Published:Updated:

என் ஊர் : நாகூர்

சகல கலைகளிலும் முத்திரை பதித்த ஊர்!

என் ஊர் : நாகூர்

சகல கலைகளிலும் முத்திரை பதித்த ஊர்!

Published:Updated:
##~##

தான் பிறந்து வளர்ந்த ஊரான நாகூரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தா ளர் நாகூர் ரூமி.

 ''ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும்என்றும் கூறுவார்கள். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக் கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர். நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நக்கீரர் என்று குறிப்பிடப்பட்டவர். 'வித்தியா விசாரிணி’, 'ஞானாசிரியன்’ ஆகிய பத்திரிகைகளை 1888-ல் நடத்தியவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர் : நாகூர்

தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லிம் பெண்மணி மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவருடைய 'காதலா கடமையா’ என்கிற நாவல்   1938-ம் ஆண்டு உ.வே.சா-வின் முன்னுரை, புதுமைப்பித்த னின் வாழ்த்துரையுடன் வெளிவந்தது. கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள்தான்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கம்ப ராமாயண அறிஞருமான எம்.எம்.இஸ்மாயில், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞரும்  பேச்சாளருமான இஜெட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயில் என்று இலக்கியம், கவிதை, நீதித் துறை, திரைத் துறை எனப் பல பரிமாணங்களைக்கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது.

இசைத் துறையில் நாகூரின் பங்களிப்பு அதிசயமானது. கர்னாடக இசையில் கரை கண்டவர் நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர். அதுபோல் நாகூர் இ.எம்.ஹனிஃபா என்றால் தெரியாதத் தமிழர்கள் எவரும் இருக்க முடியாது.

என் ஊர் : நாகூர்

நாகூரில் இலக்கியத்தோடு பின்னிப் பிணைந்தது ஆன்மிகம். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் சாகுல் ஹமீது காதிர் வலீ மகான், உத்தரப்பிரதேசத்தில் இருந்த மாணிக்பூரில் இருந்து நாகூருக்கு வந்து, 28 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, நாகூருக்குப் புகழைக் கொடுத்தவர். முஸ்லிம்களின் மீது வெறுப்புகொண்டு வன்முறையில் ஈடுபட்ட போர்ச்சுகீசியர்களை எதிர்த்துப் போர் செய்ய, குஞ்சாலி மரைக்காயர் போன்ற வீரர்களை உருவாக்கி இந்திய விடுதலைக்கும் தொண்டாற்றினார்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகூர் தர்ஹாவுக்கு வரும் பத்துப் பேரில் ஒன்பது பேர் முஸ்லிம் அல்லாதவர்களாகவே இருப்பார்கள். நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் 14 நாட்கள் நடக்கும் கந்தூரி விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இருந்து வந்து கலந்துகொள்கின்றனர்.

500 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் ஊராக உள்ளது எங்கள் ஊர். நாகூர் தர்ஹாவுக்கு ஐந்து மினா ராக்கள் அழகு சேர்க்கின்றன. அதில் பிரதான வாசலின் எதிரில் இருக்கும் 131 அடி உயர, பத்து அடுக்குகள் கொண்ட பெரிய மினாராவைக் கட்டிக்கொடுத்தவர்

என் ஊர் : நாகூர்

தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாப் சிங். நாகூர் நாயகம் அடக்கம் செய்யப்பட்டு  உள்ள மூலஸ்தானத்தையும் மேல் விட்டத்தையும் முதன்முதலில் கட்டிக் கொடுத்தது கடற்கரை ஓரமாக வாழும் பட்டினச் சேரியைச் சேர்ந்த மீனவர்கள்.

கந்தூரி பத்தாம் நாள் நாகூர் நாயகத்தின் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். அப்போது சமாதியில் போர்த்தப்படும் போர்வையை நெய்து தருவது சென்னையைச் சேர்ந்த றா.பழனியாண்டிப் பிள்ளையின் குடும்பத்தினர். நாகூர் நாயகத்தின் அடக்க ஸ்தலத்துக்கு மேல் இருக்கும் கும்பத்தின் தங்கக் கலசம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த மகாதேவ அய்யரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.

தர்ஹாவுக்கான தளத்தை கோவிந்தசாமி செட்டி என்பவர் அமைத்துக்கொடுத்துள்ளார். கந்தூரி ஊர்வலத்தில் சந்தனக் கூடுக்கு முன் வரும் பல்லக்கு செட்டியார்களால் செய்யப் படுவது. அதற்குச் 'செட்டிப் பல்லக்கு’ என்றே பெயர். நாகூரின் பிரதான சாலையில் 'கூட்டு ஃபாத்திஹா வீடு’ என்று உள்ளது. கந்தூரி விழா நடக்கும் 14 நாட்களும் இந்துப் பெருமக்கள்அவர் களுடைய செலவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் இடம் அது.

பேச்சு, எழுத்து, இசை, கலை, ஆன்மிகம், வாணிகம் எனப் பல துறைகளில் கேட்பவர்களை மூக்கில் விரல் வைக்கவைக்கும் ஊர் நாகூர் என்பது உண்மை!''

படங்கள்: ச.வெங்கடேசன், செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism