Published:Updated:

கண்ணப்பன் சரித்திரம்!

ஒரு நம்பிக்கைச் சித்திரம்

கண்ணப்பன் சரித்திரம்!

ஒரு நம்பிக்கைச் சித்திரம்

Published:Updated:
##~##

திருச்சி உறையூரில் பார்வை இழந்த இளைஞர் ஒருவர் டூ-வீலர் மெக்கானிக் தொழில் செய்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்துக்கொண்டு இருக்கிறார்.அவர் 'சாஸ்தா டூ-வீலர் வொர்க் ஷாப்’ நடத்திவரும் 27 வயது கண்ணப்பன்.

 அவரிடம் பேசினேன். ''எனக்கு நாலு வயசா இருக்கும்போது காய்ச்சல் வந்துச்சு. காய்ச்சல் அதிகமானதே தவிர, குறையவே இல்ல. பிறகுதான் அது மூளைக் காய்ச்சல்னு  கண்டுபிடிச்சாங்க. தீவிர மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு  உயிர் பிழைச்சேன். ஆனா, அதுக்குப் பிறகு என்னால எதையும் பார்க்க முடியலை. 'மூளைக் காய்ச்சல் காரணமா பார்வை நரம்புகள் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கு. இனிமே பார்வை வர வாய்ப்பே இல்லை’ன்னு டாக்ட ருங்க கை விரிச்சுட்டாங்க. அதைக் கேட்டுட்டு என்னைப் பெத்தவங்க அழுத அழுகைதான், நான் இந்த நிலைக்கு வரக் காரணம். சராசரி மனுசனைப் போல் வேலை செஞ்சு சம்பாதிக்கணும்; சொந்தக் கால்ல நின்னு பெத்தவங்களைச் சந்தோஷப்படுத்தணும்னு உறுதி எடுத்துக்கிட்டேன். அதுக்காகக் கஷ்டப்பட்டேன். நான் இப்போ தனியா மெக்கானிக் ஷாப் வைக்கிற அளவுக்கு வந்திருக்கேன். ஆனா, இதைப் பார்த்துச் சந்தோஷப்பட எங்கம்மா உயிரோட இல்லை!'' என்று தாயின் நினைவுகளில் கண் கலங்குகிறார் கண்ணப்பன்.

கண்ணப்பன் சரித்திரம்!

''எனக்குப் பார்வை பறிபோன பிறகு, திருச்சி புறநகர் பகுதியில இருக்குற பார்வையற்றோர் படிக்கும் பள்ளியில சேர்த்துவிட்டாங்க. ஆனா, அங்க கூட்டிப் பெருக்குறதுல ஆரம்பிச்சு டாய்லெட் சுத்தம் செய்றது வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்யச் சொல்லி துன்புறுத்தினாங்க. அதனால், ஒரே வாரத்துல வீட்டுக்குத் திரும்ப வந்துட் டேன். அதுக்கப்புறம் பள்ளிக்கூடம் பக்கமே போகலை. ஒரு சைக்கிள் கடையில வேலைக்குச் சேர்ந்தேன். சைக்கிள்   பஞ்ச்சர் ஒட்ட, ரிப்பேர் சரிபார்க்கக் கத்துக்கிட்டேன். அப்புறம் ஒரு டூ-வீலர் மெக்கானிக்கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டே வருஷம் தான். எல்லா விதமான டூ வீலர் ரிப்பேர்களைச் சரி செய்யக் கத்துக்கிட்டேன். நாமளே தனியா கடைவெச்சு நடத்த முடியும்னு நம்பிக்கைவந்து, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த மெக்கானிக் ஷாப் ஆரம்பிச்சேன்!'' - சாதாரண கண்ணப்பன், மெக்கானிக் கண்ணப்பன் ஆன கதையைச் சொன்னார்.  

''பார்வைத் திறன் நன்றாக உள்ள பலரே இந்தத் தொழிலில் திணறும்போது, உங்களால் எப்படி இந்தத் துறையில் பிரகாசிக்க முடிகிறது?'' என்கிற என் கேள்விக்கு, ''எதையும் ஈடுபாட்டுடன் செஞ்சாப் பிரகாசிக்கலாம். எனக்குக் கண் தெரியாதக் குறையை நான் என்னிக்குமே உணர்ந்தது இல்ல. வண்டியிலேர்ந்து வர்ற சத்தத்தைவெச்சே, அதுல என்ன கோளாறுன்னு கண்டுபிடிச்சுடுவேன்'' என்று சிரிக்கிறார்.

பேசிக்கொண்டு இருக்கும்போது ஒருவர் யமஹா பைக்கைக் கொண்டுவந்து, ''வண்டி ஓட்டும்போது வித்தியாசமான சத்தம் வருது. என்னன்னு பாருங்க'' என்கிறார். வண்டியை ஸ்டார்ட் செய்து ஓடவிட்டு கவனித்த கண்ணப்பன், ''சைலன்ஸரில் உள்ள ஃபில்டர் கட் ஆகி இருக்கு. வண்டியில் வேற எந்தப் பிரச்னையும் இல்லை''  என்றார். சில நிமிடங்களில் அந்தப் பழுதையும் சரி செய்து கொடுத்தார்.

உதவிக்கு யாரையும் வைத்துக்கொள்ளாமல் நட்டு, போல்ட், வாசர் போன்ற உபகரணங்களை அவற்றைப் பொருத்த வேண்டிய இடத்தில் கச்சிதமாகப் பொருத்தி கண்ணப்பன் வாகனங்களின் பழுதை நீக்குவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் தோல்வி என்பதே எதிலும் இல்லை.  இதற்கு கண்ணப்பனே வாழும்  உதாரணம்!

- அ.சாதிக் பாட்ஷா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்