Published:Updated:

கடவுளிடம் கேட்கும் கேள்வி!

காரைக்கால் நவக்ரஹா காப்பகம்

##~##

''விண்ணையும் படைத்தாய்
மண்ணையும் படைத்தாய்
பொருளையும் படைத்தாய்
உயிர்களையும் படைத்தாய்
அதில், எங்களை மட்டும் ஏன்
இப்படிப் படைத்தாய்..?''

-இதுதான் 'நவக்ரஹா’ காப்பகத்தில் உள்ள அத்தனை குழந்தைகளும் கடவுளிடம் கேட்கும் கேள்வி!

''பாசமும் உறவுகளும் இன்று கேள்விக்குறி ஆகிவிட்டது. ஒரு சிலர் பணத்தையே குறிக்கோளாகக்கொண்டு உறவுகளை உதாசீனப்படுத்துவதால், எத்தனையோ உயிர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அப்படிப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்வுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகிறது காரைக்காலில் உள்ள 'நவக்ரஹா’ இல்லம்!’ -  என்று விகடன் வாசகர் ஒருவர் தகவல் சொன்னதை அடுத்து, 'நோக்கம்’ அறக்கட்டளையால் நடத்தப்படும் 'நவக்ரஹா’ காப்பகத்துக்கு விசிட் அடித்தேன்.

கடவுளிடம் கேட்கும் கேள்வி!

பிறந்த ஒரு மாதத்திலேயே பெற்றோரை இழந்த சாயாதேவி, சிலரால் இங்கு சேர்க்கப்பட்டு இருக்கிறாள். சாயாதேவிக்குத் தாய் - தந்தை எல்லாமே அவளைவிட 10 வயது அதிகமான பிஞ்சு உள்ளங்கள்தான். சொந்தங்களால் கைவிடப்பட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து, தங்களுக்கென புது சொந்தங்களை உருவாக்கி வாழ்ந்துவருகிறார்கள். இங்கு வந்துசேர்ந்த அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து கல்வியையும் தருகிறது நவக்ரஹா காப்பகம். ஓய்வுநேரங்களில், யோகா, நடனம், பாடல், மிமிக்ரி எனத் தனித் திறமைகளையும் வளர்த்துவருகிறார்கள் இந்தக் குழந்தைகள்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மன நலம் குன்றியவர்களுக்கும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கும் ஆதரவு அளித்துவருகிறது இந்தக் காப்பகம். இவர்கள் அனைவருக்கும் ஒரே ஆதரவு 'நோக்கம் அறக்கட்டளை’யின் நிறுவனர் சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி சிந்தாமணி.

கடவுளிடம் கேட்கும் கேள்வி!

''என்னோட அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாரு. என்னை வளர்த்து ஆளாக்கினது என்னோட அம்மாதான். நான் ஸ்கூல் படிக்கிறப்ப அவங்களும் இறந்துடவே, மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியலை... அதனால, சின்ன வயசுல நான் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாதுனு முடிவுசெஞ்சு ஆதரவற்றக் குழந்தைகளுக்காக இந்த இல்லத்தை ஆரம்பிச்சேன். எனக்கு மனைவியா வரப்போறவ, இதுக்கு எல்லாம் ஒத்துக்குவாளானு சந்தேகம் இருந்துச்சு. அதனால, இந்தக்

கடவுளிடம் கேட்கும் கேள்வி!

குழந்தைகளையும் தன்னோட குழந்தைகளா நினைக்கிற பொண்ணுதான் மனைவியா வரணும்னு தேடினேன். கணவனை இழந்த சிந்தாமணி, கைக் குழந்தையோட ஆதரவில்லாம இருந்தாங்க. ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டு, இத்தனைக் குழந்தைகளையும் எங்க சொந்தக் குழந்தைகளா பார்த்துக்குறோம்'' என்கிறார் சக்திவேல்.

''இங்க இருக்கிற எல்லாக் குழந்தைகளும் கடவுளோட குழந்தைகள். ஒவ்வொருத்தரும் சாதிக்கப் பிறந்தவங்க. இன்னைக்கு இவங்களை ஒதுக்கிய எல்லாரும் ஒருநாள் இவங்களைப் பாராட்டும் அளவுக்கு இந்தக் குழந்தைகள் சாதிப்பாங்க'' - நம்பிக்கையுடன் சொல்கிறார் சிந்தாமணி.

- மா.சங்கீதா
படங்கள்: ந.வசந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு