Published:Updated:

இது திருச்சி இரவு !

Trichy
Trichy

ஆ.அலெக்ஸ் பாண்டியன் படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

சில்லென்ற காற்று, இரைச்சல் அற்ற சாலைகள் என இரவுப் பொழுதுகள் எப்போதும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவை!

திருச்சி காந்தி மார்க்கெட்டின் முகப்பில் இருக்கிறது 'டைமன்ட் ஜூப்ளி’ இரவு நேர மார்க்கெட். இதன் வேலை நேரமே இரவு 10 மணியில் இருந்து காலை 8 மணி வரைதான். பகல் பொழுதுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் வியாபாரிகளின் கரகர குரல் காற்றில் நிறைகிறது. ''திருச்சியைச் சுற்றி இருக்கிற கிராமங்கள்ல விளையற காய்கள் எல்லாம் நைட்டே இங்கே வந்துடும். இங்கே இருந்துதான் அடுத்த நாள் மெயின் மார்க்கெட்டுக்கு வியாபாரத்துக்குப் போகும். அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர்னு எல்லா ஊருக்கும் இங்கே இருந்துதான் காய்கறிகள் போகுது'' -மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் சுரேஷ் சொல்லும்போது இரவு மணி 11-ஐத் தாண்டி இருந்தது.

இது திருச்சி இரவு !

ஓயாமல் நாய்கள் குரைத்துக்கொண்டே இருக்க... கொஞ்சமும் அதை சட்டை செய்யாமல் போஸ்டர் ஒட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் அன்பழகன். ''15 வருஷமா போஸ்டர் ஒட்டுறேன். என்னை மாதிரி 15 பேர் திருச்சியில போஸ்டர் ஒட்டுற தொழில்ல இருக்காங்க. ஆரம்பத்துல சினிமா போஸ்டர்தான் ஒட்டிக்கிட்டு இருந்தேன். இப்ப கட்சி போஸ்டர் ஒட்டுறேன். 10 மணிக்கு ஆரம்பிச்சா 4 மணிக்குள்ளாற கடகடன்னு 300 போஸ்டர் ஒட்டிடுவேன் சார்'' என்று பேசிக்கொண்டே போஸ்டரை கச்சிதமாகச் சுவற்றில் ஒட்டுகிறார் அன்பழகன்.

இது திருச்சி இரவு !

அப்படியே பேருந்து நிலையம் பக்கம் நகர்ந்தால், பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பேருந்து நிறுத்தங்கள் எல்லாம் ஆட்டோ நிறுத்தங்களாகி இருக்கின்றன. ''வாடகை ஆட்டோதான் சார் ஓட்டுறேன். பகல்லயும் ஸ்டாண்ட்லதான் இருப்பேன். நைட் சவாரி பார்த்தா... 10, 20 கூட கேட்டு வாங்கலாம். ஓனருக்கு வாடகை கொடுக்கணும்ல? அஞ்சு சவாரி வந்தாலே அது பெரிய விஷயம் சார். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. அவங்களைக் கரை சேர்க்கணும்ல?''- என்று பொறுப்போடு  சஞ்சீவன் சொல்லும்போது இரவு மணி 1.

திடீரென சாலைகளில் ஆங்காங்கே மனிதத் தலைகளும் பைக்குகளும் படருவதைக் காண முடிகிறது. 'செகன்ட் ஷோ’ சினிமா பார்த்த கூட்டம் அது. ''வீடு கே.கே.நகர் சார். ஃப்ரெண்ட்ஸுகளோட படத்துக்கு வந்தேன். வீட்டுல சொல்லிட்டுதான் வந்தேன். நைட் சர்வீஸ் பஸ் வரும் சார். போயிடுவோம்''-  போலீஸ் பேட்ரோல் வண்டி அருகில் நின்று, ஜன்னல் வழியே படம் பார்த்த டிக்கெட்டைக் காட்டுகிறார்கள் கல்லூரி மாணவர்கள் சிலர்.

இது திருச்சி இரவு !

கையில் குச்சியுடன், தலையைச் சுற்றி மப்ளர் கட்டிக்கொண்டு சற்றே கண் அசந்து தலை சாயும் காவலாளிகள், சிறிது சத்தம் வந்தாலும் விழித்துக்கொள்கிறார்கள். ''ஆரம்பத்துல இருந்தே வாட்ச்மேன் வேலைதான் பார்க்குறேன். நைட் 10 மணிக்கு வந்தா, காலைல 6 மணிக்குத்தான் கிளம்ப முடியும். பையன் திருப்பூர்ல வேலை பார்க்குறான். பொண்ணு இந்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை எழுதுது. இந்த வேலை பார்த்தேதான் படிக்கவெச்சேன். என் சர்வீஸ்ல ஒரு பய திருடினது இல்லை'' -பீடிப் புகையை லாகவமாக உள்ளிழுத்து காற்றில் கரையவிடுகிறார் காவலாளி தங்கமணி.

கூரியர் வேலைகள், டேட்டா என்ட்ரி வேலை, கால்சென்டர்... என யுவன், யுவதிகள் சிலரின் பொழுதும் இந்த இரவிலேதான் இயங்குகிறது. ''நான் தேனி மாவட்டம். இங்கே கல்லூரியில படிக்கிறேன். காலேஜ் ஃபீஸ் வீட்டுல கட்டிடுவாங்க. ரூம் வாடகை, சாப்பாடு எல்லாத்தையும் கூரியர் வேலை செஞ்சு நான்தான் பார்த்துக்குறேன்''- பெருமிதமாகச் சொல்கிறார் கல்லூரி மாணவர் ஆனந்த்.

இது திருச்சி இரவு !

''சுக்கு காபி...'' - எனக் கம்மிய குரலில் அருகில் குரல்! ''அஞ்சு ரூபா சார்...'' என்று சொல்லியபடியே இரண்டு கப்களில் காபியை நீட்டுகிறார். ''நைட் ஃபுல்லா இந்த ஏரியாவுல காபி விற்பேன். இந்த சுக்கு காபி வீட்டுல நானே செய்றது. விடிஞ்சா அதோ... அந்த டீக் கடையில வேலைக்குப் போயிடுவேன்'' என்பவர் முகத்தில் அவ்வளவு களைப்பு.

'இரவினில் ஆட்டம்... பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் உலகம்... எங்கள் உலகம்...’ - எஃப்.எம். பாடல் காற்றில் பரவ... இரவு நேர டீக் கடை ஒன்றில் கூட்டம் கும்மியடிக்கிறது.

இது திருச்சி இரவு !

இரவு மட்டும் அல்ல; அதோடு வாழும் இந்த அற்புத மனிதர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு