Published:Updated:

(க+ச)2 = க2 + 2கச+ச2

எஸ்.சுமன், படம்: எம்.ராமசாமி

##~##

தலைப்பைப் பார்த்ததுமே கிறுகிறுக்கிறதா? (a+b)2=a 2 +2ab+b2 என்ற கணித சூத்திரம்தான் இது. கணிதத்தை மாணவர்களுக்குத் தமிழில் தோய்த்து பாடம் நடத்துவது பாவலர் ஆடலின் தனி பாணி.  

''இந்தச் சூத்திரத்தைக் கண்டுபிடிச்ச கிரேக்கர்கள் ஆல்பா, பீட்டா எழுத்துக்களைத்தான் பயன்படுத்தி இருந்தார்கள். இதை ஆங்கிலேயர்கள் ஏ, பி - என மாற்றும்போது, தமிழர்கள் ஆகிய நாம் க, ச - என படிக்கக் கூடாதா..?'' - பேச்சில் மட்டுமல்ல... பாவலர் ஆடலின் மூச்சும் தமிழ்தான்!

பெரம்பலூர், அரியலூர் ஏரியாவில் கல்வி அதிகாரி ஆடல் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. எங்கும் தமிழ்; எதிலும் தமிழாக உருகுபவர். அதிலும் திருக்குறள் என்றால் உணவு, உறக்கம் இல்லாமல் வாசிப்பார்.  தோற்றத்திலும் திருவள்ளுவரின் நகல் போலவே உலாவருகிறார் ஆடல்.

''நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, ஒரு பள்ளி மாணவனின் படிப்புக்கு உதவ முயன்றேன். 'உன்னுடைய படிப்புச் செலவுக்கே நீ திணறும்போது இதெல்லாம் தேவையா?’ என்று உடன் படித்தவர்கள் கேலி செய்தார்கள்.  இரவு முழுக்க யோசித்து, அடுத்த நாள் காலையில் இருந்து சவரம் செய்துகொள்ளும் வழக்கத்தை ஒழித்தேன். அதற்கான மாதாந்திர செலவில் அந்த மாணவனை வெற்றிகரமாகப் படிக்கவைத்தேன்''- தாடியை நீவியபடி மழித்தலை ஒழித்த கதையைச் சொல்லிச் சிரிக்கிறார் ஆடல்.

(க+ச)2 = க2 + 2கச+ச2

இயற்பெயர் நடேசன் என்ற போதிலும், பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது அந்தக் காலத்தில் இருந்த தமிழ்ப் பற்றாளர்களின் வரிசையில் இவரும் 'ஆடல்’ என்று தன்னுடைய பெயரை தமிழ்ப்படுத்திக்கொண்டார். கணித ஆசிரியர், பள்ளித் துணை ஆய்வாளர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், ஒன்றிய மேற் பார்வையாளர், வட்டார வள மேற்பார்வையாளர் என கல்வித் துறையின் கற்பித்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் அனைத்தையும் ஒரு சுற்று பார்த்துவிட்டு ஓய்வுபெற்றுள்ளார்.  66 வயதில் இப்போதும் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் என்று இரண்டு தனித் தமிழ் அமைப்புகளைத் தொடங்கி, தன்னுடைய மொழித் தொண்டைத் தொடர்ந்து வருகிறார்.

(க+ச)2 = க2 + 2கச+ச2

பெரம்பலூரில் இருக்கும் தன்னுடைய பாவாணர் நூலகத்தில் அரிதான தமிழ்ப் புத்தகங்கள் ததும்பிக்கிடக்க, அங்கு வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்காகக் குறிப்புகள் எடுத்து உதவிசெய்துகொண்டு இருப்பார் ஆடல். இவ்வாறு இடைவிடாது செயலாற்றினாலும் ஆடலுக்கு நிறைவேறாத ஏக்கம் ஒன்று இருக்கிறது. கணிதத்தையும் அறிவியலையும் தமிழ்ப்படுத்த இவருடைய முயற்சிகளுக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை ஆதரவு கிடைக்கவில்லை என்பதுதான். ''பள்ளிக் கணிதப் பாடங்களில் பரவிக்கிடக்கும் சூத்திரங்கள் அனைத்தையும் தமிழ்ப்படுத்தி அப்போதைய கல்வி அமைச்சரிடம் சமர்ப்பித்தேன். குற்றாலத்தில் விழாவைத்து 'தமிழ்க் கணித மேதை’ என்று பட்டம் மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அறிவியல் தமிழ்ப் பற்றி கேட்டதற்கு, 'கல்வி அலுவலர் வேலையை மட்டும் பாருங்கள்...’ என்று விரட்டிவிட்டார்கள். அல்ஜீப்ரா என்றாலே அலறி பள்ளிக்கூட பக்கம் வராது போன  மாணவர்களை, தாய்த் தமிழில் கணிதம் தோய்த்து முதல் மாணவர்களாக்கி திருப்தி அடைந்ததோடு நிறுத்திக்கொண்டேன். சொந்தச் செலவில் அவற்றைப் புத்தகங்களாக்கி என்னுடைய திருவள்ளுவர் தவச்சாலையில் அடுக்கிவைத்து இருக்கிறேன். என்றாவது ஒருநாள் இந்தப் புத்தகங்களுக்கு அவசியம் வந்தே தீரும்!'' தாடிக்குள் தன்னம்பிக்கைத் தவழ புன்னகைக்கிறார் ஆடல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு