Published:Updated:

மாமா... மாப்ளே!

தடகள அதகளம்

மாமா... மாப்ளே!

தடகள அதகளம்

Published:Updated:

80 வயதைக் கடந்தவர் பளு தூக்குகிறார்; தடகளத்தில் பதக்கங்களைக் குவிக்கிறார் என்றெல்லாம் வெளிநாட்டுச்செய்தி களில்தான் பார்த்திருப்போம். திருச்சியிலும் ஒருவர் அதைப் போல அசத்திக்கொண்டுஇருக்கி றார். அதுவும் தனி ஆளாக அல்ல; குடும்பத்துடன்!

மாமா... மாப்ளே!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடியைச் சேர்ந்தவர், 89 வயதான சவேரியார். 67 வயதான அவருடைய மருமகன் அன்பானந்தம், 62 வயதான மகள் அந்தோணியம்மாள் சகிதம் தடகள போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளுகிறார் என்கிற ஆச்சர்ய செய்தி கேட்டு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அவர் களைச் சந்தித்தேன்.

''மாமாவுக்கு (சவேரியார்) வயசாயிடுச்சு. காது சரியாக் கேட்காது. அதனால, நானே பேசுறேன். முதல்ல என்னைப் பற்றி சொல்றேன்'' என்றபடி அவருடைய மருமகன் அன்பானந்தம் முதலில் பேச ஆரம்பித்தார். இவர் திருச்சி ஈ.வெ.ரா.கல்லூரியின் முன்னாள் முதல்வரும்கூட.

''எனக்குச் சொந்த ஊர் லால்குடி பக்கம் பூவாளூர். பள்ளி நாட்கள்ல ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்னு எல்லாப் போட்டிகளிலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்குவேன். பள்ளியில் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் நான்தான். கல்லூரிக்கு வந்த பிறகு வாலிபால், பேஸ்கட் பால்னு நிறைய விளையாட்டுக்கள் கத்துக்கிட்டேன்.

கல்லூரி படிப்பு முடிஞ்ச பிறகு கல்லூரிப் பேரா சிரியர், முதல்வர்னு பொறுப்புகள் வரவும்,விளை யாட்டுல முழுசாக் கவனம் செலுத்த முடியலை. அப்புறம் ஒரு கட்டத்துல திரும்பவும் விளையாட் டைக் கையில் எடுத்து போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். என் மாணவர்கள் என்னைஆச்சர் யத்தோடும் பெருமையோடும் பார்த்தாங்க. பணி ஓய்வுபெற்றதும் திரும்பவும் விளையாட்டுல முழு வீச்சுல இறங்கிட்டேன். 2009-ல தாய்லாந்துல நடந்த ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் சங்கிலிக் குண்டு எறிதல் போட்டியில் தங்கமும், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வாங்கினேன். போன வருஷம் தூத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான      « பாட்டிகளில் சங்கிலிக் குண்டு, வட்டு, குண்டு எறிதல்னு மூணு போட்டியிலும் தங்கம் வாங்கி னேன். பெங்களூருவுல இந்த வருஷம் நடந்த தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துகிட்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வாங்கிட்டு வந்திருக்கேன்'' என்று பதக்கப் பட்டியல் வாசித்தவர், அடுத்து சவேரியார் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

''சவேரியார் என்னோட தாய் மாமா. அவரோட பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். அவரு ஒரு முழு நேர விவசாயி. என்னோட சின்ன வயசுல இருந்து அவரு வயல் வரப்புல ஓடியாடி சுறுசுறுப்பா வேலை செய்யுறதைப் பார்த்து இருக்கேன். அதனால, அவரையும் ஏன் தடகளத்துல கொண்டுவரக் கூடாதுனு தோணுச்சு. உடனே அவர்கிட்ட சொல்லி கிரவுண்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட மாமா பிச்சு உதறிட்டாரு.

சங்கிலிக் குண்டு எறிதலில் அவரை அடிச்சுக்க ஆள் இல்லை. மாநில, தேசிய, ஆசிய அளவுல ஏகப்பட்ட பரிசு களை வாங்கிட்டாரு. லேட்டஸ்டா நடந்த பெங்களூரு போட்டியில ஒரு தங்கம், இரண்டு வெள்ளி வாங்கி னார்'' என்று பேசி முடித்தார்.

சவேரியாரின் காதருகே சென்று பேச்சுக்கொடுத்தேன். ''நமக்கு ஆரம்பத்துல இருந்தே விவசாயம் தான். ஊருல காடு, கரையெல்லாம் இருக்குது. அப்போ இருந்தே கம்பு, சோளம் கஞ்சிதான் சாப்பாடு. ஏதோ அவங்க சொல்றபடி செஞ்சேன். அவ்வளவுதான்'' என்கி றார் வெள்ளந்தியாக.

இவருடைய மகள் அந்தோணியம்மாளும் சங்கிலிக் குண்டு எறிதலில் பதக்கங்களை வென்றவர்தான்.

சாதனை குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்!

மாமா... மாப்ளே!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism