Published:Updated:

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

Published:Updated:
வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

கபடி... கபடி!

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

ங்கள் ஊரில் இரண்டு கபடி அணிகள் இருந்தன. ஓர் அணியின் பெயர், இளைஞர் மன்றம். இன்னோர் அணியின் பெயர், முத்தமிழ் கபடிக் கழகம். இரண்டில் ஓர் அணி அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டுப்  பரிசினை வென்று வந்துவிடுவார்கள். இளைஞர் மன்றம் பின்பு செவன் ராபின்ஹுட் எனப் பெயர் மாறியது. காரணம், அப்போது 'நான் சிகப்பு மனிதன்’ படம் வெளியாகி ராபின்ஹுட் என்ற பெயர் பிரபலமாக இருந்தது. இதேபோல, டி.ராஜேந்தர் ஒரு படத்தில் தனது பெயரை சூலக்கருப்பன் என வைத்து இருப்பார். அந்தப் பெயருடன் இடயன்காடு  என தங்கள் ஊரின் பெயரி னையும் சேர்த்து, 'இடயன்காடு சூலக்கருப்பன்’ என்று அணியின் பெயராக்கி விட்டார்கள், முத்தமிழ் கபடிக் கழகத்தார். முதுகாடு வானவில், அறந்தாங்கி செவன்புல்லட், அரசர்குளம் ஏ.எஸ்.சி, அரசர்குளம் செவன் லயன்ஸ், மணக்காடு கபில்தேவ், வீரியன்கோட்டை வெண்புறா எனப் பல அணிகள் இருந்தன.  

முன்பு கபடிப் போட்டியைக் கண்டுகளிக்க பெண்களும் மிக ஆர்வமாக வரு வார்கள். சில விளையாட்டு வீரர்களின் மனதுக்குப் பிடித்த பெண்ணும் அங்கு வந்திருந்தால், அவருடைய அன்றைய ஆட்டம் அனல் பறக்கும். விடிந்த பின்னும் கபடி விளையாட்டுத் தொடர்ந்தால், அருகில் உள்ள வீடுகளில் சாம்பார் சோறும், இட்லியும் செய்து வீரர்களுக்குக் கொடுப்பார்கள். இப்படிக் கபடி விளையாடப் போன வீரர்களுக்கு அதே ஊரில் பெண் பார்த்து சம்மந்தம் பேசித் திருமணமும் நடந்தது உண்டு.இதே கபடியால் ஊரில் பிரச்னையாகிப் பஞ்சாயத்தில் கை கட்டி நின்றதும் நடந்து இருக்கிறது!

விவிதபாரதி டு செல்போன்!

என்னுடைய சிறு வயதில் பாடல்கள் கேட்கும் அனுபவங்கள் இலங்கை வானொலியைச் சார்ந்தே இருந்தது. இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பாடலை ஒளிபரப்பும் முன்பு பேசும்  தமிழ் உச்சரிப்பினை இன்று எங்கும் கேட்கவே முடிவது இல்லை.

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

எங்கள் வீட்டு ரேடியோ மிகப் பெரியதாக இருக்கும். அந்த ரேடியோவில் 'குரு’, 'திரிசூலம்’ போன்ற திரைப்படங்களின் ஒலிச்சித்திரங்களை ஞாயிற்றுக் கிழமைகளில் கேட்போம். வீட்டில் உள்ள பெண்கள் விவிதபாரதியில் இரவு ஏழே முக்கால் மணி போல் ஒலிபரப்பாகும் நாடகங்களை விரும்பிக் கேட்பார்கள்.

ரேடியோவில் பாடல்கள் கேட்ட அனுபவத்துக்குப் பிறகு, கல்யாண வீடுகளிலும் காதுகுத்து விழாக்களிலும் இசைத் தட்டுக்களில் கேட்ட பாடல்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சரியான வேகத்தில் இசைத் தட்டு சுழலாவிட்டால்,  கூழாங்கற்களை வாய்க்குள் வைத்துக்கொண்டு பாடுவதுபோல் கேட்கும். அதனால், உடனே அதனை சரி செய்திட, மைக்செட் ஏற்பாடு செய்பவர் அருகிலேயே இருப்பார்.

இதன் பிறகுதான் கேசட் பிளேயர் வந்தது. கேசட்டுக்களில் பிடித்த பாடலைப் பதிந்து கேட்பது ஒரு சுகம். ஒரு கேசட்டில் பாடல்கள் பதிவதற்குப் பாடல் தேர்வு செய்ய ஒரு வாரம் வரை ஆகிவிடும். நண்பர்களிடம் 'எந்தப் பாடல் நல்லா இருக்கும்?’ எனக் கேட்டு பாட்டினைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டு கேசட் கடைக்குச் சென்றால், நாம் தேர்வு செய்து  இருக்கும் பாடல்களில் சில பாடல்கள் அவரிடம் இருக்காது. மறுபடியும், வேறு சில பாடல்கள் தேர்வு செய்து தந்தால், அவர் 'இரண்டு வாரம் கழித்து கேசட்டினை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்பார். இவ்வாறு ஒரு கேசட்டில் பாடல்கள் பதிந்து அதைக் கேட்க ஒரு மாதம் ஆகிவிடும்.

பிறகு, என் சித்தப்பா ஒரு சி.டி. பிளேயர் வாங்கினார். அதில் முதன் முதலில் பாடல் கேட்கும்போது  இசை பிரிந்து தனித் தனியாக ஒலித்தது கேட்க மிக வித்தியாசமாக இருந்தது. இன்றோ... ஒரு இணைய இணைப்பு உள்ள செல்போன் இருந்தால் போதும். இருக்கும் இடத்தில் இருந்தபடி விரும்பிய பாடலை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கேட்கலாம். ஆனால், கேசட்டில் பாடல் பதிந்து கேட்ட சுகம் இதில் சிறிதும் இல்லை!

முதல் பயண அனுபவம்!

''டேய்... நான் நாளைக்கு மலேசியா போறேன்டா...''- சந்தோஷமும் வருத்தமுமாக நண்பனிடம் சொன்னேன். ''என்ன வேலையில் சேரப் போறே?'' என்று கேட்டவனிடம், ''தெரியலடா... அங்கப் போனாதான் தெரியும்'' என்றேன்.

வலையோசை : எண்ணங்களுக்குள் நான்...

மலேசியாவுக்குச் சென்றபின் என் உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன். தினமும் காலை உணவு சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சிக்கு முன்பு அமர்ந்துவிடுவேன். இரவு, உறவினர் வீட்டுக்கு வந்தவுடன், 'எனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்தீர்களா?’ என தினமும் கேட்பேன். அவர், 'பொறுமையுடன் இரு’ என்பார்.

சரியாகப் பத்து நாள் கழித்து என்னைத் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றவர், அங்கு இருந்த உணவக மேலாளரிடம் பேசினார். பிறகு, 'உனக்கு இங்குதான் வேலை. பார்த்து நடந்துக்க’  என்றார். நானும் சரியெனத் தலையாட்டினேன். மேலாளர் என்னை அடுக்களைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு இந்தோனேஷியப் பெண்  இருந்தாள். அவளிடம் இவர் மலாய் மொழியில் பேசிவிட்டு, 'அவள் சொல்வதுபோல் நடந்துகொள்!’  என்றார். நானும் சரி என்றேன். மொழி தெரியாத எனக்கு இவள் எப்படிச் சொல்லிப் புரியவைக்கப் போகிறாள் என்று ஆர்வமாக நின்றேன். அதற்கு எல்லாம் அவசியம் இல்லாமல் போய்விட்டது, அவள் எச்சில் தட்டு கழுவிக் காட்டியபோது.

நான் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த நாள் எது தெரியுமா?  என் பிறந்த நாளான ஏப்ரல் பத்தாம் தேதி. என்றுமே வாழ்வில் மறக்க முடியாத நாளாகப் போய்விட்டது என் முதல் நாள் வேலை அனுபவம்!