என்றாலும் சரி... மாலை 4 என்றாலும் சரி... எல்லா உப்பளங்களிலும் ஏதோ ஒரு வேலை சுறுசுறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.

'கோடைகாலத்தில்தான் இங்கே சாகுபடியே. ஜனவரிக்கு முன்னாடியே சராசரியா 10 அடிக்கு 12 அடினு தரிசு நிலத்தைப் பாத்திக் கட்டி வயல் மண் கொண்டாந்து நிரவி, 'உப்பு வயல்’ ரெடி பண்ணிடுவோம். கடல்ல இருந்து மோட்டார் மூலம் தண்ணி எடுத்து வயலுக்குப் பக்கத் துலயே தனியா ஒரு குளத்துல சேமிச்சு வெப்போம். 'ஹைட்ரோ மீட்டர்’ என்ற கருவியில்  நீரின் அளவு சராசரியா 10 டிகிரி இருக்கிற மாதிரிவெச்சு பாத்திக்கு விட்டுடுவோம். 'ஹைட்ரோ மீட்டர்’ல தண்ணி 0 டிகிரிக்குப் பக்கமா இருந்தா, அதுதான் குடிக்கிற தண்ணி. 10 டிகிரிக்கும் குறையாம இருந்தாத்தான் உப்பு பூக்கும். கட்டிவெச்ச பாத்தியில தண்ணியை விட்டுட்டா, வெயில்பட்டு மூணு நாள்ல உப்பு பூத்துடும். அதை அப்படியே வாரிக் கரையில் போட்டா ஒருநாள்ல உப்பு ரெடி'' - சொந்த நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யும் ரமேஷ், உப்பு தயாரிப்பதற்கான ஃபார்முலாவைக் கடகடவெனச் சொல்லி முடித்தாலும் வேலை ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை!

உப்பளத்தை உள்ளளவும் நினை!

''கோடை முடியறதுக்குள்ள கடகடனு வேலையை முடிக்கணும். மழை  வந்தா பொழப்பு அவ்வளவுதான். முன்னாடி ஊர் ஆளுகளே இந்தத் தொழிலைப் பண்ணிக்கிட்டு இருந்தோம். இப்ப நிறைய தொழிற்சாலைங்க எங்க ஊருக்கு வந்துடுச்சு. பாதிப் பேர் அங்கே கூலிக்குப் போறாங்க''- உப்பில் கிடக்கும் தூசி, துரும்புகளைப் பார்த்துப் பார்த்து எடுத்துக்கொண்டே விவரம் சொல்கிறார் ராஜா.

''நான், என் மனைவி, என் பிள்ளைங்கனு குடும்பமே இங்கேதான்  உழைக்கிறோம். எங்க தாத்தா காலத்துல இருந்து, இதுதான் நமக்குத் தொழில். அதிகாலையில 4 மணிக்கெல்லாம் சோறு கட்டிக்கிட்டு வயலுக்கு வந்து, ஆளுக் கொரு வேலையா இறங்கிடுவோம். வேலைய முடிச்சு, கொண்டுவந்த டிபனைத் திறக்கவே மணி 12 ஆயிடும். இடையில சாப்பாட்டை எடுத்தா வேலையைப் பார்க்க முடியாது'' - தயாரான உப்பை வண்டியில் ஏற்றுவதில் மும்முரமாகிறார் சுப்ரமணி.

தயாராகும் உப்பை அப்போதே கவரில் அடைத்து வியாபாரத்துக்கு அனுப்புகிறார்கள். ''தூள் உப்புக்குன்னா, இதைப் பக்கத்துல இருக்கிற பெரிய கம்பெனியில் கொடுத்துடுவோம். அவங்களே மெஷினில் தூளாக்கி வித்துடுவாங்க. ஒரு டன் உப்பு 500 ரூபாய். ஒரு கிலோ உள்ள 12 பாக்கெட்டுகள் அடங்கிய பெரிய பை 25 ரூபாய் வரைக்கும் போகும்'' என்று விவரம் சொல்கிறார்கள் அங்கு வேலை பார்ப்பவர் கள்.

உப்பளத்தை உள்ளளவும் நினை!

பாத்திக் கட்டுவது, நீர்விடுவது, உப்பை வாருவது, உப்பை உலர்த்துவது, பாக்கெட் போடுவது எனச் சகல வேலைகளையும் ஆண்கள், பெண்கள் என எல்லோரும் செய்கிறார்கள். 'உப்பு உற்பத்தி’ ஒன்று மட்டுமே இந்த ஊர்க் காரர்களுக்கு இருக்கும் வாழ்வாதாரம். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் உப்புத் தொழிலின் மூலம் இங்கே வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள்.

நமக்கு எல்லாம் சாப்பாட்டில்தான் உப்பு ருசி சேர்க்கிறது. ஆனால், இந்த ஊர்க்காரர்களுக்கு வாழ்க்கைக்கே ருசி சேர்ப்பது இந்த உப்புதான்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு