என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

பெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு!

பெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு!

##~##

கிழக்கில் தோன்றும் சூரியன் மேற்கில் மறைந்து மீண்டும் கிழக்கில் வருவதற்குள் எத்தனையோ காட்சிகள் மாறும். ஆனால், உழைப்பாளர்களின் காட்சிகளும் கனவுகளும் எப்போதும் பசை தடவி ஒட்டிய கறுப்பு-வெள்ளை சுவரொட்டிகள்தான். அந்த உழைப்பாளர்களைச் சற்றே அருகில் சென்றுப் பார்த்து இருக்கிறீர்களா?

 திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியர்வை வழிந்தோடக் கை வண்டி இழுக்கிறார் சண்முகம். ''ராத்திரி, பகல் எப்ப வேணாலும் லோடு அடிப்பேன். 75 கிலோ உள்ள 10 மூட்டையை ஒரே நடையில இழுப்பேன். மூட்டைக்கு இவ்ளோனு சம்பளம். பொண்டாட்டி, பிள்ளைங்களை வீட்டோட உக்காரவெச்சு சோறு போடுறேன்பா. பொண்ணு இங்கிலீஷ் மீடியம் படிக்குது. எது வேணும்னு கேட்டாலும் வாங்கித் தந்துடுவேன். இதோ... இன்னிக்கு இது வேணுமாம்'' என்று இடுப்பில் இருந்து ஒரு துண்டுச் சீட்டை உருவிக் காண்பிக்கிறார். அதில், 'ஜுவாலஜி நோட்ஸ் ஒன்பதாம் வகுப்பு’ என்றும் வாங்க வேண்டிய கடையின் விலாசமும் குறிக்கப்பட்டு இருக்கிறது. ''நாமதான் படிக்கல. புள்ளையாச்சும் படிக்கணும்ல?'' - புஜங்களை இறுக்கி தம் பிடித்து வண்டியை இழுக்கிறார்.

பெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு!

அதேபோல் கைவண்டி இழுக்கும் சதீஷ§க்கு வயது 20தான் இருக்கும். ''ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன். 712 மார்க். மேற்கொண்டு காலேஜ்ல சேர  வசதி இல்ல. எனக்கு ரெண்டு தங்கச்சி. நான்தானே கட்டிக் கொடுக்கணும்? அதான் வேலைக்கு வந்துட்டேன்'' என்கிறார் பாசமான குரலோடு.  

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கண்மணி, மார்க்கெட் வாசலில் பூ விற்கிறார். ''வீட்டுக்காரர் ஈரோட்டுல பனியன் கம்பனியில வேலை பாக்குறாரு. இந்தக் கடையை எங்க அண்ணன்தான் எனக்கு வெச்சுக் கொடுத்தாரு. அதனால, வர்ற காசுல ஆளுக்குப் பாதி எடுத்துப்போம். என்னோட ரெண்டு பையன்களையும் நல்லாப் படிக்கவெக்கணும். காலையில 3 மணிக்கெல்லாம் கிளம்பி வியாபாரத்துக்கு வந்துடுவேன். நைட்டு கிளம்ப மணி 11 ஆகிடும்'' என்றவரின் கைகள் பரபரவென பூ கோத்துக்கொண்டு இருக் கின்றன.  

கடைவிரித்து மாம்பழம் விற்கும் சேகர் ஒரு மாற்றுத் திறனாளி. ''அஞ்சு வயசு வரைக்கும் நல்லாதான் இருந்தேன். அதுக்கப்புறமா போலியோ அட்டாக்கால என்னோட இடது கால் வேலை செய்யல. கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன். பத்தாவதுக்கு மேல படிக்கல. இந்த வியாபாரத்துல ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரைக்கும் வருமானம் வருது. ரெண்டு வருஷம் கழிச்சுக் கல்யாணம் பன்ணிக்கலாம்னு இருக்கேன்'' சொல்லும்போதே சேகரின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது. அந்த ஏரியா வியாபாரிகளிலேயே எப்போதும் கலகலப்பாக இருப்பவர் சேகர்தானாம்.

பெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு!

'கேரி பேக்’கில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு பாக்கெட் 15 ரூபாய், 20 ரூபாய் என்று பேருந்துகளில் விற்கும் விக்னேஷ§க்கு வயது 17-தான் இருக்கும். கையில் ஒரு கோலின் உதவியோடு விந்தி விந்தி நடந்து பூ விற்கிறான். ''பூ வாங்கிக் குங்க அண்ணா?'' கேரிபேக்கை நீட்டியவனிடம் விசாரித்தால், ''மூணு வருஷத்துக்கு முன்னாடி பஸ்ல இருந்து இறங்கும்போது வண்டியில மாட்டிக்கிட்டேன். ஒரு கால் போயிடுச்சு. அடிபட்டதுக்கு அப்புறம் ஸ்கூல் போகல. காலைல 8 மணிக்கு வந்துட்டா சாயந்திரம் 6 மணிக்குத்தான் போவேன். கொஞ்ச நாள்ல பணம் சம்பாதிச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணும்'' என்கிறான் சாதாரணமாக.

பைக், கார் என்று நாகரிகம் வளர்ந்துவிட்டாலும், ரிக்ஷா வண்டிகள் இன்னமும் காணக் கிடைக்கின்றன. 38 வயதான பெரியசாமி ஒரு ரிக்ஷா தொழிலாளி. ''அப்பப்பதான் ரிக்ஷா ஓட்டுவேன். குறைஞ்சது 30 ரூபா வாங்குவேன். பெட்ரோல் விலை ஏறினாதான் நமக்குப் பொழப்பு நல்லா இருக்கும். இப்ப எப்படியும் 200 ரூபா சம்பாதிச்சுடுவேன். நமக்கு ஒரு கட்டிங் போக மீதிக் காசை வீட்டுல கொடுத்துடுவேன்'' தாடியை சொரிந்துகொண்டே சவாரி வருகிறதா என நோட்டம்விடுகிறார்.

நாலாபுறமும் இருந்து வியாபாரக் குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்க, சத்தம் இல்லாமல் மேற்கு நோக்கி நகர்கிறது சூரியன்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ர.அருண் பாண்டியன்