Published:Updated:

நேதாஜிக்கு மாலை போட்டேன்!

சரஸ்வதியின் ஐ.என்.ஏ. நினைவுகள்

நேதாஜிக்கு மாலை போட்டேன்!

சரஸ்வதியின் ஐ.என்.ஏ. நினைவுகள்

Published:Updated:
##~##

ம் தேச விடுதலைக்காகப் போராடிய சிலரின் தியாகம் வெளியில் தெரிந்தாலும், பலரின் தியாகம் வெளி உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு தியாகப் பெண்மணிதான் சரஸ்வதி.

 பர்மாவில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போராடிய சரஸ்வதிதேவி, நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகே உள்ள அகரகடம்பனூரில் வசித்துவருகிறார். அந்த ஊரில் இறங்கி யாரைக் கேட்டாலும், 'மிலிட்டரிகாரம்மா வீடுதானே? அதோ அப்படிப் போங்க!’ என்று சிலிர்ப்போடு வழிகாட்டுகிறார்கள்.

வானம் தெரிகிற கூரை அமைந்த வீட்டில் கட்டிலில் படுத்து இருக்கிறார் 87 வயதான சரஸ்வதிதேவி.

நேதாஜிக்கு மாலை போட்டேன்!

என்னைப்பார்த்ததும் 'வாங்க... வாங்க’ என்று வெண்கலக் குரலில் வரவேற்றபடியே எழுந்து உட்கார்ந்தார். ''கொஞ்ச நாளைக்கு முன்னால கீழே விழுந்துட்டேன்.  இடுப்புஎலும்பு கொஞ்சம் பாதிச்சிருச்சு. அதனாலதான் படுத்தே இருக்கேன்'' என்றவர், தனது ஐ.என்.ஏ. அனுபவங்களைப்  பகிர்ந்துகொண்டார்.

''எங்க அப்பா, அம்மா பர்மாவுல இருந்தப்பதான் நான் பிறந்தேன். அங்கேதான் நேதாஜி தன்னோட இந்திய தேசிய ராணுவத்தை  உருவாக்கினார். எனக்கு அப்போ 13 வயசு. அப்போ சில பேர் நிதி கேட்டு வந்தாங்க. அவங்கக்கிட்ட எங்க அம்மா, தான் போட்டு இருந்த ஆறு பவுன் வளையல், ஏழு பவுன் செயின் எல்லாத்தையும் கழட்டிக் கொடுத்தாங்க. அதைப் பாத்துக்கிட்டு இருந்த நான், 'எதுக்கும்மா நகையை எல்லாம் கழட்டிக் கொடுத்தே?’னு கேட்டேன். 'நம்ம இந்திய நாடு வெள்ளைக்காரங்கக்கிட்ட அடிமைப்பட்டுக்கிடக்கு. அதை சுதந்திர நாடாக்க நேதாஜி படை உருவாக்கியிருக்காரு. அதுக்கான செலவுக்குத்தான் இதைக் கொடுத்தேன்’னு சொன்னாங்க. அப்பவே எனக்குச் சுதந்திர இந்தியா மீது ஆசை வந்திருச்சு. நானும் என் வயசுத் தோழிகளும் ஐ.என்.ஏ-வின் சிறுவர் அமைப்பான 'பாலசேனா’-வில் சேர்ந்தோம். கொடி விற்கிறது, உண்டியல் குலுக்குறது, நிதி சேர்க்கிறதுனு ரொம்பத் தீவிரமா இருந்தோம்.

இப்படியே மூணு வருஷம் போச்சு. 16 வயது ஆனதும், 'இனிமே படிக்கப் போறதில்லை. முழு நேரமும் நேதாஜிப் படையில வேலை செய்யப் போறே’னு  வீட்டுல சொல்லிட்டுக் கிளம்பிட் டேன். ராணுவத்துல சேரப் போனா, 'நீங்க ரொம்ப சின்ன புள்ளையா இருக்கீங்க. உங்களை எப்படி சேர்த்துக்குறது?’னு கேட்டாங்க. உடனே ஒரு குண்டூசியை எடுத்து கையில் குத்தி, ரத்தத்தில் கையெழுத்துப் போட்டேன். உடனே  சேர்த்துக்கிட்டாங்க. என்னையும் சேர்த்து 200 பெண்கள் சேர்ந்தோம். அதுல பாதிப் பேர் திருமணம் ஆகி குழந்தை குட்டிகளோடு இருந்தவங்க. தேச விடுதலைக்காகக் குடும்பத்தைத் துறந்து, நேதாஜியோட படையில சேர்ந்தாங்க.

சிப்பாய்களுக்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகள் எல்லாத்தையும் நாங்க முடிச்சோம். துப்பாக்கிச் சுடும் பயிற்சிகூட கொடுத்தாங்க. நான் ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டுப் பயிற்சி கொடுக்குறவளா உயர்ந்தேன். என்கிட்ட 40 பெண்கள் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. அப்போ இந்தியாவை நோக்கி தன்னோட படையை நகர்த்திட்டு இருந்தார் நேதாஜி. அந்தப் படை யில் என்னோட அண்ணன் வைரக்கண்ணு, சித்தப்பா சின்னச்சாமி ரெண்டு பேரும் இருந் தாங்க. புனே அருகே பிரெஞ்சுப் படையுடன் நடந்த போர்ல, அவங்க ரெண்டு பேருமே இறந்துபோய்ட்டாங்க.

நேதாஜிக்கு மாலை போட்டேன்!

பர்மாவிலும் அப்போ யுத்தம் நடந்துகிட்டு இருந்தது. அங்கங்கே குண்டு விழுந்துக்கிட்டே இருக்கும்.  1946 கடைசியில எங்களை எல்லாம் தலைமறைவா இருக்கச் சொன்னாங்க. அதன்படியே இருந்தோம். அப்புறமா எங்களை எல்லாம் கைது செஞ்சு, மான்லே சிறையில அடைச்சாங்க. பிறகு பர்மாவில் ஐ.என்.ஏ. செயல்படல. வீட்டில் எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. என்னதான் படையில் இருந்தாலும், நேரடியாக போர்ல பங்கேற்க முடியாதது இப்போ வரைக்கும் பெரிய வருத்தமாத்தான் இருக்கு. இருந்தாலும் நான் நினைச்சு நினைச்சுச் சந்தோஷப்படுறது ஒரு விஷயத்துக்குத்தான். நாங்க பயிற்சி எடுத்துகிட்டிருந்தப்ப, குதிரை மீது கம்பீரமா வந்த நேதாஜிக்கு மாலை போடும் பொறுப்பை எனக்குக் கொடுத்தாங்க. அந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி ரொம்ப நாளைக்கு என்னை முகாமில் எல்லோரும் பெருமையா பார்த்தாங்க'' பெருமிதத்தோடு சொல்லி முடித்தார் சரஸ்வதி!

- கட்டுரை, படம்: கரு.முத்து