வலையோசை - காலம்

 பெண்களும் சாதியமும்!

##~##

காதல் வயப்படும் உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றாலும் ஆண், காதல் வயப்படுவதற்கும்; பெண், காதல் வலையில் விழுவதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. ஆணுக்குக் காதலிக்க ஒரு பெண் அழகாக இருந்தால் போதும். 'அழகு’ என்பது ஒரு காரணம் என்றாலும், எந்த ஆணும் கண்டதும் காதல் என்று ஒரேயடியாக விழுவது இல்லை. 90 சதவிகித காதலில், ஆண் தன் துணையை தன்னைவிட உயர்ந்த சாதியில் அல்லது தன்னுடைய சாதியில் உள்ள பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறான். சில ஆண்களுக்குப் பெண் தன் சாதியைச் சேர்ந்தவள், அதுவும் அழகானவள் என்றால் உடனே காதல் வருவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் இருக்கும்.

ஆனால், தன்னைக் காதலிக்கும் ஆணின் சாதியைப் பார்த்து காதலிக்கும் பெண்கள் 10 சதவிகிதத்துக்கும் குறைவு. 90 சதவிகிதப் பெண்கள் ஓர் ஆண் தன்னை விரும்பும்போது, அவன் அவளைக் கவர்ந்து இருந்தாலே போதும். எந்தச் சாதியைச் சேர்ந்த ஆணையும் ஒரு பெண் விரும்பிவிடுவாள். சாதி, மத வேற்றுமையைத் துணிந்து தாண்டுவது பெண்கள்தான்!

வலையோசை - காலம்

          நட்சத்திரங்கள் நிரம்பிய வானம்!

பாலித் தீவினர் மார்ச் மாதத்தில் ஒரு நாளை 'அமைதி நாள்’ என்று விடுமுறை தினமாக வழக்கில் வைத்திருக்கிறார்கள். அன்று மின்சார விளக்குகள் மற்றும் மின்சாரம் தொடர்பாக எதையும் இயக்க மாட்டார்களாம். சாலையில் போக்குவரத்து என்பதே இருக்காது. ஆனால், அவசரத் தேவை என்பதற்காகக் காவல் துறை, மருத்துவமனை மற்றும் தீயணைப்புத் துறை மட்டுமே இயங்கும். அன்று 24 மணி நேரத்துக்கு பாலி டென்பசார் விமான நிலையத்தில் இருந்து எந்த ஒரு விமானமும் கிளம்பாது. எந்த ஒரு விமானமும் தரையிறங்காது. உலகில் எந்த ஒரு விமான நிலையத்தின் செயல்பாடுகளும் முற்றிலுமாக நின்று போக இயற்கைப் பேரிடர், பனிமூட்டம், பனிப் பொழிவு அல்லது தீ விபத்து ஆகியவைதான் காரணங்களாக இருக்கும். ஆனால், பாலித் தீவில் கடைப்பிடிக்கும் அமைதி நாளுக்காக, விமான நிலையமே மூடி இருப்பது பாலித் தீவின் வியப்புகளுள் ஒன்று.

வலையோசை - காலம்

ஏற்கெனவே முந்தைய நாள் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனமும், விருந்தினர் விடுதிகளும் முன்கூட்டியே அமைதி நாளைப் பற்றி சொல்லிவிடுவார்கள். விரும்பினால் விடுதிக்குஉள்ளேயே தியானம், யோகா கற்றுக்கொடுப்பார்களாம். அதற்கு ஒப்புக்கொண்டு விருப்பம் உள்ள சுற்றுலாவாசிகளே அன்று அங்கு இருப்பார்கள். அமைதி நாள் அன்று வானம் மிகத் தெளிவாகத் தெரியும், நட்சத்திரங்கள் நிறைந்து காணப்படும். ஏனெனில் இரவில் மின் விளக்குகளே இல்லாததால், பாலித் தீவில் இருந்து பார்க்கப்படும் வானத்தின் கருமை, நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் என்கிறார்கள்!

   இந்தியாவில் இருந்து பிரிந்ததா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவில் இருந்து பிடுங்கிக்கொள்ளப்பட்டப் பகுதி என்கிற கருத்தியல், இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது. பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கையைத் தவிர்த்து, மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை. பல குறுநில மன்னர்கள் ஆட்சி செலுத்திவந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இல்லாமல் இருந்தது. ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்து இருந்தால், மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவுக்குள் நுழைந்து இந்தியாவைக் கைப்பற்றி இருக்க முடியாது. தவிர இஸ்லாமிய, மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலம் வெறும் 200 ஆண்டுகள்தான். அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.

வலையோசை - காலம்

இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித் தனிப் பகுதிகளாக அறியப்படுகிறது. பாகிஸ்தான் பாடத் திட்டத்தில் 'பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும் பகுதி நிலப் பகுதிதான்... இந்தியா’ என்று பாடம் இருந்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா?

    திருநங்கைகள் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும்!

உலக முன் மாதிரியாகத் தமிழக கிறிஸ்துவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர். இது உண்மையில் பாராட்டக் கூடியதும், பெருமைப்படக் கூடிய ஒன்றும் ஆகும். அதையே ஏன் இந்து மதத்தினருக்கும் பரிந்துரைக்கக்கூடாது?

வலையோசை - காலம்

திருநங்கைகளை அர்ச்சகராக ஆக்குவதால் ஏற்கெனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அந்தப் பணிக்குக் கொண்டை போட்டுக்கொள்வது எளிது. மூன்று நாள் வீட்டு விலக்கு, மாதவிலக்கு எல்லாம் அவர்களுக்குக் கிடையாது என்பதால் இந்து மதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது. எந்த ஓர் ஆகம விதிகளிலும் திருநங்கை அர்ச்சகராகும் அல்லது பூசாரி ஆவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன்.

திருநங்கைகளை இறைப் பணிக்குத் திருப்புவதன் மூலம், நமது சமூகம் அவர் களுக்கு முன்பு செய்துவந்த கொடுமைகளில் இருந்து சாப விமோசனம் பெறும். பாவப் பட்ட பாலியல் தொழிலில் இருந்து அவர்களும் விடுதலையாவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு