Published:Updated:

அறிவுப் பசி மட்டுமே மிச்சமிருக்கு !

எஸ்.சுமன் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

 ##~##

திருச்சியின் பரபரப்பான மத்தியப் பேருந்து நிலையப் பகுதி யில் இயங்கும் பள்ளி அது. பள்ளி தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருக்க, பிஞ்சுக் குழந்தைகள் சந்தோஷமாகத் துள்ளி விளையாடும் நேரம். தன்னுடைய அறையில் இருந்துநோட்டம் விட்டுக்கொண்டு இருந்த தலைமையாசிரியை விசாலாட்சி, குழந்தைகளின் குதூகலத்தில் ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்துவிசார ணையில் இறங்குகிறார். விளையாட்டு வேளை மட்டுமல்ல... பள்ளிப் பாட வேளையிலும் பிள்ளைகள் அடிக்கடி சோர்ந்து விழுவதாக மற்ற ஆசிரியைகள் சொல்ல... அவருக்குப் பகீர் என்கிறது. மோகனா என்ற ஏழு வயசு மொட்டு உண்மையைப் பட்டென்று போட்டு உடைக்கிறாள். ''மிஸ், எங்கள்ல யாருக்குமே காலை சாப்பாடு கிடைக்கிறதே இல்லை மிஸ்!''

அறிவுப் பசி மட்டுமே மிச்சமிருக்கு !

வயிற்றுக்கே உணவு இல்லாத குழந்தைகளின் செவிக்கு எத்தனை போதித்தாலும் போய்ச் சேராது என்ற யதார்த்தத்தை உணர்ந்த விசாலாட்சி, துணிந்து ஒரு காரியம் செய்தார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்படி அவர் கிளப்பிய பொறி பற்றிக்கொண்டதில் இன்று திருச்சி வட்டாரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குழந்தைகளின் பசித் தீ அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களின் சுய முயற்சியாலேயே அணைக்கப்பட்டுவருகிறது.

அறிவுப் பசி மட்டுமே மிச்சமிருக்கு !

திருச்சி சேவா சங்கம் தஞ்சம்மாள் நினைவு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாகப் பணிக்குச் சேர்ந்து, தலைமை ஆசிரியையாகப் பணியைத் தொடரும் விசாலாட்சிக்கு, ஆசிரிய சேவையில் இது 35-வது வருடம். ''திருச்சியோட இதயப் பகுதி என்பதால சுற்று வட்டார ஏரியாக்களில் எல்லாமே கான்வென்ட் பள்ளிகள்தான். அங்கே சேர முடியாத ஏழைக் குழந்தைகள் இங்கே வந்து சேருவாங்க. ஹோட்டல் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள், கூலித் தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள்... இவர்கள்தான் இந்தக் குழந்தைகளின் பெற்றோர். தங்கள் பிழைப்புக்காக அதிகாலையில் வாரி சுருட்டிக் கொண்டு ஓடுபவர்களுக்கு, பிள்ளைகளுக்குக் காலை உணவைத் தயார் செய்ய ஏது நேரம்? இதனால கொலைப் பட்டினியோடு பள்ளி வரும் குழந்தைகள், மத்தியான சத்துணவு வரைக்கும் குழாய் நீரைக் குடிச்சுட்டு பழியாக்கிடக்கும். இந்த உண்மை தெரிஞ்சதும், அதிர்ந்து போயிட்டேன். பள்ளிக்கு விசிட் வரும் கல்வி அதிகாரிகள்கிட்ட இதைச் சொல்லி புலம்பினப்போ, 'ஏன் நீங்களே குழந்தைகள் பசியைப் போக்க முயற்சி செய்யக்கூடாது’னு கேட்டாங்க. அதைப் பொறியாவெச்சுக்கிட்டு பணியாற்றினதுல, இன்னைக்கு எங்க பள்ளியில சுமார் 120 குழந்தைகள் தினமும் காலை பசியாறுது'' என்கிறார்.

அறிவுப் பசி மட்டுமே மிச்சமிருக்கு !

பிஞ்சு வயிறுகள் பசியாற, மாலை தோறும் வீதி வீதியாகக் கடை கடையாக உடன் பணியாற்றும் ஆசிரியைகள் புடை சூழ அலைந்து திரிந்திருக்கிறார் விசாலாட்சி. பெரும்பாலானவர்கள் ''நாங்க

அறிவுப் பசி மட்டுமே மிச்சமிருக்கு !

கோயிலுக்கு மட்டும்தான் கொடுக்கிறது வழக்கம்'' என்று தட்டிக் கழிக்க முயல, ''ஐயா இதுவும் கோயில்தாங்க. குழந்தை தெய்வங்கள் உலவும் அறிவுக் கோயிலுங்க'' என்று பேசி அவர் களைச் சம்மதிக்க வைத்திருக்கிறார். இந்த அணுகுமுறை, ஆரம்பத்தில் கிலோ அரிசி தேற்றவே பெரும்பாடுபட்ட நிலையை மாற்றி அரிசி, பருப்பு, காய்கறி, விறகு இத்யாதிகளை ஆளாளுக்கு ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறது.

''இன்னைக்கு  எங்க பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவுப் பசி மட்டுமே மிச்சமிருக்கு'' - சந்தோஷமாகச் சொல்லும் விசாலாட்சி, தன்னுடைய கல்வி சேவைக்காகச் சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கினார். சென்ற வருடம் ஜனாதிபதியின் தேசிய நல்லாசிரியர் விருதையும் பெற்றுவிட்டார். விருதுகள் கௌரவம் பெறட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு