Published:Updated:

இவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா?

இவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா?

##~##

'ஆதித்யா’ நகைச்சுவை சேனலில் தினமும் மாலையில் 'சின்னவனே... பெரியவனே...’ நிகழ்ச்சியில் மிமிக்ரி, பொது அறிவு, மொக்க காமெடி என ரவுசு அடிக்கும் திருச்சி சரவணனும் 'நாக்க முக்க’ செந்திலும் நம்ம ஊரின் செல்லப் பிள்ளைகள். இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் சிரிப்புக்கு 100 சதவிகித கேரன்டி!

 '' 'பவர் கட்’டுக்கும் 'லவ்வர் கட்’டுக்கும் என்ன பாஸ் வித்தியாசம்?'' சீரியஸாக நம்மிடம் கேட்கிறார் சரவணன்.

''தெரியலயே!'' என்றதும்,

'' 'பவர் கட்’னா வீடு இருட்டாகிடும். 'லவ்வர் கட்’னா வாழ்க்கைப் பிரகாசம் ஆயிடும்''- குழந்தை மொழியில் சிரிக்கிறார்கள் இருவரும்.

''பாஸ்... இந்த மொக்கை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்படவில்லைனு போட்டுக்குங்க''-உஷராகிறார் 'நாக்க முக்க’ செந்தில்.

இவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா?

''10-வது படிக்கிற வரைக்கும் வீட்டைவிட்டே வெளியே போக மாட்டேங்க. 11-ம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல்ல கடைசி பெஞ்சுல உக்காந்துக்கிட்டு பாடம் நடத்துற வாத்தியார்களை கலாய்க்கிறதுதான் வேலை. அப்படிக் கத்துக்கிட்டதுதான் இந்த மிமிக்ரி. கொஞ்ச நாள்லேயே பிக்-அப் ஆகி காலேஜ் முதல் ஆண்டு படிக்கும்போது, சன் டி.வி-யில 'அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில பங்கேற்க வாய்ப்பு கிடைச்சுருச்சு. வீட்டைவிட்டே வெளியே வராத நான், அதுக்கப்புறம் ஊர் ஊராச் சுத்த ஆரம்பிச்சுட்டேன்.

ஆரம்பத்துல உள்ளூர் சேனல்களிலும் மேடைகளிலும்தான் மிமிக்ரி பண்ணினேன். 100, 150 ரூபாய் கிடைக்கும். அப்படியே சன் டி.வி., ஜெயா டி.வி., கலைஞர் டி.வி-னு வளர்ந்து 'மகான் கணக்கு’ படம் வரைக்கும் பண்ணியாச்சு. அடுத்து ரெண்டு பெரிய படங்கள்ல புக் ஆகி இருக்கேன். ஆதித்யா ஷோவும் 100-வது எபிசோடைத் தாண்டப் போகுது'' என்று சொல்லும் சரவணன் முகத்தில் பெருமிதச் சிரிப்பு.

இவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா?

''எனக்கும் இதே திருச்சிதான் பாஸ். என்னோட ஸ்கூல் நாட்கள்லதான் மிமிக்ரி செய்யக் கத்துக்கிட்டேன். திறமை இருந்தாலும் அதுக்கான வாய்ப்பு கிடைக்கலை. பாலசுப்ரமணியன்ங்கிற என்னோட ஹிஸ்டரி மாஸ்டர்தான் என்னைக் கல்லூரி வரைக்கும் படிக்கவெச்சு, வளர்த்தாரு. வீட்ல பணம்கொடுக்க முடியலைனாலும் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. நானும் சரவணனும் ஒண்ணாத்தான் படிச்சோம். ஸ்டேஜ் ஷோக்களுக்கும் ஒண்ணாதான் போவோம். அவன், 'சன், ஜெயா, கலைஞர்’னு போக... நான் 'சன், மக்கள், ராஜ், பாலிமர்’னு போனேன். இப்ப மறுபடியும் ஆதித்யாவுல ஒண்ணுசேர்ந்துட்டோம். நானும் இந்த வருஷத்துல ரெண்டு படம் பண்றேன் பாஸ்'' என, டாட் வைக்க... செந்திலின் தோளைத்தட்டி அணைத்து 'நண்பேன்டா...’  என்று இழுத்துக்கொள்கிறார் சரவணன்.

''ரெண்டு பேரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஷோ பண்ணப் போயிருந்தோம். ஆல் மோஸ்ட் எல்லா வாய்ஸும் பேசிட்டோம். சும்மா இல்லாம 'வேற என்ன வாய்ஸ்-ல பேசணும்?’னு ஆடியன்ஸ்கிட்ட கேக்க... திடீர்னு ஒருத்தர் எழுந்திருச்சு 'ஒபாமா வாய்ஸ்ல பேசுங்க’ன்னார். வீணாப் போய் வம்புல மாட்டிக்கிட்டோமோனு தலை கிறுகிறுத்துப் போச்சு. ஓ.கே. சொல்லிவிட்டு, 'ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர். ஐ ஆம் அன்ஏபில் டூ கம் பை பிரெசிடென்ட் ஆஃப் அமெரிக்கா’னு கடகடன்னு சொல்லிட்டேன். பய புள்ளைங்க கூட்டமா எந்திருச்சு கைதட்டி 'சூப்பரு’ன்னாங்க. இவங்க மத்தியில இனி ஈஸியா வாழலாம்டானு வந்துட்டோம்'' என, சரவணன் பெருமிதப்பட... அதை ஆமோதிக்கிறார் செந்தில்.

''ஒவ்வொரு ஃப்ரெண்டும் இல்ல... இந்த ஃப்ரெண்டு தேவை மச்சான்'' எனத் தோள் குலுக்குகிறார்கள் தோழர்கள்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு