Published:Updated:

வலையோசனை - வேர்கள்

வலையோசனை - வேர்கள்

வலையோசனை - வேர்கள்

வலையோசனை - வேர்கள்

Published:Updated:
வலையோசனை - வேர்கள்

அய்யூர் என்ற குக்கிராமம்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடக்கு தெற்காக நீண்டுகிடக்கும் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி தார் சாலை எப்போதுமே வெறிச்சோடிக்கிடக்கும். இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஒரு முறையே அந்தப் பாதையில் பேருந்துகள் பயணிப்பதைக் காண முடியும். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி பேருந்தில் பயணம் செய்யும்போது, கச்சனத்துக்கு அடுத்த அரை கிலோ மீட்டரில் கொத்தங்குடி குறுக்குச் சாலையைச் சந்திக்க நேரிடும். சாலையின் கிழக்கு ஓரத்தில் காணப்பெறும் சின்னஞ்சிறு பலசரக்குக் கடையுடன் கூடிய ஓர் ஓட்டு வீடு எங்களுக்கு, எங்கள் ஊருக்குப் போக இறங்க வேண்டிய இடத்தை நினைவூட்டும். அந்தப் பழமையான ஓட்டு வீட்டை ஒட்டி, கிழக்கே செல்லும் குறுகிய மணற்சாலையில் அரை கிலோ மீட்டர் தூரம் கடந்தால் கொத்தங்குடி கிராமத்தை அடையலாம். கொத்தங்குடியில் எண்ணி பத்துப் பதினைந்து வீடுகளையே சாலையோரங்களில் காண முடியும்.

வீடுகளைக் கடந்து தெற்கு நோக்கி நகரும்போது சின்னஞ்சிறிய பிள்ளையார் கோயிலையும் அருகே கண்களுக்கு விருந்தூட்டும் ஓர் அல்லிக்குளத்தையும் காண முடியும். குளத்தின் கரையோரம் உயர்ந்து நிற்கும் அரச மரம் சலசல ஒலிகள் எழுப்பி வருவோருக்கு வரவேற்பு அளிக்கும். இப்போது அந்த மணற்சாலை வடக்கு நோக்கித் திரும்பி ஒரு பெரிய அரைவட்டம் அடித்து அய்யூரை அடைகிறது. இடையிலே அது சந்திப்பது என்னவோ ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோயிலையும் சொக்கநாதன் கோயில் என்ற சிறு பகுதியையும்தாம். அந்தக் கிருஷ்ணன் கோயிலும் அதன் முழு உருவம் பிரதிபலிக்கும் சின்ன நீர்நிலையும் எங்கள் ஊர் தாஜ்மஹால் என்றே எண்ணி வியந்து இருக்கிறேன்.

வலையோசனை - வேர்கள்

சொக்கநாதன் கோயில் வழியாக எங்கள் ஊருக்குச் செல்லும் குறுகிய மணற்சாலையில் பெரும்பாலும் வசதியுள்ளோர் வைத்திருக்கும் வில் என்ற கூண்டு வண்டிகளும் விவசாயத்துக்கு உபயோகப்படும் கட்டை வண்டிகளுமே எப்போதாவது செல்வதைக் காண முடியும். கால்நடையாகச் செல்லும் அநேகர் இந்தத் திருப்பத்தில் இருந்து கிழக்கு நோக்கி வயல்களின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து அய்யூரை அடைவது வழக்கம். கண்ணுக்கு எட்டிய தூரம் பரந்து விரிந்துகிடக்கும் வயல்வெளிகள் விளைச்சல் காலங்களில் பச்சைப்பசேல் என்றும் அறுவடைக் காலங்களில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்களுக்கு விருந்தளிக்கும். விவசாயக் காலங்களில் வயல் வரப்புக்களில் நடக்கும்போது காலின் கட்டைவிரலை வரப்புகளில் அழுந்த ஊன்றி அடியெடுத்துவைக்க வேண்டும். இடையிடையே சிறிதும் பெரிதுமான நீரோடைகளைக் கடந்து ஊருக்குள் நுழையும்போது, ஏதோ புதிய சாதனையை நிகழ்த்தியதைப் போன்ற உணர்வைப் பெற நேரிடும்.

 கறுப்பு நிலா!

சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை மணி ஒன்பது இருக்கும். கைபேசி மெள்ள சிணுங்கியது. ''சுப்புணி செத்து போச்சுப்பா...'' - நெஞ்சுக்குழி அடைக்க என் மகள் சவியின் குரல் திணறுகிறது. அப்போது நான் சென்னையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறேன். வார்த்தைகள் வெளிவராமல் துண்டித்த கைபேசியில் மீண்டும் அழைக்கிறேன்.

''எப்படிம்மா?''

''டாடா சுமோக்காரன் அடிச்சிட்டான்...''

நெஞ்சம் திணறத் திணற... என்னை அறியாமல் என் கண்களில் இருந்து நீர் வழிகிறது. அத்தனை தெரு நாய்களிலும் கம்பீரமானது எங்கள் சுப்புணி. வலுவான உடலமைப்பு, மிகுதியான கருமை, கூர்ந்த முகத்தில் லேசான மஞ்சள் திட்டுகள். அதன் நடுவில் பளிச்சென்ற வெண்மை என எவரையும் எளிதில் ஈர்த்துவிடும். எங்களைப் பொறுத்தவரை அது ஒரு கறுப்பு நிலாவாகவே இருந்திருக்கிறது.

வலையோசனை - வேர்கள்

ஆரம்பக் காலங்களில் சுப்பிணி சரியாக சாப்பாட்டு நேரங்களில் மட்டுமே வாசலில் காணப்படும். பொதுவாக தயிரோ பாலோ கலந்த சாதத்தை விரும்பி உண்ணும். சாதம் இல்லாமல் போகும்போது ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொடுப்பது உண்டு. மாமிச உணவும் உண்ணும். ஆனால், தேவைக்கு அதிகமான எந்த உணவையும் அது எடுத்துக்கொண்டதே இல்லை. அதேபோல் வேறு வகை உணவுகளையோ பழைய உணவுகளையோ அது உண்டு பார்த்ததில்லை. மற்ற நாய்களைப் போல அது உணவு வைப்பதற்குள் அவசரப்படுவதில்லை. உணவை வைத்துவிட்டு வந்த பிறகு நிதானமாக எழுந்து சோம்பல் முறித்து நாலாபக்கமும் பார்வையைச் செலுத்தும். மற்ற நாய்களை கர்வத்துடன் பார்த்து அதன் பிறகே நிதானமாக உண்ண ஆரம்பிக்கும். அப்போதெல்லாம் சுப்புணியின் உணவுக்குப் பங்குக்கு வரும் துணிவை வேறு எந்தத் தெரு நாயும் பெற்றிருக்கவில்லை!