Published:Updated:

என் ஊர் : மேலவாசல்

ஆடுகளுக்குத் 'தடா'!எழுத்தாளர் இரா.காமராசு

என் ஊர் : மேலவாசல்

ஆடுகளுக்குத் 'தடா'!எழுத்தாளர் இரா.காமராசு

Published:Updated:
##~##

''மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜகோபுரத்தின் மேற்கு வாயிலில் அமைந்து உள்ளதால் எங்கள் கிராமத்துக்குமேல வாசல் என்று பெயர் வந்தது.'' பெயர் காரணத் தோடு தன்னுடைய கிராமத்தைப் பற்றி பேசுகிறார் எழுத்தாளர் இரா.காமராசு.

 ''விவசாயம்தான் எங்கள் வாழ்க்கை. காவிரியின் கடைசித் துளிகள் அவ்வப்போதுதான் எட்டிப்பார்க்கும் என்றாலும், ஊரில் அமைந்து உள்ள குளங்களின் மூலமாகவே குலம் வளர்த்தோம். ஊரில் 18 குளங்கள் உள்ளன.

மராட்டியர்களின் காலத்தில் குடியேற்றம் நடைபெற்று எங்கள் மூதாதையர்கள் இங்கு வந்தனர். மன்னரின் ஆணையின்படி தெருக்கள் நேர்கோட்டில் அமைக்கப்பட்டு வீடுகள் முறையாகக் கட்டப்பட்டன. அழகான கிராமமாகவே இன்றும் மேலவாசல் உள்ளது.

என் ஊர் : மேலவாசல்

தமிழ் மொழி வரலாற்றினைச் சுமந்த நடமாடும் நூலகம் எங்கள் ஊரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. நவீன நூலகத் தந்தை எனப் போற்றப்படும் ரங்கநாதன் அவர்களின் தூண்டுதலால் 1931-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி எங்கள் கிராமத்தில் மாட்டு வண்டியில்,  நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் 3,782 புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வண்டி தினமும் ஒரு பகுதிக்குச் செல்லும். புத்தகம் படிக்க விரும்புபவர்கள் வண்டியை நிறுத்தி வாங்கிக்கொள்வார்கள். இதன் நினைவாக நூலக வண்டியின் மாதிரி வடிவம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

என் ஊர் : மேலவாசல்

ஊரில் திருவிழா உள்பட அனைத்தையும் முன்நின்று செய்வது கிராம கரைக்காரர்கள் மற்றும் காரியக்காரர்கள். மக்களே ஒன்றிணைந்து 1935-ல் ஒரு தொடக்கப் பள்ளியைக் கட்டினர். அதற்கு 'திருமுருகன் தொடக்கப் பள்ளி’ எனப் பெயர் சூட்டினர். இன்று அது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து உள்ளது.

சாமிகுமிழை என்கிற குளம்தான் எங்கள் ஊர் முகப்பில் வந்தாரை எல்லாம் வரவேற்கும். இங்கு மீன் வளர்க்கப்படும். முதல் மீன்பிடி, ஊரில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. ஊரில் உள்ள அனைவருக்கும் அந்த மீன்கள் பகிர்ந்து கொடுக்கப்படும். மீன்பிடி அன்று ஊரே மீன் குழம்பு வாசத்தில் மிதக்கும். இதே போன்று ஊர் மையத்தில் இருக்கும் கடவுளான வளத்தியம்மன் கோயில் திருவிழாவில் கிடா வெட்டு பிரசித்தம். ஊர்ப் பொதுவில் கிடாக்கள் வாங்கி கோயிலில் வெட்டுவோம். கறியைச் சரி சமமாக எல்லோருக்கும் பிரித்துக் கொடுப் போம்.

விவசாய கிராமமான மேலவாசலில் ஆடுகளே கிடையாது. வேலிகளையும் பயிர்களை யும் ஆடுகள் மேய்ந்துவிடுவதால், அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. அதனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் ஆடுகள் வளர்க் கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. இன்று வரை ஓர் ஆடுகூட எங்கள் கிராமத்தில் கிடையாது. தமிழக அரசு வழங்கும் விலையில்லா ஆடுகள்கூட இன்னும் ஊருக்குள் நுழையவில்லை.

பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் 16-ம் நாளில் காவல்தெய்வங்களான வீரனுக்கும் தூண்டில்காரனுக்கும் கோழியைக் காவு கொடுப்பார்கள். கோயில் பூசாரியான மாற்றுத்திறனாளி இளங்கோவன், அங்கேயே கோழிக் கறிச் சமைத்து அதைச் சாதத்தோடு கிளறிக் கொடுப்பார். பங்காளிகள் கூடி உறவு வளர்க் கும் இனிய நிகழ்வு அது.

முன்பெல்லாம் எங்கள் ஊரில்  கபடி விளையாட்டு கொடிகட்டிப் பறந்தது. ஊருக்குள்ளேயே பல குழுக்கள் இருந்தன. சீனி.ராமச்சந்திரன் என்பவர் மாநில அளவில் சிறந்த கபடி வீரராகவும் நடுவராகவும் இருந்தார். இளைஞர்கள் பலர் வலு தூக்கும் போட்டிகளிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தனர். இதன் பலனாக இன்றும் பலர் மத்திய மாநில அரசுப் பணிகளில் உள்ளனர்.

என் ஊர் : மேலவாசல்

எங்கள் மக்கள் கடும் உழைப்புக்குப் பேர் பெற்றவர்கள். எந்த நேரமும் வயல்காட்டில், தோப்புகளில் ஏதாவது வேலை செய்தபடி இருப்பார்கள். அப்போது எல்லாம் மன்னார் குடி காளவாய்க்கரைச் சந்தைக்கு மேலவாசலில் இருந்துதான் காய்கறிகள் செல்லும். மாட்டு வண்டிகளில் காய்கறிகளை ஏற்றி நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, கடலூர் வரை சென்று விற்றுவருவார்கள். மேலவாசல் காய்கறி எனச் சொல்லி விற்கும் அளவுக்கு அது பேர் பெற்றது. வேளாண் நெருக்கடிகளால் பலர் சிங்கப்பூர் சென்று பிழைக்க ஆரம்பித்துவிட்ட னர். இப்போது மேலவாசல் தன் பெருமையைக் காப்பாற்ற வழியின்றி உள்ளது. இதுதான் காலத்தின் கோலம்!''

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்