##~##

காலை 5 மணிக்கு எல்லாம் வேளாங்கண்ணியில் டிராக் ஷூ, டிராயர்- பனியன் அணிந்து ஓட ஆரம்பிக்கிறார் மெலிந்த தேகம்கொண்ட அந்த இளைஞர். வேளாங்கண்ணி தாண்டி பூவத்தடி, திருப்பூண்டி, விழுந்தமாவடி என்று 10 கிலோ மீட்டரையும் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர்... மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் தங்கவேல். மார்ச் 11-ம் தேதி காஞ்சி

புரத்தில் நடந்த ஐந்து கி.மீ. தூரத்துக்கான மாரத்தான் பந்தயத்தில் வென்ற தங்கப் பதக்கம் இவருடைய  18-வது தங்கப் பதக்கமாம்.

அறை முழுவதும் நிரம்பி வழியும் பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகள் எல்லாம் அவருடைய வெற்றியைப் பறைசாற்றுகின்றன. இப்படிச் சாதனைகள் புரியும் தங்கவேலின் நிலைமையோ சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் தங்கவேல், ஓட்டப் பந்தய வீரருக்கான எந்தவித உணவையும் உண்பது இல்லை. சிறப்புப் பயிற்சிகள் எதையும் மேற்கொள்வதற்கான வசதி இல்லை. தகவல் வந்தால் போய் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். இல்லை என்றால், அண்ணன் தம்பிகளோடு சேர்ந்து கடலில் மீன் பிடிக்கப் போகிறார். இதுதான் இவரின் குடும்பச் சூழல்.

கடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் !

நாகை மாவட்டம் விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் எட்டுப் பேரில் ஒருவராகப் பிறந்தவர் தங்கவேல். பள்ளியில் படித்துக்கொண்டே அப்பாவோடு தொழிலுக்குப் போனார் தங்கவேல். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, முழு நேரமும் அதுவே தொழில் ஆகிப் போனது. எட்டுப் பேரும் சேர்ந்து பாடுபட்டதால், பிழைப்பு பஞ்சம் இல்லாமல் நடந்தது. இந்த நிலையில்தான் சுனாமி வந்தது. பல்லாயிரக்கணக்கான மீனவர்களைப் பலி வாங்கினாலும், அது தங்கவேலுக்கு மட்டும் நன்மையே செய்தது.

கடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் !

''அரசுத் துறைகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் எங்கள் மீனவக் கிராமங்களில் குவிந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இருந்தன. அப்போதுதான் யார், யாருக்கு என்னென்ன திறமைகள், யாருக்கு எதில் ஈடுபாடு என்பது குறித்து அரசு கணக்கு எடுத்தது. நான் ஓட்டப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டவன் என்பதைக் கண்டறிந்து, 'மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்’ என்னை நாகைக்கு அழைத்துச் சென்று, மைதானத்தில் ஓடிப் பழகவைத்தது. அதற்குப் பிறகு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடந்த நீண்ட தூரப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற்றேன். அதனால், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்கே பயிற்சிகளை மேற்கொள்ளவைத்தது. அப்போதுதான் சென்னையில் நடந்த 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் பங்கேற்று, உலக அளவில் 12-வது இடமும் இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் அடைந்தேன். அதற்குப் பிறகு நடந்த 10 கி.மீ. தூரப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன். அங்கே தங்கி இருக்கும் காலத்தில் எனக்கு அலுவலகத்தில் வேலையும் கொடுத்து மாதம் 2,600 ரூபாய் சம்பளமும் கொடுத்தார்கள். ஆனால், வீடு இருக்கும் சூழ்நிலையில் நான் கடலுக்குப் போகாமல் சென்னையில் போய் உட்கார்ந்து இருப்பதை யாரும் விரும்பவில்லை. அதனால் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன். அதில் இருந்து கடலுக்குப் போவது, போட்டி என்று அழைத்தால் போய் ஓடுவது என்பதுதான் என் நிலைமை'' என்கிறார் தங்கவேல்.

கடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் !

தேசிய அளவில் நடந்த எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏதாவது ஒரு பரிசைப் பெற்றுக்கொண்டுதான் திரும்பி இருக்கிறார். இதுவரை 42 கி.மீ. தூரப் போட்டிகளில் 18 முறை கலந்துகொண்டு இருக்கிறார். மாநில அளவில் 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஓடி, பெரும்பாலானவற்றில் பரிசுகளை வென்றிருக்கிறார். தகுந்த ஊக்கமும் உணவும் இருந்தால் ஒலிம்பிக்கிலும் ஓடத் தயாராக இருக்கிறார்.

கடலுக்குச் செல்லும் தங்கவேலுவைக் கரையேற்ற யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு