Published:Updated:

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !

Pachaimalai

த.கார்த்திக் ராஜா படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !

த.கார்த்திக் ராஜா படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
Pachaimalai
##~##

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து இருக்கும் நீலமலை என்றழைக்கப்படும் நீலகிரிக்குச் செல்லாதவர்கள் மிகச் சொற்பமே. கந்தக பூமியான திருச்சி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் பச்சை மலைக்கு உங்களில் எத்தனை பேர் சென்று இருப்பீர்கள்? வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் பச்சை மலையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் அங்கு விசிட் அடித்தேன்.  

துறையூரில் இருந்து எட்டு கி.மீ. தூரம் பயணித்து பச்சை மலை அடிவாரத்தை அடைந்தேன். இரு சக்கர வாகனத்தில் அடிவாரத்தை நெருங்கும்போதே இயற்கை விருந்து கண்களுக்குக் காணக் கிடைக்கிறது. மலை மீது பயணிக்கத் தொடங்கும்போதோ... அந்த பிரமாண்ட மலைத் தொடரே நம்மோடு சேர்ந்து நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சை மலை மீது ஏறத் தொடங்கியதும் குரங்குகள் நம்மை வரவேற்கின்றன. மேலே செல்லச் செல்ல, நம்மை அறியாமலேயே ஒரு பயம் நம்மை பற்றிக்கொள்கிறது. இதே அச்சத்தோடு சுமார் 15 கி.மீ-க்கும் மேல் பயணம் செய்த பிறகு, ஒரு கிராமத்தின் ஆரம்பம் வருகிறது. மலைக் கிராமம் என்றாலே மனதில் விரிகிற, சரிவுகளில்  அடுக்கடுக்காக அமைந்து இருக்கும் வீடுகள், ஒத்தையடிப் பாதைகள் என்கிற நம்முடைய கற்பனையை உடைத்துச் சமவெளியான நிலம் ஆரம்பிக்கிறது.

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !

பச்சை மலைத் தொடரில் மொத்தம் 32 கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும் வண்ணாடு ஊராட்சி, கோம்பை ஊராட்சி என இரு ஊராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு விவசாயமே முக்கியத் தொழில். நெல்லும் பருத்தியும் பிரதானப் பயிர்கள். ஒவ்வொரு கிராமமும் இரண்டு முதல் மூன்று கி.மீ. வரையிலான இடைவெளியில் உள்ளது. இந்தக் கிராமங்களைக் கடக்கும்போது இரு புறமும் முந்திரி மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !

இங்கு வாழும் மக்கள், மலை மீது வாழ்வதால் தங்களை மேல்நாட்டு மக்கள் என்றும், மலைக்குக் கீழே வாழும் நம்மை கீழ்நாட்டு மக்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.  லெட்சுமணன் என்கிற முதியவர் என்னை அழைத்து, ''என்ன தம்பி... இந்த மலையைப் பற்றி தெரியணுமா... இங்க வா சொல்றேன்'' என்றபடி சொல்ல ஆரம்பித்தார். ''இங்க உள்ள 32 கிராமங்கள்ல வாழுற எல்லாருமே மலை வாழ் மக்கள்தான். நாங்க இந்த 32 கிராமங்களுக்குள்ளயேதான் கல்யாணம் பண்ணிக்குவோம். கவுண்டர், கொளக்காரன் வீடு, கம்பிகுலான்னு இங்க 60-க்கும் அதிகமான இனம் இருக்கு. இது ஏதோ சாதி மாதிரினு நெனச்சுடாதீங்க. ஒவ்வொரு இனமும் மத்த இனத்துக்கு ஒரு வகையில சொந்தம். நான் கவுனு இனம். எங்களுக்குக் கொளக்காரன் வீடு மாப்பிள்ளை, மச்சான் வேணும். இந்தா இவன் (அருகில் இருப்பவரைக் காட்டி)  கம்பிகுலான். இவனுங்க எங்களுக்கு அண்ணன், தம்பி முறை வேணும். இப்படி எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு.

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !

அந்தக் காலத்துல நெல், வரகு, தினை எல்லாம் பயிர் செஞ்சோம். இப்போ மரவள்ளிக் கிழங்கு, பலா, மஞ்சள், முந்திரி, நெல், பருத்தி, எலுமிச்சைனு எல்லாப் பயிர்களையும் பயிர் செய்றோம். அதுமட்டும் இல்லாம வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்னு சீஸனுக்கு ஏத்தாப்புல பல பயிர்களையும் பயிர் செஞ்சுக்கிட்டு இருக்கோம். இப்ப முந்திரி சீஸன். இனிமே இங்க முந்திரி விளைய ஆரம்பிச்சுடும்.

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !

இங்கே ஒரு ஊத்து இருக்குது. அங்க இருந்து ஒரு ஓடை வழியா தண்ணி வரும். நாங்க சின்ன வயசா இருந்தப்போ அந்த ஓடையில்தான் குளிப்போம். இப்ப எல்லாம் தண்ணிய, குழாய் வழியா டேங்க்குக்கு ஏத்தி வீட்டுக்கே கொண்டுவந்துட்டோம். அதனால், அந்த ஓடைக்கு யாருமே போறது இல்ல. இப்ப அதுக்குப் போறதுக்கான பாதையே எங்க இருக்குனு மறந்துபோச்சு'' என்றபடி விடை கொடுக்கிறார்.

அந்த அழகான, வசீகரமான பச்சை மலையை விட்டு, கிளம்ப மனமே இல்லாமல் புறப்பட்டோம்!

நாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு !