Published:Updated:

என் ஊர் - நான்கு முதல்வர்களைத் தந்த ஊர் !

கரு.முத்து படங்கள்: கே.குணசீலன்

காரை.சுப்பையா

##~##

''வங்கக் கடல் உருவாக்கிய மணல் திட்டுதான் காரைக்கால். கடற் கரையோரப் பகுதிகளை நம் தமிழர்கள் காயல் என்று அழைப்பார்கள். அப்படி காயல் கால் என்று அறியப்பட்ட ஊர், இப்போது காரைக்கால் ஆகி இருக்கிறது'' - தன்னுடைய ஊரான காரைக்காலைப் பற்றி பேச ஆரம்பித்தார் மேடைக் கச்சேரிகளின் பிதாமகனான காரை.சுப்பையா.

''அந்தக் காலத்தில் இருந்து கடல் வணிகத்தில் சிறப்பு பெற்றிருந்தது காரைக்கால். இந்தத் துறைமுகத்தின் சிறப்பை உணர்ந்த பிரெஞ்சுக்காரர்கள், தஞ்சை மன்னர்களிடம் இருந்து காரைக்காலை விலைகொடுத்து வாங்கி, தங்கள் வணிகத்தைத் தடை இல்லாமல் நடத்தினார்கள். அவர்களுக்கு மிக உபயோகமாக இந்த நகரம் இருந்ததால்தான், 1954 வரை சுதந்திரம் கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். கா.மு.சிவசுப்ரமணியன் என்ற சுதந்திரப் போராட்ட வீரர்தான், தீரத்துடன் போராடி, விடுதலை பெறுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார்.

பாண்டிச்சேரி மாநிலத்துக்கு பக்கிரிசாமி பிள்ளை, ப.சண்முகம், எம்.ஓ.ஹெச்.ஃபருக் மரைக்காயர், எஸ்.ராமசாமி என்று நான்கு முதல்வர்களைத் தந்த ஊர் இது. என்னுடைய சிறு வயதில் மாதாக் கோயில் வீதி, பாரதியார் வீதி, காமராஜர் வீதி என்று மூன்று வீதிகள்தான் பிரதானமாக இருந்தன. இந்த வீதிகளைக் குறுக்காகக் கோடு கிழித்த மாதிரி மற்ற சிறு வீதிகள் அமைந்து அழகு சேர்த்திருக்கிறது.

என் ஊர் - நான்கு முதல்வர்களைத் தந்த ஊர் !

மாதாக் கோயில் வீதியைச் சேர்ந்த மலைப்பெருமாள் பிள்ளை என்பவரைத்தான் காரைக்காலின் தந்தை என்று சொல்வார்கள். முதன்முதலாக இலவச மருத்துவமனை கட்டினார்; பிரசவ வார்டு அமைத்தார். பெண்கள் அங்கு வரத் தயங்கியபோது... பட்டுப் புடவை, தங்கக் காசு எல்லாம் இலவசமாகக் கொடுத்து, பிரசவத்துக்குப் பெண்களை அழைத்து சுகாதாரத்துக்கு வழிகோலியவர். காரைக்கால் அம்மையார் கோயிலையும் அவர்தான் கட்டினார். காரைக்காலில் அவருடைய வீட்டுக்குத்தான் முதன்முதலில் தொலைபேசி வந்தது. சொந்தமாகக் கப்பலும் வைத்திருந்தார்.

என் ஊர் - நான்கு முதல்வர்களைத் தந்த ஊர் !

மாதாக் கோயில் வீதி வழியாகத்தான் நாங்கள் பள்ளிக்குச் செல்வோம். அப்போதுதான் மழைக் காலங்களில் நனையாமல் போகமுடியும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 'அஞ்சடி’ என்று ஒன்று இருக்கும். வீட்டு முகப்பில் ஐந்தடி தூரத்துக்கு போர்டிகோ மாதிரியான அமைப்பு அது. அதில் ஒதுங்கி நடந்தால், பள்ளி வரை நனையாமலேயே போய்விடலாம். அதே போல் ஒவ்வொரு வீட்டிலும் திண்ணையும் கட்டாயம் இருக்கும்.

என் ஊர் - நான்கு முதல்வர்களைத் தந்த ஊர் !

ஐப்பசி மாதம் நடக்கும் மாங்கனித் திருவிழா, சுற்று வட்டாரப் பகுதிகள் அனைத்துக்குமான மிகப் பெரிய திருவிழா. ஆண்களும் பெண்களும் வண்டி கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து வீட்டுத் திண்ணைகளில் இடம்பிடித்துவிடுவார்கள். கிட்டத்தட்ட 10 நாட்கள் நடக்கும் அந்தத் திருவிழா, ஊரின் மிகப் பெரிய கொண்டாட்டம். ஒருவர் மீது ஒருவர் மாங்கனிகளை வீசி விளையாடுவார்கள். கூடைக் கூடையாகப் பொழியும் மாங்கனிகளை உண்டால், நிச்சயம் குழந்தைப்பேறு உண்டு என்பது ஐதீகம்.

என் ஊர் - நான்கு முதல்வர்களைத் தந்த ஊர் !

ஒரே ஒரு ரயில் ஓடிய ஊரில் இன்று விமானதளம் வரப்போகிறது. மிகப் பெரிய துறைமுகம் இருக்கிறது. மொத்தத்தில் நகரம் வளர்ந்து பெருகி நிற்கிறது. அதோடு மக்களும் கலாசாரத்தைக் காத்து நிற்கிறார்கள். காரைக்கால் தொன்மையும் நவீனமும் கலந்த ஒரு சிறு நகரம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு