Published:Updated:

வாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் !

அ.சாதிக் பாட்ஷா படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

தர்ம சாலை... திருச்சியில் உள்ள ஆதரவற்றவர்களின் அன்புக்குரிய அமைப்பு. 20 ஆண்டுகளாகக் காலை மற்றும் இரவு வேளைகளில் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிவருகிறது இந்த அமைப்பு.

இலவச உணவு என்பதால் ஏனோதானோ என்று கடமைக்காகச் செய்யாமல், பிரியத்துக்கு உரிய ஒரு விருந்தினரை உபசரிப்பதைப் போல் உணவருந்த வருபவர்களை விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். தரமான அரிசியில் சாதம், சாம்பார், பொரியல், வடை, ஊறுகாயுடன் சாப்பாடு தரப்படுகிறது. அமாவாசை மற்றும் சுப தினங்களில் இந்த அயிட்டங்களுடன் கேசரி அல்லது பாயசம் போன்ற இனிப்பு வகைகளும் உண்டு.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமிக் கோயில் தெப்பக் குளத்தின் வடக்குக் கரையில் மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது இந்த அன்னதானம். திருச்சி மாநகரின் சாலை மற்றும் வீதிகளில் அலைந்து திரியும் பிச்சைக்காரர்கள், சாப்பிடுவதற்காகக் கூட சம்பாதிக்க முடியாதவர்கள் என சுமார் 200 பேர் அங்கே வந்து உணவருந்திவிட்டுச் செல்கின்றனர். 'ஐயா, வயிறு நிரம்ப சாப்பிட்டுட்டுப் போங்க’, 'இவருக்கு மறு சோறு போடுங்க’, 'இவருக்கு ஊறுகாய் வையுங்க’, 'ஐயா உங்களுக்கு என்ன வேணும்?’ - இப்படி உணவருந்த வரும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனிக்கிறார்கள். சாப்பிட்டவர்களை அவர்களுடைய தட்டுகளைக்கூட கழுவ அனுமதிப்பது இல்லை இங்கே.

வாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் !

காலையில் கஞ்சியுடன் துவையல் அல்லது ஊறுகாய் வழங்குகின்றனர். குளிர் காலமான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் காவிரி ஆற்றுப் பாலத்தில் அதிகாலை நேரத்தில் வருவோருக்கு சூடான டீ கொடுக்கின்றனர்.

வாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் !

தர்ம சாலையின் நிறுவனரான வடிவேல், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபராக இருந்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இவருடைய தொழிற்சாலை இருந்தது. தீவிர வள்ளலார் பக்தரான இவர், தன்னுடைய தொழிற்சாலையை மூடிவிட்டு முழுநேரமும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் இறங்கிவிட்டார். தன்னுடைய சொத்துகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இவருடைய சேவையைப் பார்த்து சிலர் வழங்கும் நன்கொடைகளைக்கொண்டு இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. சேவை மனப்பான்மைக் கொண்ட வள்ளலார் பக்தர்கள், ஊதியம் பெறாமல் உணவு சமைப்பதிலும் பரிமாறுவதிலும் பங்குபெறுகின்றனர். வடிவேல் தலைமை சமையல்காரராக இருந்து சமைக்கிறார்.

வாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் !

''பல சேவை அமைப்புகள் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றன. அந்த நிலை தர்ம சாலைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என்னுடைய மகன்கள் இருவரும் பெரிய நிறுவனங்களில் நல்ல பதவியில் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களிடம் இருந்து எந்த விதமான உதவியையும் பெறுவது இல்லை. காரணம், அவர்களுக்குச் சேவை மனப்பான்மை இல்லை. அதனால் நானே சேவை மனப்பான்மை உள்ள ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறேன். 'எனக்குப் பிறகு அந்தக் குழு இந்த அறப் பணியைத் தொடர வேண்டும்’ என்று உயில் எழுதிவைத்திருக்கிறேன். வடலூர், காரைக்குடி மற்றும் கோவையிலும் சேவை மனப்பான்மை மிக்க சில அன்பர்களைவைத்து இந்தப் பணியைத் தொடங்கி உள்ளோம். எங்கெல்லாம் மக்கள் பசியுடன் இருக்கிறார்களோ... அங்கெல்லாம் இந்த அறப் பணி தொடர வேண்டும் என்பது என் ஆசை'' என்கிறார் வடிவேல் அடக்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு