Published:Updated:

என் ஊர்

வலவு தெருவும்... அந்தப்புரமும் !க.ராஜீவ்காந்தி படங்கள்: கே.குணசீலன்

து.கிருஷ்ணசாமி வாண்டையார்
பூண்டி

##~##

'இந்தப் பூண்டி கிராமம் ராஜராஜசோழன் காலத்தில் புஷ்பவனம் என்ற பெயரால் வழங்கப்பட்டது. பூக்கள் மண்டிக்கிடந்த மண்... அதாவது, பூமண்டி என்பதுதான் நாளடைவில் பூண்டி ஆனது'' -ஊருக்கான பெயர் காரணத்தோடு தொடங்குகிறார் துளசி ஐயா வாண்டையாரின் புதல்வரான கிருஷ்ணசாமி வாண்டையார்.

''எங்கள் எஸ்டேட்டின் கீழ் மொத்தம் 18 கிராமங்கள் இருந்தன. அவற்றுக்கு எல்லாம் தலைக் கிராமம்தான் பூண்டி. எங்க தாத்தாவும் பெரிய தாத்தாவும் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தனர். சுதந்திரத்துக்குப் பின் ஒருமுறை காமராஜர் இருவரையும் பார்த்து, 'நாம் சுதந்திரம் பெற்றது பெரிதல்ல; அந்தச் சுதந்திரத்தைக் காக்க இந்த நாட்டுக்கு அறிவுச் செல்வம் வேண்டும். அதற்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்’ என்றாராம். இதற்காகவே பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைப் பார்த்துவிட்டு வந்து அவற்றைப் போலவே 1956-ல் உருவாக்கப்பட்டதுதான் பூண்டி-புஷ்பம் கல்லூரி.

கல்வி தானத்தைப் போலவே சிறந்தது அன்ன தானம்.

அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்து இன்றும் நாடிவருபவர்களுக்கு அன்ன தானம் வழங்கிவருகிறோம். இதைப் போன்ற பாரம்பரியக் குடும்பத்தில் வந்ததால், நான் இழந்தது, என் சிறுவயது குறும்பு வாழ்க்கையை. ஏனென்றால் ஏழு வயது வரை வீட்டிலேயே  பாடம் படித்தேன். அதன் பிறகு தஞ்சாவூரில் தூய இருதயனார் பள்ளியில் படிப்பு. குதிரை வண்டியில் செல்லும்போது எல்லாம் 'நம்மால் சாதாரண மனிதர்கள் போல வாழ முடியவில்லையே’ என்ற ஏக்கம் எழும். அதனால், வீட்டில் யாருக்கும் தெரியாமல் சைக்கிளில் நண்பர்களை அழைத்துக்கொண்டு 6 கி.மீ. தொலைவில் உள்ள குமுளக்குழி முனியாண்டவர் கோயிலுக்குப் போய்விடுவேன். அதே போல ஆற்றில் குளிக்கப்போய் நேரம் போவதே தெரியாமல் நீச்சலடித்து அம்மா கையால் அடி வாங்கியதும் உண்டு.

என் ஊர்

ஊரின் பிரதானத் தொழில் விவசாயம் மட்டும்தான். தாத்தா காலத்தில் எல்லாம் யானை கட்டித்தான் போரடிப்போம். மூன்று போகமும் நெல் விளைச்சல் இருக்கும் என்பதால், வருஷத்தில் 365 நாட்களும் வேலை இருக்கும். வைகாசி மாசம் நடக்கும் புஷ்பவனேஸ்வரர் கோயில் திருவிழாவின்போது எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். 11 நாள் ரொம்ப விமர்சையாக நடக்கும் அந்தத் திருவிழா. இந்த ஊருக்குக் கீழே வரும் 18 கிராம மக்களும் இங்கேதான் அப்போது ஒன்றுகூடுவார்கள் அந்தத் திருவிழாதான் எங்களுக்குப் பெரிய பொழுதுபோக்கு.

திருவிழாவின்போது இரவுகளில் 15 அடி உயரத்துக்குப் பூத வேஷம் போடுவார்கள். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். கண்விழித்து விடிய விடியப் பார்ப்போம். நாங்கள் இருக்கும் தெருவுக்கு வலவு தெரு என்று பெயர். ஆண்கள் எல்லோரும் அவர்களுக்கு என்று இருக்கும் பங்களாவில் இருக்க வேண்டும். அதே மாதிரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் தங்குவதற்கு தனியாக இன்னொரு பங்களா இருக்கும். அதை அந்தப்புரம் என்று சொல்வார்கள். பாட்டியில் இருந்து அம்மா, பெண், பேத்தி எல்லோருமே பகல் முழுவதும் அங்கேதான் இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தை எல்லாம் இன்றுவரை எங்கள் அப்பா, அம்மா மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

என் ஊர்

பூண்டி புஷ்பம் கல்லூரிக்காக, தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம் வரைக்கும் சிமென்ட் ரோடு போட்டுத் தந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர். 1960-களில் போடப்பட்ட ரோடு 1985 வரைக்கும் இருந்தது. அதைப் போல், கல்லூரிக்காகவே வந்ததுதான் எங்கள் ஊர் குடிகாடு ரயில்வே ஸ்டேஷன்.

என் ஊர்

வணிக நோக்கத்தை பெரிதாக நினைத்து, சேவை செய்வதில் சின்ன குறைகூட வந்துவிடக்கூடாது என்பதனால்தான் பொறியியல் கல்லூரி தொடங்க எவ்வளவோ வற்புறுத்தல்கள் வந்தும்கூட, நாங்கள் தொடங்க மறுத்துவிட்டோம். ஏனென்றால் வசதி, வாய்ப்பு, பதவியால் வருகிற மரியாதை கால ஓட்டத்தில் போய்விடும். ஆனால், கல்வியையும் அன்னத்தையும் தானமாக வழங்குவதால் கிடைக்கும் மரியாதை என்றும் போகாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு