Published:Updated:

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் !

'மரம்’தங்கசாமிசி.சுரேஷ் படங்கள்: கே.குணசீலன்

##~##

''வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாயம் செய்து போராடிவரும் மக்களைக்கொண்ட சேந்தன்குடிதான் என்னுடைய ஊர்'' என்கிற அறிமுகத்துடன் பேசத் தொடங்குகிறார் இயற்கை ஆர்வலரான 'மரம்’ தங்கசாமி.

''சேந்தன்குடி... பாளையக்காரர்களால் கி.பி. 1486-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை சுமார் 462 ஆண்டுகள் ஏறக்குறையப் பதினைந்து தலைமுறையினர் ஜமீன்தார்களாக ஆட்சி புரிந்த ஊர். அப்போது எங்கள் கிராமத்தின் பெயர் சேந்தன்மங்களம். காலப்போக்கில் சேந்தன்குடி ஆகிவிட்டது. சேந்தன்குடி, நகரம், கீரமங்களம், கொத்தமங்களம், பனங்குளம், குளமங்களம் என ஆறு கிராமங்களை உள்ளடக்கியது சேந்தன்குடி ஜமீன். அவர்களின் அரண்மனை இன்றும் இருக்கிறது. காட்டு அரணாக அமைக்கப்பட்ட கோட்டை என்பதால் பாதைகளே சரிவரக் கிடையாது. இன்றும் சேந்தன்குடியில் சரியான பாதை வசதிகள் இல்லை.

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் !

புதுக்கோட்டை மன்னர் ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர் (1839- 1886) அவர்களின் உதவியுடனும் திவானாக இருந்த சேசுவா சாஸ்திரி அவர்களின் ஆலோசனைப்படியும் சேந்தன்குடியில் 'நகரம்’ என்கிற ஊர் அமைக்கப்பட்டது. இங்கே ஜமீன்தார் வழியில் தோன்றிய கூத்தையன் வழுவாட்டியார் என்பவர் திருமணம் செய்துகொள்ளாமல் சாமியாராக இருந்தார். பழநி சென்று அங்கே முரு கன் முன்னால் செங்கல்லை வைத்து வணங்கினார். அந்தக் கல்லைக் கொண்டுவந்து நகரத்தில் குடிசைகட்டி வணங்கி வந்தார். பின்னர் மன்னரின் உதவியுடன் திருக் கோர்ணமலையில் இருந்து கற்களைக் கொண்டு வந்து செயற்கை மலை அமைத்துக் கோயில் எழுப்பினார். இப்போது எங்கள் ஏரியாவில் புகழ்பெற்ற முருகன் கோயிலாக அது விளங்குகிறது.

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் !

வில்லுன்னி மற்றும் அம்புலி என இரண்டு காட்டாறுகள் உள்ளன. அவற்றில் மழைக் காலங்களில் மட்டும் வெள்ளம் வரும். ஆனால், முறையாகப் பயன்படுத்த முடியாது. அதனால், காமராஜர் முதல்வராக இருந்தபோது அம்புலி ஆற்றில் ஓர் அணையைக் கட்டினார். அதைத் திறந்துவைத்துவிட்டு நடந்தே நகரம் முருகன் கோயிலுக்குவந்து வணங்கினார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே இங்கே தபால் நிலையம், காவல் நிலையம், பள்ளிக்கூடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நகரம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். 12 நாட்கள் நடக்கும் திருவிழா அது. புதுக்கோட்டையில் இருந்து நாடக கோஷ்டி வந்து தங்கி நாடகம் போடுவார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்த  நாடக ஆசிரியர் தினகரன் கருப்பையா இந்தப் பகுதியில் ரொம்பப் பிரபலம். அவரே நடிக்கவும் செய்வார்.

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் !

ஊர்ப் பஞ்சாயத்து எல்லாம் தானாண்மை நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், புளியமரத்தின் கீழ் நடக்கும். இன்றும் அந்த மரம் உள்ளது. சுதந்திர தினத்தன்று மரத்தின் மேல் கொடிமரம் நட்டுத் தேசியகொடியைக் பறக்கவிடுவோம். சுற்றுப்பட்டி ஆறு கிராம மக்களுக்கும் கொடி தெரியும்.

ரெங்கநாதன் வாத்தியார்... இவர்தான் எங்கள் ஊரின் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். மண்ணிலும் ஓலைச் சுவடியிலும் எழுதிப் பழகுவோம். பனை மட்டையை வெட்டிக் காயவைத்து ஓலையாகப் பயன்படுத்துவோம்.

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் !

கபடி, கிட்டிபுள்ளு, குஸ்தி போன்றவை எங்களுக்கான பொழுதுபோக்கு. சிலம்பம் சுற்றும்போது ஊரே ஆச்சர்யமாக வேடிக்கை பார்க்கும். அறந்தாங்கியில் கேரளக்காரர்கள் டென்ட் போட்டு மௌனப் படம் ஓட்டுவார்கள். மாட்டு வண்டி கட்டிக்கொண்டு போய்ப் பார்த்துவருவோம். அதெல்லாம், அழகிய கனாக் காலம்!''

அடுத்த கட்டுரைக்கு