Published:Updated:

என் ஊர்: துறையூர்

மனிதநேயம்தான் துறையூரின் அடையாளம்!

என் ஊர்: துறையூர்

மனிதநேயம்தான் துறையூரின் அடையாளம்!

Published:Updated:
##~##

''சின்ன ஏரி, பெரிய ஏரி, குட்டைக்கரை என மூன்று நீர்த்துறைகளுக்கு மத்தியில் அமைந்த ஊர் என்பதால் துறையூர் என்றும் துரைகள் என அழைக்கப்பட்ட பெரும் ஜமீன்தார்கள் ஆட்சி செய்த ஊர் என்பதால் துரையூர் என அழைக்கப்பட்டு, நாளடைவில் அது மருவி, துறையூர் ஆகி இருக்கலாம் என்றும் எங்கள் துறையூருக்குப் பெயர்க் காரணம் சொல்கிறார்கள்'' - தான் எழுதும் அழகான பாடல்களைப் போலவே பேச ஆரம்பிக்கிறார் சினிமா பாடலாசிரியர் லலிதானந்த்.

 ''முன்பு சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் துறையூர் இருந்தது. பின்பு, விஜயநகர மன்னர்களின் படையெடுப்பால், ஜமீன்தார்களின் ஆட்சிக்குள் வந்தது. பெரிய ஏரியின் மையத்தில் சிதைந்த நிலையில் இருக்கும் மாளிகை, அந்தக் காலத்தில் ஜமீன்தார்களின் ஓய்விடமாக இருந்து உள்ளது. பெரிய ஏரியின் கடைக்காலில் செச்சைமுனி கோயில் அமைந்து உள்ளது. செச்சைமுனி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்: துறையூர்

என்பவர், ஜமீன்தார்கள் காலத்தில் பெரிய ஏரியை நிர்மாணிப்பதில் முக்கியப் பொறுப்பில் இருந்து வீர மரணம் அடைந்தவர் என்கிறார்கள்.

பெருமாள்மலை பிரசன்ன வேங்கடாசலபதி கோயில் இந்தப் பகுதியில் பிரசித்தம். தென் திருப்பதி என அழைக்கப்படும் இந்தக் கோயிலின் திருவிழா புரட்டாசி மாச சனிக் கிழமைகளில் நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்கள் லட்சக்கணக்கில் அப்போது கூடுவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னரால் மலை உச்சியில் கட்டப் பட்ட இந்தக் கோயிலை அடைய 1,564 படிகள் ஏறவேண்டும். தற்போது வேன்கள் செல்லும் அளவுக்கு மலைப் பாதை பெரிது படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பௌர்ண மியிலும் கிரிவலம் வருவது இங்கு சிறப்பான ஒன்று. இந்த மலைக் கோயிலில் இருந்து திருச்சி மலைக்கோட்டைக்கு மன்னர்கள் காலத்தில் சுரங்கப்பாதை இருந்ததாகக் கூறுவார்கள்.

1932-ல் நீதிக்கட்சி சார்பில் துறையூரில் பெரிய மாநாடு ஒன்றை அண்ணா நடத்தினார். அந்த மாநாட்டில் பேசிய பின்னர்தான் அவர் தமிழக அளவில் புகழை அடைந்தார். கிருஷ்ணசாமி ரெட்டியார் என்பவர் 1942-ல் துவங்கிய 'கிராம ஊழியன்’ சிற்றிதழ் துறையூரில் இருந்துதான் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் 'கிராம ஊழியன்’ இதழின் பங்கு மகத்தானது. எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது தலைசிறந்த எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகள் அதில் வந்துள்ளன.

நான் பிறந்தது துறையூர் பக்கத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் கிராமத்தில். ஆனால், படிப்பு, பணி, திருமணம் என என்னுடைய வாழ்க்கையின் அனைத்து முக்கிய நிகழ்வுகள் நடந்தது துறையூரில்தான். துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளிதான் நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளி ஆரம்பித்து 71 வருடங்கள்ஆகிறது. ஐஸ்காரர் சுப்புவில் ஆரம்பித்து மனநிலை தவறிய நிலையில் திரிந்துகொண்டு இருந்த ராம சாமி வரைக்கும் எத்தனை மனிதர்கள், நிகழ்வு கள்! இங்கே நான் பாடப் புத்தகங்களைவிட மனிதர்களையும், வாழ்க்கையையும்தான் அதிக மாகப் படித்தேன். இந்தப் பள்ளிதான் என்னைக் கவிஞனாக மாற்றியது.

என் ஊர்: துறையூர்

எட்டாவது படித்தபோது நான் எழுதிய ஒரு கவிதையை வசந்தா டீச்சர் தற்செயலாகப் பாத்துவிட்டு, 'பிரமாதமா எழுதுறேடா’ என்று என்னைப் பாராட்டினார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த நேரம் நான் இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்க மாட்டேன்.

'நடைபாதைவாசிகள்
மரத்தடியாவது கிடைத்ததே என
எண்ணி மகிழும்போதுதான்
இலையுதிர் காலத்தின் ஆரம்பம்!’

என்பதுதான் அந்தக் கவிதை.

இந்தப் பள்ளியின் 50-வது ஆண்டு விழா சமயத்தில் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதற் காக விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் வந்து    இருந்தார். நானே எழுதி, மெட்டமைத்த ஒரு கிராமியப் பாடலை அவர்களுடன் இணைந்துபாடி னேன். அதைக் கேட்ட துறையூர் மக்கள் என்னை தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். எனக்குத் துறையூர் தந்த இரண்டாவது அங்கீகாரம் அது.

நதிக்கரையில்தான் நாகரிகங்கள் பிறந்தன என்று சொல்வார்கள். ஏரிக்கரையில்தான் மனிதநேயம் பிறந்தது என்று சொல்வேன். வடலூர் வள்ளலார் வழியில் தினசரி மூன்று வேளையும் அன்னதானம் செய்கிற ஓங்காரக்குடில் இங்கே இருக்கிறது. சின்ன ஏரிக்கரையோரமாய் இருக்கும் அகத்தியர் சன்மார்க்க சங்கமும் யாரையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. அந்த மனிதநேயம்தான் துறையூர் மக்களின் அடையாளம்!''

- க.ராஜீவ்காந்தி
படம்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism