Published:Updated:

அழி மீன் பிடிக்கிறதுனா என்ன?

கோனாப்பட்டு மீன்பிடி திருவிழா

##~##

கார், பைக், லாரி எனப் பல்வேறு வாகனங்களும் சீறிப் பாய்கின்றன. விரைகின்ற அத்தனை மக்களின் கையிலும் கூம்பு வடிவ கூடை. புகையைக் கிளப்பிக்கொண்டு பரபரப்போடு பயணித்துக்கொண்டு இருக்கும் அந்த வாகனங்க ளுக்குப் பின்னால் என்னுடைய வாகனமும் பயணிக்கிறது.

 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் இருக்கும் கோனாப்பட்டு எனும் கிராமத்தில் அனைத்து வாகனங்களும் நிற்கின்றன. அங்கே வாகனங்களில் வந்ததைவிட அதிகமான கூட்டம் காத்திருக்கிறது. அங்கே நடக்கப்போவது மீன்பிடி திருவிழா.

காலை 6 மணிக்கே அவ்வளவுக் கூட்டம். மொத்தக் கூட்டத்தையும் மஞ்சு விரட்டு நடக்கும் மாட்டுத் தொழுவத்தில் அமர வைக்கிறார்கள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ''டோக்கன் வாங்காதவங்க வந்து வாங்கிக்குங்க...'' என ஒலிப்பெருக்கி அலறிக்கொண்டே இருக்கிறது. டோக்கன் 100 ரூபாய். ''கம்மாய்க்குள்ள யாரும் வலை எடுத்துக்கிட்டு போகக்கூடாது. 8 மணிக்கு முன் னாடி யாரும் கம்மாய்க்குள்ள எறங்கக் கூடாது. யாராவது மீறி கம்மாய்க்குள்ள எறங்கி ஊத்தா குத்துனா அடிதான்...''

அழி மீன் பிடிக்கிறதுனா என்ன?

அந்தக் கூம்பு வடிவ கூடையின் பெயர்தான் ஊத்தா. ஆனாலும், 7 மணிக்கே கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திருவிழா ஆரம்பிக் கிறது. தொழுவத்தில் அமர்ந்து இருந்த சுமார் ஆயிரம் பேரும் பி.டி.உஷா கணக்காகப் பறக்கிறார் கள். அருகில் இருந்த அந்தக் கம்மாய்க்குள் இறங்கி அடுத்த கரை வரைக்கும் நடந்துச் செல் கிறார்கள். மீண்டும் இந்தக் கரைக்கு வந்து அதன் பிறகுதான் ஊத்தாவைத் தண்ணீருக்குள் அமுக்கி மீனைப் பிடிக்கிறார்கள். இதை எல்லாம் ஒழுங்குபடுத்த 20 பேர் கொண்ட குழு சுற்றித் திரிகிறது. அவர்கள் அனைவரும் கோனாப்பட்டு கிராமத்தினராம்.

இறங்கியவர்கள் முகத்தில் அடுத்த ஒரு சில நிமிடங்களில் பெரும் மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான மீன் களைச் சுமந்துவந்து அங்கே மீன் வாங்க காத்தி ருப்பவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். சிறிய மூன்று விரால் மீன்களை வைத்துக்கொண்டு, ''400 ரூபாய் கொடுங்கக்கா...'' என்று கேட்க... ''என்னப்பா இந்த மீனுக்கு இவ்வளவு வெலையா?'' என விலைக் கேட்ட பெண் வியக்கிறார். மீனைக் கொண்டுவந்தவர், ''அடப்போங் கக்கா... நேத்து ராத்திரியே வெளியூருல இருந்து வண்டி எடுத்துக்கிட்டு இங்க வந்து, ராப்பூரா காத்திருந்து மீனைப் புடிச்சிக் குடுத்தா பேரம் பேசுறீங்க?'' என்று சொல்ல... அந்தப் பெண் மறுப்பேச்சு பேசாமல் கேட்ட காசைக் கொடுத்துவிட்டு மீனை வாங்கிச் செல்கிறார்.

அழி மீன் பிடிக்கிறதுனா என்ன?

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பனைச் சந்தித்தேன். ''இந்த ஊருல மன்னர் காலத்துல இருந்து மீன்பிடி திருவிழா நடத்திட்டு இருக்கோம். இந்தக் கம்மாய் இங்க இருக்கிற கொப்புடையம்மன் கோயிலுக்குச் சொந்தமானது. இந்தக் கோயிலுக்கு வைகாசி மாசம் திருவிழா நடத்துவோம். அந்தத் திருவிழா முடிஞ்சதும், எப்ப கம்மாய்ல மீன் பிடிக்கிறதுன்னு ஊர்க் கூடி முடிவு பண்ணுவோம். இந்த ஊருல இருக் குறவங்க அவங்கவங்க சொந்த பந்தத்துக்குச் சொல்லிவிட்டுருவாங்க. அவங்களும் தெரிஞ்சவங்களுக்குச் சொல்ல, அப்படித்தான் இங்க கூட்டம் கூடுது'' என்றார்.

அழி மீன் பிடிக்கிறதுனா என்ன?

சண்முகம் என்பவரோ, ''வெள்ளம் வர்ற நேரத்துல கம்மா வடிகால்ல இங்க இருக்குற மீன்கள் தப்பிச்சிப் போனாலும் அதை யாரும் புடிக்க மாட்டாங்க. காரணம், சாமி சோதனைக் காண்பிச்சிடும். இதுல வர்ற வருமானத்தை வெச்சு இந்தக் கம்மாயைப் பராமரிப்போம். மழைக் காலங்கள்ல கம்மாய் உடைப்பெடுத்தா அரசாங்கத்தை எதிர்பார்க்கிறது இல்ல. நாங்களே சரி பண்ணிடுவோம். கோயில் செலவு, பொதுச் செலவு எல்லாத்தையும் இந்தப் பணத்தைக் கொண்டே பாத்துக்குவோம்.

கார்த்திகை மாசமே இந்தக் கம்மாயில விடுறதுக்காக தஞ்சாவூர் பக்கம் போயி மீன் குஞ்சுகளை வாங்கிவருவோம். இப்ப மீன் புடிக் கிறவங்க ஒரு மணி நேரத்துல கரையேறி டுவாங்க. அதுக்கப்புறமும் கம்மாய்க்குள்ள எறங்குனவங்களை ஏமாத்திட்டு மீனுங்க உள்ளே கெடக்கும். அதை அழிமீன் புடிக்கிறதுன்னு சொல்லுவோம். எங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க மட்டும் அதுல கலந்துக்குவாங்க. பக்கத்துல இருக் கிற மலைமேல ஏறி நின்னு வெள்ளைக் கொடி காட்டுவோம். அதுதான் சிக்னல். அதைப் பார்த்ததும் கிராமத்து சனங்க  அத்தனைப் பேரும் கம்மாய்க்குள்ள பாய்ஞ்சிருவாங்க. அவங்க புடிக்கிற மீனை வீட்டுக்குக் கொண்டுபோயி சமைச்சி சாப்புடுவாங்க'' என்கிறார்.

திருவிழாவில் மீன்பிடிக்க ஆயிரம் பேர் என்றால், பிடித்த மீனை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் அலைமோதுகிறது!

- வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: சாய் தர்மராஜ்

அடுத்த கட்டுரைக்கு