என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

ஊர் ஊராக ஒலிக்கும் ஓசை !

சி.ஆனந்தகுமார் படங்கள்: எம்.ராமசாமி

''இப்போ இல்லாட்டி எப்ப சொல்லுவ?
இப்போ கேக்காட்டி எப்ப கேட்ப?
எய்ட்ஸ் பரவும் முறைகளையே
பாட்டாப் பாடுறோம் கேட்டுக்குங்கோ

##~##
கொஞ்சம் கவனம் இல்லாட்டி மரணமுங்கோ''-
வனஜாவும் லீலாவும் உரத்தக் குரலில் பாட, சீனிவாசன் தவிலையும் அபி மன்னனும், தமிழ் மன்னனும் பறையையும் அதிர வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜோதி, யோகப்பிரியா, சரவணன், ராமச்சந்திரன் ஆகியோர் கரகாட்டம், தப்பாட்டம்,  ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மி, நாடகம் என அடுத்தடுத்து அசத்துகிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாகப் பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பிரசாரப் பயணம் செய்து, எளிய முறையில் மக்களுக்கு எய்ட்ஸ் குறித்து விளக்கும் இந்த 'ஓசை கலைக் குழு’ இளைஞர்களுக்கு இதுவே முதல் பயணம் என்றால் யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள்!

கரூர் லாலாபேட்டை சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த யோகப்பிரியா, ஜோதி, வனஜா, சரவணன், ராமச்சந்திரன், அபி மன்னன் ஆகியோரையும் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாமிராசு, லீலா ஆகியோரையும் இணைத்திருப்பது கலை ஆர்வம்தான்!

''படிச்சு முடிச்சுட்டு கரூரில் ஒரு மில்லில் வேலை செய்துகிட்டு இருந்தேன். ஆனா வேலை அவ்வளவு பிடித்தமானதா இல்லை. எனக்குப் பிடிச்ச கலையே வேலையா இருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சேன். அப்பதான் அபி மன்னன் மூலமா இந்த வாய்ப்பு கிடைச்சுது. 'கலைக் குழு மூலமா பெரம்பலூர் மாவட்டம் முழுக்க எய்ட்ஸ் விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தணும். அது தொடர்பான புராஜெக்ட் ஒண்ணை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தர்றாங்க. செய்ய முடியுமா நண்பா..?’னு கேட்டாரு சரினு சொல்லிட்டேன்.

ஊர் ஊராக ஒலிக்கும் ஓசை !

கலை மேல் ஆர்வம் இருந்தாலும் ப்ளஸ் டூ முடிச்சுட்டு குடும்பக் கஷ்டம் காரணமா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்த எங்க ஊரைச் சேர்ந்த ஜோதி, யோகப்பிரியா ரெண்டு பேர் வீட்டுலயும் பேசினோம், நம்பி அனுப்பினாங்க. கருப்பூரைச் சேர்ந்த  ராமச்சந்திரனை யதேச்சையாப் பார்த்தேன். இப்போ அவன் எங்க டீமில் முக்கியமான ஆள். இப்படி கிடுகிடுன்னு ஒரு கலைக் குழுவையே உருவாக்கினோம்'' என்கிறார் கரூர் கொம்பாடிப் பட்டியைச் சேர்ந்த சரவணன்.

''எங்க வீட்டுல நாலு பொம்பளைப் பிள்ளைங்க. நான்தான் மூத்தவ. 10-வதுக்கு மேல படிக்க முடியாம டெக்ஸ்டைல் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். எனக்குக் கொஞ்சம் டான்ஸ் தெரியும். இப்போ டீம்ல பயிற்சி கொடுக்கவும் ஓரளவுக்கு ஆடிக்கிட்டு இருக்கேன்'' என்கிறார் யோகப்பிரியா.

ஊர் ஊராக ஒலிக்கும் ஓசை !

'ஓசை’யின் ஒருங்கிணைப்பாளர் சாமிராசு, எப்படியாவது இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவில் ஆறேழு வருடம் கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளுக்காக அலைந்துதிரிந்தவர். ஒருகட்டத்தில் வெறுத்துப்போய், குஜராத்துக்குச் சென்று வைரத் தொழிலில் இறங்கினார். அங்கு சம்பாதித்தப் பணத்தைவைத்து நண்பர்களோடு இணைந்து சொந்தத் தயாரிப்பில் நாசர், ரேகா ஆகியோர் நடிப்பில் 'வைகை’ எனும் படத்தை எடுத்தார். நிதிப் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட... வேறு வழியில்லாமல் வீதி நாடகக் கலைஞராக அவதாரம் எடுத்திருக்கிறார். ''இந்தக் கலைப் பயணத்தைத் தொடங்கறதுக்கு முன்னால ஒரு பறை வாங்கக்கூட காசு இல்லை. குறைந்தபட்சம் ரெண்டு பறை, நாலு சலங்கை இருந்தாத்தான் இந்த புராஜெக்ட் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. அங்கங்க கடனை வாங்கியும் எல்லாப் பொருளையும் வாங்க முடியாமத்தான் இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். அப்புறமா பணத்தைத் தேத்தி பயணத்தை நல்லபடியா நடத்திக்கிட்டு இருக்கோம். இது முடிஞ்சதும் என்ன செய்யப் போறோம்னு தெரியலை'' என்று கலக்கத்துடன் சொல்கிறார் சாமிராசு.

எல்லாக் கவலைகளையும் தாண்டி கொண்டாட்டமும் உற்சாகமுமாக அனைவரும் ஏறிக்கொள்ள, அடுத்த ஊரை நோக்கி நகர்கிறது வாகனம்!