Published:Updated:

என் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் !

திருவெண்காடு த.அகரமுதல்வன்கரு.முத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

எழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான பேராசிரியர் அகரமுதல்வன், தன்னுடைய சொந்த ஊரான திருவெண்காடு பற்றிய நினைவு களைப் பகிர்ந்துகொள்கிறார்.

''வயல்களும் மரங்களும் சூழ்ந்த மருத நில ஊர்தான் திருவெண்காடு. வெண்காட்டீசர் வீற்றிருக்கும் இந்தக் கோயிலை மையமாகக் கொண்டுதான் ஊரே அமைந்து இருக்கிறது. மும்மூர்த்திகள், மூன்று தீர்த்தங்கள், மூன்று விருட்சங்கள் என்று எல்லாமே மூன்று மூன்றாக அமைந்து இருக்கும் பெருமை, எங்கள் ஊர் கோயிலுக்கு மட்டும்தான் உண்டு. இங்கு இருக்கும் ஆலமரத்துக்கு வயது 2,000 என்றாலே, எங்கள் ஊரின் தொன்மை புரியுமே!

உலகத்தின் மிகச் சிறந்த சிற்பங்களாகக் கருதப் படுகிற ரிஷபாந்தி மற்றும் கல்யாணசுந்தரர் சிற்பங் கள் எங்கள் ஊரில்தான் கண்டெடுக்கப்பட்டன. எங்கள் ஊரில் சுதை வேலைப்பாடுகளில் நிபுணத்து வம் பெற்ற சிற்பிகள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் உலகம் முழுவதும் சென்று சிற்பங்கள் செய்து தருகிறார்கள்.

என் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் !

எங்கள் ஊரில் பெண் எடுத்த, பெண் கொடுத்த பிரபலங்களின்பட்டிய லும் பெரிது. 'நாகஸ்வர சக்ரவர்த்தி’ திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, தன்னுடைய சகோதரிகள் இருவரையும் இங்குதான் திருமணம் செய்துகொடுத்தார். நீதிக் கட்சியின் தலைவர் பி.டி.ராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகே சன், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஆகியோர் எங்கள் ஊரின் டி.ஜி.பாலசுப்ர மணியத்தின் சகோதரிகளைத்தான் திரு மணம் முடித்தார்கள். இப்போதைய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எங்கள் ஊர் மாப்பிள்ளைதான்.

என்னுடைய சிறு வயதில் கோயிலில் தான் எனக்கு உத்தியோகம். எனக்கு மட்டும் அல்ல; எங்கள் ஊரைச் சேர்ந்த பலரும் கோயிலில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் கோயில் திருவிழாதான் எங்களின் மிக முக்கியமான பண்டிகை. பொழுது போக்கு என்றால் ஊரின் மையத்தில்இருக் கும் டென்ட் கொட்டகைதான். தியாகராஜப் பாகவதர் படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

என் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் !

ஊரில் கீழ வீதியில் ஐயர் காபி கடை, மேல வீதியில் செட்டியார் காபி கடை என்று இரண்டு கடைகள் இருந்தன. மாலையில் அவை இயங்காது. ஆனால், சினிமா கொட்டகைக்கு முன்பு இருக்கும் இரண்டு டீக்கடைகள் இரவுக் காட்சிநேரத் திலும் திறந்திருக்கும். டீ குடிக்க வேண்டும் என்றால் அங்குதான் செல்ல வேண்டும்.

அந்தக் காலத்தில் ஊரைச் சுற்றிலும் கோயிலுக்குச் சொந்தமான இலுப்பை மரத் தோப்புகள் அதிகம் இருந்தன. அந்தத் தோப்புகளில் இருந்து  பறவைகள் இலுப்பைக் கொட்டைகளை எடுத்துவந்து, யார் வீட்டிலாவது போட்டுவிட்டால்கூட, அதை எடுத்துக்கொண்டு போய் மக்கள் கோயிலில் சேர்த்துவிடுவார்கள்.

என் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் !

அப்போதெல்லாம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில்தான் ஊருக்குள் பேருந்து வரும். பேருந்து இங்கு வந்து திரும்பும் போது, கரி அள்ளிப்போட்டு கம்பியால் சுற்றி அதனை இயக்குவதை மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்போம். அது போகும்போது வெகுதூரம் வரை பின்னாலேயே ஓடுவோம். அதற்காகப் பலமுறை எங்கள் ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருக்கிறோம். அந்தக் காலத்தில் பூம்புகார் நகரின் மையப் பகுதியாக விளங்கிய எங்கள் ஊரில் இருந்துதான், துறைமுகமான நெய்தவாசலுக்குச் செல்ல முடியும். அந்தப் பாதை இன்றும் ராஜராஜ சோழப் பெருவழி என்று அழைக்கப்படுகிறது.

இப்போதும்கூட எல்லாவற்றிலும் தன்னிறைவுபெற்ற ஊராகத்தான் இது இருக்கிறது. இது ஊரல்ல... வரலாற்றின் மிச்சம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு