##~## |
கோயில் நகரமான கும்பகோணம், இப்போது ஷூட்டிங் நகரமாகவும் மாறி வருகிறது. அஜீத், விஜய், ஆர்யா, அசின், நயன்தாரா என சினிமா ஸ்டார்கள் கடந்த சில வருடங்களாகவே கும்பகோணத்தைச் சுற்றி ரவுண்ட் அடிப்பதற்கு ஸ்வீட் ரவி என்கிற ஷூட்டிங் ரவியும் ஒரு காரணம்!
''அப்பா நடத்திக்கிட்டு இருந்த பலகாரக் கடையைப் பார்த்துகிட்டு இருந்தேன். எனக்கு நகைச்சுவையில் ஆர்வம் அதிகம். பல பத்திரிகைகளிலும் ஸ்வீட் ரவி என்ற பெயரில் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி இருக்கேன். அதே சமயம், எனக்கு சினிமாவுல நடிக்கவும் ஆசை இருந்தது. ஆனா, அதுக்காகப் பெருசா எந்த முயற்சியும் எடுக்கலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதன்முறையா சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பை ஏற்படுத்தியவர் டைரக்டர் லிங்குசாமி சார்தான். நண்பர் ஒருத்தர் மூலமா அறிமுகமானவர், 'ஆனந்தம்’ படத்துக்கு லொக்கேஷன் பார்த்துத் தரச்சொல்லிக் கேட்டாரு. அந்தப் படத்துக்கு ஏத்த மாதிரி ஒரு ஓட்டு வீடு பார்த்துக் கொடுத்தேன். அது அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போக, அந்தப் படத்துல கும்பகோணத்துல எடுத்த எல்லா சீனுக்கும் லொக்கேஷன் பார்க்குற பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சார். நான் லொக்கேஷன் பார்த்த முதல் படமே பெரிய ஹிட் ஆனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அது வரைக்கும் ஸ்வீட் ரவியா இருந்த என்னை அப்புறம் ஷூட்டிங் ரவினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
அதைத் தொடர்ந்து 'தவசி’, 'அரசு’, 'கிரி’, 'சண்டை’, 'சிவா மனசுல சக்தி’, 'சந்தோஷ் சுப்பிரமணியம்’ன்னு தொடர்ந்து கும்பகோணத்தில் நிறையப் படங் களுக்கு லொக்கேஷன் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. எல்லாப் படமுமே செம ஹிட்.

லொக்கேஷன் பார்க்குறதோட மட்டுமில்லாம, சில படங்களில் சின்ன ரோலில் தலைகாட்டி என்னோட சினிமா ஆசையையும் நிறைவேத்திக்கிட்டேன்.
முதல் படம் 'ஆனந்தம்’ எடுக்கறப்ப என் வீட்டில் உள்ளவங்க, நண்பர்கள் எல்லாரும் என் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. சினிமா ஷூட்டிங் கும்பகோணம் மக்களுக்கு ரொம்பப் புதுசு. அதனால, அங்கே வர்ற மக்களைக் கட்டுப்படுத்தக் கஷ்டமா இருந்தது.
அதுலேயும் 'காவலன்’ படம் எடுக்குறப்ப திருவிடைமருதூர்ல நடந்த ஷூட்டிங் பார்க்க அதிகமானக் கூட்டம். ஒரு வழியா கூட்டத்தைக் கட்டுப்படுத்தி பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் படத்தை எடுத்து முடிச்சோம்.
கும்பகோணத்துல படம் எடுத்தா அது கண்டிப்பா ஹிட் ஆகும்னு கோலிவுட்ல நம்பிக்கை இருக்கு. லேட்டஸ்டா வந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்’, 'கலகலப்பு’ படங்களோட வெற்றிக்குப் பிறகு இன்னும் நிறையப் படங்களைக் கும்பகோணத்துல எடுக்கப் போறாங்க.
இயக்குநர்களைவிட படத்தில் நடிக்கிற நடிகர், நடிகைகள் இப்ப கும்பகோணம் என்றால் டபுள் ஓ.கே. சொல்றாங்க. 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காக நயன்தாரா இங்கே வந்தப்ப ஓய்வு நேரத்தில் ஆதிகும்பேஸ்வர், நாகேஸ்வரம்னு கோயில் கோயிலா ஏறி இறங்கினாங்க. அவரைப் போலவே ஷூட்டிங்குக்காக கும்பகோணத்துக்கு வர்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஷூட்டிங் இல்லாத நாட்களில் கோயிலுக்கு விசிட் அடிக்க ஆரம்பிச்சிருவாங்க. அந்த அளவுக்கு கும்பகோணம் அவங்களை கவர்ந்திருக்கு. அதுதான் இந்த ஊருடைய ஸ்பெஷல்!'' என்று சிரிக்கிறார் ஷூட்டிங் ரவி.

- மா.நந்தினி, படங்கள்: செ.சிவபாலன்