Published:Updated:

என் ஊர் : உறையூர்

ரங்கநாயகித் தாயாரும்... பங்காரு அத்தையும்!

##~##

''ஒரு காலத்தில் சோழர்களுடைய தலைநகராக விளங்கிய உறையூரில், திருச்சிராப்பள்ளி ஒரு பகுதி. இன்று மாநகரமாக விளங்கும் திருச்சியில், உறையூர் ஒரு சிறிய பகுதி. இதுதான் காலத்தின் விசித்திரம்!'' - 'மாற்றம் என்பதே மாறாத ஒன்று’ என்ற மார்க்சியத் தத்துவத்தை தன் ஊரின் வரலாற்றின் மூலம் விளக்குகிறார் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசியச் செயலாளர் உ.வாசுகி.

 ''என் ஊர் நகரச் சூழலில் அமைந்த பகுதி. எங்கள் ஊரின் பிரபலமான கோயில் நாச்சியார் கோயில். ரங்கநாதரின் அங்கீகரிக்கப்படாத மனைவி நாச்சியார். அவரை ஸ்ரீரங்கத்தில் இருந்து பார்க்கவந்த பெருமான், மோதிரத்தை விட்டுவிட்டுப் போய்விடுவார். அந்த மோதிரத்தைத் திரும்பப் பெற்று வருமாறு ரங்கநாயகித் தாயார் அடித்து அனுப்புவார் என்பது ஐதீகம். அதை ஒட்டி வருடா வருடம் நடக்கும்

என் ஊர் : உறையூர்

திருவிழாவில், நாச்சியாரைப் பார்க்கவரும் பெருமானின் விக்கிரகத்தை வாழை மட்டையால் அடித்துக்கொண்டே வருவார்கள் பக்தர்கள். அந்த சி்றுபிராயத்திலேயே இந்த திருவிழாக்களி்ல் எனக்கு உடன்பாடு இல்லை இந்த திருவிழாக்களி்ல் எல்லாம் தேவையா என்ற கேள்வி என் மனதி்ல் எழுந்தது.

அப்போது, பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை முறைகளே வேறு மாதிரியானவை. பள்ளியின் ஒட்டுமொத்த மைதானத்தையும் சுத்தம் செய்தல், மீன் தொட்டிக்குத் தண்ணீர் இறைத்து ஊற்றுதல், 50 களைச்செடிகளைப் பிடுங்குதல் என்று இருக்கும். அன்றைக்கு எங்கள் ஏரியாவில் சிலர் வெளிநாடுகளில் வசித்துவந்தார்கள். அவர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். வாடகையை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஏற்றாமலே இருப்பார்கள். வாடகைக்குக் குடியிருப்பவரே, வாடகையை ஏற்றிக்கொடுக்கிறேன் எனச் சொல்கிற அளவுக்குப் பண்பால் அன்றைக்கு இந்தப் பகுதி சிறந்து விளங்கியது.

அந்தக் காலகட்டத்தில் இங்கே பல தரப்பட்ட தொழில்கள் இருந்தன. அதிலும், செயற்கை வைரம் பட்டைத் தீட்டுதலும் நெசவுத் தறிகளும் சாதாரண மக்களுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்பை அளித்தன. பீடி சுற்றும் தொழிலாளர்களுடைய எண்ணிக்கையும் மிக அதிகம். இந்தத் தொழில்களில் பெண்களே பெருமளவில் ஈடுபட்டுவந்தனர். போராட்டம் என்று வந்தாலும் திரளாக அவர்கள் பங்கேற்பார்கள்.

என் ஊர் : உறையூர்

இதில், அத்தையம்மா என்கிற பெண்மணியை இன்னும் மறக்க முடியவில்லை. அவருடைய உண்மையான பெயர் பங்காரு. என் தாயும் தந்தையும் சிறையில் இருந்தபோது, கனிவோடு என்னைக் கவனித்துக்கொள்வார். எத்தனையோ தோழர்களுடைய பிள்ளைகளை அவர் இப்படிக் கவனித்துக்கொண்டார். தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதால், தன்னுடைய கணவரைவிட்டு  விலகினார். எல்லோருக்கும் அத்தையாகவே ஆகி, கடைசிவரை தொழிலாளர்களுக்குச் சேவை செய்வதையே தன் வாழ்வின் பேறாக நினைத்தவர். அந்த மாதர் குலத் திலகத்தை நினைக்கிறபோது இன்னமும் மனம் கலங்குகிறது.

என் ஊரும் அவரைப் போலதான். தன்னை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என, அதற்குக் கவலை இல்லை. அது ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அனுதினமும் பல்வேறு அனுபவங்களைத் தந்தபடியே இருக்கிறது!''  

என் ஊர் : உறையூர்

- பூ.கொ.சரவணன்
படங்கள்: வி.செந்தில்குமார், 'ப்ரீத்தி’ கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு