என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

கடைசியில் இங்கதான் வரணும் !

கலங்காத பெரியநாயகிவீ.மாணிக்கவாசகம் ,பெ.தேவராஜ் படங்கள்: செ.சிவபாலன்

##~##

''ஆண்கள் மட்டுமே செய்து பழக்கப்பட்ட சுடுகாட்டுப் பணிகளைத் தன்னந்தனியாக ஒரு பெண் செய்கிறார்''- இப்படி ஒரு தகவல் நமது வாய்ஸ் ஸ்நாப்புக்கு வர... அவரைச் சந்திக்கச் சென்றேன்.

புதுக்கோட்டை காந்தி நகர் ஏரியாவுக்குச் சென்று, ''ஏங்க... இங்க பெரியநாயகி வீடு...'' என்று விசாரிக்க ஆரம்பித்தால், ''பாடி எங்க இருந்து வருது..?'' எனும் கேள்விதான் முதலில் வருகிறது. என்னை  அறிமுகப்படுத்திக்கொண்டதும் பெரியநாயகி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். வீட்டில் இருந்தவர்கள், ''இப்பதான் வேலைக்குப் போயிருக்காக'' என்று சொல்ல.... சுடுகாட்டுக்குச் சென்றேன்.

விறகுகளை அடுக்கிக்கொண்டு இருந்த பெரிய நாயகியிடம் பேச்சுக்கொடுத்தேன். ''என்னைக் கல்யாணம் முடிச்சவரு, அந்தக் காலத்துல பொண வண்டி தள்ளிக்கிட்டு இருந்தாரு. ராசா காலத்துலயே அவருக்கு அந்த வண்டியைத் தள்ள பட்டயம் எல்லாம் கொடுத்திருந்தாங்களாம். அவரோட சேர்ந்து நானும் அந்த வண்டியத் தள்ளிக்கிட்டு இருந்தேன். அப்புறம்தான் அவரு செத்தவுகளை சுடுகாட்டுல எரிக்கிற வேலை பாத்தாரு. அப்ப நானும் அவருக்கு ஒத்தாசையா நின்னு வெறகை அடுக்கிக்கொடுத்துட்டுப் போவேன். அவர் வர நாழியாச்சுனா சாப்பாடு கொண்டுவந்து கொடுத்துட்டுப் போவேன். இப்படியே எனக்கும் அந்த வேலை பழகிருச்சு.

கடைசியில் இங்கதான் வரணும் !

அவர் இறந்ததுக்கு அப்புறம் 30 வருஷமா இந்த வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பணக்காரன், ஏழைனு எந்த வித்தியாசமும் இல்லாத ஒரே இடம் இதுதான் தம்பி. யாரைக் கொண்டுவந்தாலும் வெறகைவெச்சுத்தானே எரிக்கப் போறோம்? எவ்வளவு பெரிய வசதியானவுகளா இருந்தாலும் அண்ணாக்கயித்தைக் கூட விடாம அறுத்துட்டுதான் கொளுத்தணும். அப்புறம் என்ன ஏழை, பணக்காரன்?'' என்று தத்துவம் பேசுகிறார்.

கடைசியில் இங்கதான் வரணும் !

''உங்களுக்குப் பயமே இல்லையா...'' கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, ''என்ன தம்பி பயம்? நாளைக்கே நான் செத்தாலும் இங்கதானே வந்து சேரணும்?'' - சட்டென்று பதில் வருகிறது!

''முன்ன எல்லாம் சாவு விழுந்துருச்சுன்னா, அவங்களே வெறகு, டயரு, எண்ணெய், சட்டி, பானைனு தேவையான சாமானையெல்லாம் வாங்கியாந்து கொடுத்துட்டு கூலி மட்டும் கொடுப்பாக. இப்ப எல்லாத்தையும் நீயே வாங்கிக்கனு சொல்லிடறாங்க. அதுக்கும் சேர்த்து நாந்தான் அலையணும். மொதல்ல, செத்தவுக உடம்பு கனமா இல்லையானு கேட்டுட்டு, அதுக்கு ஏத்தாப்புல வெறகை வாங்கியாந்துருவேன். அப்புறம் சைக்கிள் டயர், சீனி, சீயக்கா, எண்ணெய், வறட்டி, வைக்கோல், சட்டி, பானை இதெல்லாம் வாங்கியாந்துருவேன். சாமான் வாங்கியாந்ததும் கீழே சட்டிகளைவெச்சு அதுமேல வெறகை அடுக்கிவெச்சுட்டு உட்கார்ந்திருப்பேன். பாடி வந்ததும் வெறகு மேல எறக்கி வெச்சு அதுமேல வறட்டியையும் அடுக்கணும். அப்புறம் டயரை மேல பரப்பிவெச்சுட்டு, சீயக்கா, சீனி, எண்ணெய் இதெல்லாம் போட்டுருவேன். அப்புறம் இருக்குற வைக்கோலை மேல பரப்பி களிமண்ணைவெச்சுப் பூசிடுவேன். கொள்ளிவெச்சுட்டு போனதும் எரிஞ்சு அடங்குற வரைக்கும் இங்கேயே இருப்பேன்.

கடைசியில் இங்கதான் வரணும் !

சாயந்தரம் 6 மணிக்கு மேலதான் வேலையே வரும். நானும் எரிச்சு முடிச்சுட்டுதான் வீட்டுக்குப் போவேன். வயசானவுகளா இருந்தா ஒண்ணும் தெரியாது. சின்ன வயசா இருந்தா மனசு வலிக்கும். என்னதான் பொணம் எரிக்கிற வேலை பார்த்தாலும் நாலு புள்ளைகளைப் பெத்தவ இல்லையா?'' மரணத்தின் கனம் நிரம்புகிறது வார்த்தைகளில்.