Published:Updated:

இவர் சென்டம் வாத்தியார் !

நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: ர.அருண்பாண்டியன்

##~##

பள்ளியின் தலைமையாசிரியர் வந்து விட்டார் என்றால், மாணவர்கள் பதறிய டித்துக்கொண்டு வகுப்பறைக்குள் ஓடுவதைத்தான் உங்களில் பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். ஆனால், குளித்தலை அருகே நெய்தலூர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜைப் பார்த்தால், ஜாலியாக மடியில் ஏறி உட்கார்ந்துப் பேசுகிறார்கள்!

'என் விகடன்’ வாசகர் கிருஷ்ணன் சொன்ன தகவலைக் கேட்டு, ஜெயராஜை சந்திக்கச் சென்றேன். ''எனக்கும் இந்தப் பசங்களுக்கும் 10 வருட நட்பு இருக்கு'' என்றவாறு உற்சாகமாகப் பேசுகிறார் ஜெயராஜ்.

''இந்தப் பழமையான கிராமத்துலதான் நான் 25 வருஷமா ஆசிரியரா பணிபுரியறேன். 1986-ம் வருஷம் இங்கே அறிவியல் ஆசிரியரா வேலைக்கு வந்தேன். அப்ப என்கிட்ட படிச்ச பசங்களோட மகன்களும் மகள்களும் இப்ப என்கிட்ட படிக்கிறாங்க. இரண்டாவது தலைமுறைக்கு அதே இடத்துல நின்னு பாடம் சொல்லிக் கொடுக்கிறதை நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

இவர் சென்டம் வாத்தியார் !

இங்கே படிக்கிற மாணவர்கள் சிலரோட பெற்றோர் சரியில்லை. குடிச்சுட்டு வந்து பசங்களை இழுத்துப்போட்டு அடிக்கிறது, பிள்ளைகளைக் கூலி வேலையில சேர்க்கிறதுனு பிள்ளைகளைப் படிக்கவிடாம தடுப்பதே அவங்கதான். ஒரு சில மாணவர்கள் இன்னும்கூட சனி, ஞாயிறுகள்ல வேலைக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கும். இந்த மாதிரி, வீட்டுல பல பிரச்னைகளோட படிக்கிற பசங்களுக்காக இரவு நேர வகுப்பு எடுக்கிறோம். பசங்களும் குஷியா வந்து படிக்கிறானுங்க.

எங்கிட்ட படிச்ச மாணவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து நிற்கும்போது,  என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தன் வந்து திடீர்னு கையில கடிகாரம் கட்டிவிட்டுட்டு, கால்ல விழுந்துட்டான். 'யாருப்பா நீ?’னு கேட்டப்ப, ''சார்... நீங்கதான் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தீங்க, நான் கட் அடிச்சுட்டுப் போனப்ப எல்லாம், இழுத்துட்டு வந்து படிக்கவெச்சீங்க. இப்ப நான் ஃபாரின்ல நல்ல வேலையில இருக்கேன்’னு சொன்னப்ப, மகிழ்ச்சியில வானத்தையே தொட்டுடலாம் போல இருந்தது. ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேற என்ன விருது கிடைச்சுட முடியும்?  

இவர் சென்டம் வாத்தியார் !

ஒரு சில அம்மா, அப்பா சண்டை போடுறதால, நல்லாப் படிக்கிற பையனே சில சமயம் சரியாப் படிக்க மாட்டான். என்னனு கேட்டாலும் சொல்ல மாட்டான். அவனை மடியில தூக்கிவெச்சு 'என்ன ஆச்சுப்பா..? என்கிட்ட சொல்ல மாட்டியா?’னு கேட்டா... உடனே பொலபொலனு அழுதுட்டு சொல்லிடுவான். நாமளும் அவனுக்கு என்ன பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி ட்யூன் பண்ணி நல்லாப் படிக்கவைக்கலாம்.

இங்கே சில பள்ளிகள்ல ரிசல்ட் போய்டுமேனு 10-வது படிக்கும் மாணவர்களை வெளியில அனுப்பிடுறாங்க. நான் இந்த மாதிரி பசங்களோட பெற்றோர்கிட்டப் பேசி கூட்டிக்கிட்டு வந்து படிக்கவெப்பேன். படிக்காத மாணவனை நல்லா படிக்கவைக்கத்தான் நாம ஆசிரியராகப் பணியாற்றுகிறோம். ஆனா, இப்போ இருக்கும் பல பள்ளிகளும் ஆசிரியர்களும் அதைப் புரிஞ்சுக்கிறது இல்லை. அதுதான் வேதனையா இருக்குது.

இவர் சென்டம் வாத்தியார் !

என் வேலைக்கு அதிகமாகவே அரசாங்கம் சம்பளம் தருது என்ற எண்ணம் என்கிட்ட பல ஆண்டுகளாகவே இருக்கு. இதனால் என்னுடைய சம்பளத்துல 3,000  ரூபாயை ஒவ்வொரு மாசமும் ஒதுக்கிவெச்சுடுவேன். அந்தப் பணத்துல நல்ல தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் பரிசு, புத்தகம்னு கொடுக்கிறேன். அதனாலேயே மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படிக்கிறாங்க'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, மாணவர்கள் சிலர் வந்து அவருடைய பக்கத்தில் அமர்ந்துகொள்ள... அவர்களை வாஞ்சையோடு அணைத்துக்கொள்கிறார் ஜெயராஜ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு