Published:Updated:

இனிதான் என் கணக்கு ஆரம்பம் !

கட்டுரை, படங்கள்: ஞா.அண்ணாமலை ராஜா

##~##

கரூருக்குப் போய் குணா என்று கேட்டால் சின்னக் குழந்தைகள் மட்டும் அல்ல... கொஞ்சம் வளர்ந்தவர்களும் 'ஓ... நம்ம குணாதானே!’ என்பார்கள். நடிப்பு, நடனம், மிமிக்ரி, ஓவியம் எனப் பல் துறை வித்தகராகக் கரூர் மக்களைப் பரசவசப்படுத்துகிறார் குணா. அடுத்ததாக, சிம்புவின் நடிப்பில் தயாராகி வரும் 'வாலு’ திரைப்படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரை ஓரம் கட்டினோம்.  

''ஸ்கூலில் படிக்கும்போதே நான் நல்லா வரைவேன். அப்ப எங்க டீச்சர் பி.எட். படிச்சுட்டு இருந்தார். அவங்களோட ரெக்கார்ட் ட்ராயிங் எல்லாத்தையும் என்னை வரையச் சொன்னாங்க. நானும் வரைஞ்சு தந்தேன். பதிலுக்கு என்னை பாஸ் பண்ணி விட்டுட்டாங்க.  

இனிதான் என் கணக்கு ஆரம்பம் !

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எங்க பள்ளிக்கூட விழாவுக்கு உவமைக் கவிஞர் சுரதா வந்திருந்தார். நான் மேடையில் எழுதி வாசித்தக் கவிதையை ரசித்தவர், அதுக்குப் பரிசா என்னை சென்னை அழைத்துச் சென்று ஒரு வாரம் அவருடைய வீட்டில் தங்கவைத்துச் சென்னையைச் சுற்றிக் காண்பிச்சார். அடுத்ததா நான் பத்தாம் வகுப்பு வந்துட்டேன். 'இதுவரைக்கும் உன்னை நாங்களே பாஸ் பண்ணி விட்டுட்டோம். இப்ப நீ எழுதப்போறது பப்ளிக் எக்ஸாம். நீயா படிச்சு பாஸ் பண்ணிக்கோ’னு டீச்சர் சொன்னாங்க. திடீர்னு படிக்கச் சொன்னா எப்படி? பரீட்சையில ஃபெயில் ஆகிட்டேன்.

சின்ன வயசுல இருந்தே ஸ்கூல்ல டிராமா போட்டு நடிக்குறது, டான்ஸ் ஆடுறதுனு துறுதுறுன்னு ஏதாவது செஞ்சுகிட்டே இருப்பேன். அதனால, ஃபெயில் ஆன பிறகு, ஒரு டான்ஸ் குரூப்ல சேர்ந்து கோயில் திருவிழா, கச்சேரிகளில் ஆட ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல சினிமா ஆசை வந்து,  வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.

இனிதான் என் கணக்கு ஆரம்பம் !

அப்ப பாரதிராஜா சார் 'கடல் பூக்கள்’ படத்துல நடிப்பதற்காக ஆள் எடுத்துட்டு இருந்தார். வாட்ச்மேனை ஏமாத்தி ரிகர்சல் ஹாலுக்குள்ள போயிட்டேன். என்னைப் பார்த்த பாரதிராஜா, 'என்னப்பா வேணும்? ஆள் எடுத்தாச்சி. அடுத்த படத்துக்கு வா... வாய்ப்புத் தர்றேன்’னார். உடனே நான் அவர் மாதிரி கரகர குரல்லயே, 'தயவு செஞ்சு எனக்கு ஒரு வாய்ப்புத் தாங்க. நான் நடிச்சா உங்க படத்துலதான் நடிப்பேன். இல்ல, எனக்கு சினிமாவே வேணாம்’னு சொன்னேன். பகபகன்னு சிரிச்சுட்டார். 'வாடா, வாடா... என்கிட்டயே வந்து என் குரல்லயே பேசி உரிமையா வாய்ப்புக் கேட்குற.. உனக்கு இந்தப் படத்துல கண்டிப்பா சான்ஸ் இருக்கு’னு சொன்னார். அந்தப் படத்துல சந்தானபாரதிக்கு அசிஸ்டென்டா படகு ரிப்பேர் பண்ற கேரக்டர் கொடுத்தார்.

சினிமாவுக்காகப் பாதி நாட்கள் சென்னையில அலைஞ்சாலும், மத்த நாட்கள்ல கரூர் வந்துடுவேன். என்னோட 18-வது வயசுலேயே தனியா டான்ஸ் குரூப் ஆரம்பிச்சுட்டேன். இப்ப என் குரூப்ல 30 பேர் இருக்காங்க. என்கிட்ட பயிற்சி எடுத்த பலரும் தனி டான்ஸ் குரூப் ஆரம்பிச்சுட்டாங்க. பங்குனி, சித்திரை, வைகாசி எல்லாம் சீஸன் டைம். அப்ப  நிறைய புரொகிராம் இருக்கும். எய்ட்ஸ், தொழுநோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நிதி திரட்டும் டான்ஸ் ஷோக்களும் பண்ணி இருக்கேன். 'இனி ஒரு விதி செய்வோம்’, 'குடி’, என லஞ்சம் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகளை அடிப்படையாக வைத்து நான்கு குறும்படங்கள் இயக்கி நடிச்சு இருக்கேன். அதே போல் நான்கு டான்ஸ் ஆல்பங்களும் தயாரிச்சு இருக்கேன்.

சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடி அலைஞ்சதுல, 'மிருகம்’, 'முத்திரை’, 'பிரம்மபுத்திரா’ன்னு 10 படங்களில் சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. இத்தனை வருஷ உழைப்பு, தேடலின் பலனா இப்ப சிம்புவோட 'வாலு’ படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறேன். இனிமேதான் சினிமாவுல என் கணக்கை ஆரம்பிக்கணும்!''- நம்பிக்கையுடன் சொல்கிறார் குணா.

அடுத்த கட்டுரைக்கு