Published:Updated:

அவரிடம் நான் மட்டு்ம் அடி வாங்கலை !

பால்கே பாலசந்தர் விழாவில் பிரகாஷ்ராஜ் கலகல...ஆ.அலெக்ஸ் பாண்டியன்ஜெ.வேங்கடராஜ் படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்,

##~##

'தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு திருச்சி தேசியக் கல்லூரி மைதானத்தில் பாராட்டு விழா! 'திருச்சி கலைப் பேரவை’ என்ற அமைப்பினர்தான் விழாவை நடத்தியவர்கள். விழா ஏற்பாட்டாளர் திருச்சி சிவாவுடன் கே.பாலசந்தரின் மாணவர்களான பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ், சமுத்திரகனி, ஜெயப்பிரதா இவர்களுடன் குஷ்பு, சசிகுமார், வசந்தபாலன், அமீர், தமிழச்சி தங்கபாண்டியன் எனப் பலரும் கலந்துகொண்ட பாராட்டு விழாவின் துளிகள்...

7 மணிக்கு விழா தொடங்கினாலும் மாலை 5 மணிக்கு எல்லாம் மைதானம் நிரம்ப ஆரம்பித்துவிட்டது. இரண்டு மணி நேரம் நடந்த லஷ்மன் ஸ்ருதி இன்னிசைக் கச்சேரியில் முழுக்க முழுக்க கே.பி. இயக்கிய திரைப்படப் பாடல்களை மட்டுமே பாடி உற்சாகப்படுத்தினர் இன்னிசைக் குழுவினர்.

ஆரம்பத்தில் விழா மேடையில் ஏ.சி-யோ, விசிறியோ வைக்கப்படவில்லை. எனவே கே.பி-க்கு வியர்க்க ஆரம்பிக்கவே, 30 நிமிடங்களுக்கும் மேலாக பிரகாஷ்ராஜ் தன் குருவுக்குக் கையில் வைத்திருந்த ஃபைலால் விசிறிக்கொண்டே இருந்தார். குருவுக்கு விசிறிய பிரகாஷ்ராஜுக்கு வியர்க்க ஆரம்பிக்க... அரு கில் அமர்ந்திருந்த குஷ்பு, அவருக்கு விசிறிவிட்டது கண்கொள்ளாக் காட்சி!  

விழாவுக்கு முதல் ஆளாக வந்த டெல்லி கணேஷ்தான், முதலில் மைக்கையும் பிடித்தார். ''இதுவரை தமிழ் சினிமாவில் பாராட்டு விழாக்கள் என்றால், அது அரங்கக் கூட்டமாகத்தான் நடக்கும். முதன்முறையாக மாபெரும் பொதுக்கூட்டம் போல நடந்த பாராட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்'' என்று பிரமித்தார்.

அவரிடம் நான் மட்டு்ம் அடி வாங்கலை !

தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சுதான் பலரையும் கவர்ந்தது. ''எந்த ஒரு கலைஞரும் விருது பெற்றால், அதைத் தன் மனைவி, குடும்பம், கடவுள் என்றுதான் அர்ப்பணிப்பார்கள். ஆனால், தான் பெற்ற ஓர் உயரிய விருதினை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணித்த ஒரே கலைஞர் பாலசந்தர்தான். வாழ்வில் நம்பிக்கை இழக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாலசந்தரின் படங்கள் நம்பிக்கை கொடுக்கும். சமூகம் சார்ந்த உண்மைகளைத் தன் படத்தில் காட்டியவர். எதை வேண்டாம் என்று கலைஞர்கள் தொடத் தயங்குகிறார்களோ... அதையே காட்சிப் படுத்திய தைரியசாலி'' என்று பேச... ''தமிழச்சி தங்கபாண்டியனை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போதுதான் பார்க்கிறேன். நல்ல திறமைசாலியாக இருக்கிறார்'' என்று பாராட்டினார் பாலசந்தர்!  

பலத்த கைதட்டலுக்கு இடையே பேச வந்தார் குஷ்பு. ''நடிகர், நடிகை என எதையும் நம்பாமல் கதையை மட்டுமே நம்பி படம் எடுத்தவர் பாலசந்தர் சார். ஒரு கிளாமர் ஹீரோயினாக இருந்த என்னையே, தன் 'ஜாதி மல்லி’ திரைப்படத்தின் மூலம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவைத்து எனக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தவர். எதிர்கால சினிமா வரலாற்றில் கே.பி. சாரின் பெயர் உச்சத்தில் இருக்கும்'' என்றார்.

அவரிடம் நான் மட்டு்ம் அடி வாங்கலை !

விழாவில் பிரகாஷ்ராஜுக்கு ஏக போக வரவேற்பு. ''கர்நாடகாவில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த என்னை, இந்த உலகத்துக்கே அறிமுகப்படுத்தியவர். அவர் தன் மாணவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு சிற்பிபோல செதுக்குபவர். படப்பிடிப்பில் அவர் அடிப்பார் என எல்லோரும் என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், அவரிடம் அடி வாங்காமல் நடித்த ஒரே நடிகன் நான்தான்!'' எனக் கூற, குஷ்பு கையை உயர்த்தி, ''மி டூ! நானும் அடி வாங்கல!'' என்று சத்தமாகச் சொன்னார். ''அவர் ஹீரோயினை எல்லாம் அடிக்க மாட்டருங்க'' என்று பிரகாஷ்ராஜ் சொல்ல... பலத்த சிரிப்பு!  

எப்போதும் போல் இயக்குநர் அமீரின் பேச்சில் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. ''இந்த விழாவை முதலில் நடத்தி இருக்க வேண்டியது எங்கள் இயக்குநர் சங்கம்தான். அவரிடம் பல முறை நேரம் கேட்டும் கொடுக்கவில்லை. இந்த விழாவை திருச்சியில் நடத்தி எங்களை அவமானப்படுத்திவிட்டார்கள்'' என்று பேச, அதற்குப் பதில் அளித்து பேசிய பாலசந்தர், ''நான் பெரும்பாலும் விழாக்களில் கலந்துகொள்வது இல்லை. திருச்சி சிவாவின் அழைப்பை நான் ஏற்றுக்கொள்ள காரணம்... திரை உலகைத் தாண்டி இது தமிழ் மக்களின் அழைப்பு என்பதால்தான்'' என்றார்!

நன்றியுரை கூறிய விழா ஏற்பாட்டாளர் திருச்சி சிவா, ''சென்னையில் விழா நடக்கவில்லை என்று அமீர் வருத்தப்பட்டார். விழா திருச்சியில் நடந்தால் என்ன, சென்னையில் நடந்தால் என்ன? இது தமிழ் மக்கள் ஒரு மகா கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழா. அவரை இந்த விழாவுக்கு அழைத்து வர பல வழிகளில் முயற்சி செய்து, தொடர்ச்சியாக அழைத்து பின்னர்தான் ஒப்புதல் வாங்கினேன். இங்கே தொடங்கிய இந்தப் பாராட்டு விழா, இனி, தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்'' என்றார்.

அவரிடம் நான் மட்டு்ம் அடி வாங்கலை !

ஏற்புரை வழங்கிய கே.பாலசந்தர், ''எனக்கு வழங்கப்பட்ட தாதா சாகேப் பால்கே விருதுக்கு நான் சரியானவன்தானா..? எனக்கு அதை வாங்குவதற்குத் தகுதி இருக்கிறதா? என்று இவ்வளவு நாட்களாகச் சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது இந்தப் பாராட்டு விழாவில் கூடி இருக்கும் மக்களைப் பார்க்கும்போது நான் தகுதியானவன்தான் என்று தோன்றுகிறது.

சிறு வயதில் நன்னிலத்தில் இருக்கும்போது திருச்சி பொன்மலையில்தான் என் அண்ணன் வேலை பார்த்துவந்தார். அப்போது திருச்சியில் நடக்கும் நாடகங்கள் மிகப் பிரபலம். என் அண்ணனிடம் 25 பைசா வாங்கிக்கொண்டு டி.கே.எஸ். நாடகங்களையும், எம்.ஆர்.ராதா நாடகங்களையும் பார்த்திருக்கிறேன். அதுதான் எனக்கான உந்துதல். அதன் பின் இங்கே வந்ததாக நினைவில்லை. இப்போது வரும் இளம் இயக்குநர்கள் எல்லோரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லோரும் மதுரை, திருச்சி குரூப் பையன்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்தபின்பு மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது'' என்று கூற... கூட்டத்தில் பலத்த வரவேற்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு