என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

உபதேசம்!

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

மீபத்தில், திருவள்ளூரில் இருந்து கிண்டி வந்து இறங்கினேன். அங்கிருந்து ஈக்காட்டுத்தாங்கலுக்குச் செல்ல ஓர் ஆட்டோ பிடித்து, 70 ரூபாய் கொடுத்தேன். இதுபோல, ஒவ்வொருமுறை வரும்போதும், ஆட்டோ டிரைவர்களிடம், 'என்னப்பா, திருவள்ளூரில் இருந்து சென்னைக்கே பஸ்ஸில் 15 ரூபாய்தான் கேட்குறான்.  நீ 70 ரூபாய் கேட்கிறாயே?’ என்று புலம்புவேன். அவர்கள் எல்லோருமே, 'என்ன சார் செய்வது? பெட்ரோல் விலை ஏறிப்போச்சு... சவாரி கிடைப்பது கஷ்டம்’ என்று பதிலுக்குப் புலம்புவார்கள். ஆனால், இந்த முறை ஆட்டோ ஓட்டிவந்தவர், எனக்காகவே அனுப்பப்பட்டவர். என் வழக்கமான புலம்பலைக் கேட்டதுமே, போட்டார் ஒரு போடு. 'ஏன் சார், திருவள்ளூரில் இருந்து பஸ்ஸில் உங்கள் ஒருவரை மட்டுமா 15 ரூபாய்க்குக்  கூட்டிவந்தார்கள்? எத்தனை பேரோடு உங்களை அடைத்து வைத்துக்கொண்டுவந்து இறக்கி விடு கிறார்கள்?’ என்று.

அப்போது மூடிய என் வாய், இப்போதெல்லாம் ஆட்டோக் களில் திறப்பதே இல்லை!

அழைத்தால் நீ வருவாயோ?

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

'ஆயிரம் நாமம் தன்னில் எதைச் சொல்லி அழைத்தால் நீ வருவாயோ’ என்கிற ஒரு பாடல் மதுரை சோமு அவர்களால் பாடப்பட்டு மிகவும் பிரபலமானது. யோசித்துப் பார்க்கையில், நம் எல்லோருக்குமே ஆயிரம் நாமம் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் சில டஜன் பெயர்களாவது இருப்பது உறுதி. பிறந்தவுடன் குட்டிப்பாப்பா என்று ஆரம்பிக்கிற பேர், அப்புறம் விதவிதமாகப் போகும்.

இன்றைய தினம் புதிதாக வந்திருக்கும் வழக்கப்படி, பிறப்பது ஆணாக இருந்தால் இன்ன பெயர், அல்லது, பெண்ணாக இருந்தால் இன்ன பெயர் என்று முன்பே பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு, பிறப்புச் சான்றிதழில் பெயருடனே குழந்தைகள் 'பிறக்கிறார்கள்’. நாங்கள் எல்லாம் அந்தக் காலம். நான்காவது பாரம் (ஒன்பதாம் கிளாஸ்) வரை எந்தப் பெயரில் இருந்தாலும், அப்போது கூப்பிட்டுக் கேட்பார்கள். 'உன்னுடைய பெயரும், பிறந்த நாளும் சரியாக இருக்கிறதா, அல்லது மாற்ற வேண்டுமா’ என்று. ஏனென்றால், ஒருமுறை எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் பதிவாகிவிட்டால், மாற்றுவது என்பது சிரமமான காரியம்.

அநேகமாகச் சான்றிதழில் உள்ள பெயர் ஒன்றாகவும், கூப்பிடுவது வேறு ஒன்றாகவும்தான் இருக்கும். இது தவிர, பட்டப்பெயர்கள், காரணப் பெயர்கள், என்று எத்தனையோ...

நண்பர்கள் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பெயர்களே வேறு. பன்னிக்குட்டி, நாய் என்று இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், இப்போது என் நண்பன், 'ஏய், அறிவு கெட்ட முண்டம், எவ்வளவு நேரமாகக் கூப்பிடுவது’ என்று அன்போடு அழைப்பதால், மீண்டும் சந்திப்போம்!

வயதும் வருடங்களும்!

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

எங்கள் கண் முன்னே வளர்ந்த எங்களுடையப் பெண் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகளுடன் எங்கள் வீட்டுக்கு வருகை தரும்போது எல்லாம் என் சகோதரர் சொல்வார்: ''இவர்களை எல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்கிற நினைவே தோன்றுகிறது'' என்று. உண்மையான பேச்சு. மனத்தளவில் எவ்வளவு இளமையாக உணர்ந்தாலும், சமூக நாகரீகம் கருதி அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினாலோ என்னவோ, அநேகமாக எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் என் சுபாவப்படியே இயல்பாகத்தான் பழகிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் நேரில் சொல்வது 'கொடுத்து வைத்தவர் ஐயா நீர்,  உமது வயதே தெரியவில்லை’ என்று. பின்னால் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள் என்பதைப் பற்றி, நமக்கென்ன கவலை!

இருக்கட்டுமே!

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்

இன்று வந்துள்ள ஓர் செய்தி:

அகண்ட வலையில், சுமாராக 33 மில்லியன் (மூன்று கோடியே முப்பது லட்சம்) வலைப் பூக்கள் பதிக்கப்படுகின்றனவாம். இவற்றில் பெரும்பான்மையானவற்றுக்கு ஒரே ஒரு வாசகர் மட்டுமே இருக்கிறாராம். அதாவது, அதை எழுதியவர் மட்டுமே படிக்கிறாராம்.

இருக்கட்டுமே... நான் எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே. அவற்றை மற்றவர்கள் படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம், அவரவர் அதிர்ஷ்டம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வலையைத் தீந்தமிழால் நிரப்புவோம்... வாருங்கள், நண்பர்களே!

வலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்