Published:Updated:

குமரம்பட்டி அதிசயம் தொங்கும் பாலம்!

குமரம்பட்டி அதிசயம் தொங்கும் பாலம்!

##~##

''திருச்சி மாவட்டம் குமரம்பட்டி என்ற மலையடிவார கிராமத்தில் 100 அடி உயரத்தில் கட்டப்பட்ட ரயில்வே தொங்கும் பாலம்தான் தென்னிந்தியாவின் முதல் ரயில்வே தொங்கும் பாலம். அங்குச் சென்றால் ஏகப்பட்ட ஆச்சர்யங்களைச் சந்திக்கலாம்!'' இப்படி ஒரு தகவலை என் விகடன் வாசகர் அருண் வாய்ஸ் ஸ்நாப்பில் தெரிவித்து இருந்தார்.

 மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 25-வது கிலோ மீட்டரில் இருக்கிறது கீரனூர். ரோட்டில் நடந்து வந்த சிலரிடம் விசாரித்தால், ''இப்படியே தெற்கே நடந்து போங்க... ரெண்டு, மூணு கிலோ மீட்டர் தூரத்துல குமரம்பட்டி வந்துடும்'' என்றனர்.

''ஏங்க பஸ், ஆட்டோ எதுவும் கிடையாதா?'' என்று கேட்ட என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நடையைக் கட்டினார்கள். 30 அடி தூரம் நடந்ததுமே காடு சூழ்ந்துகொள்கிறது. சுற்றிலும்  மலைகள், ஆங்காங்கே கம்பு விளைகின்ற தோட்டங்கள்!

குமரம்பட்டி அதிசயம் தொங்கும் பாலம்!

நடந்த களைப்பும் வெயிலின் தீவிரமும் சேர்ந்து கால்கள் பின்ன... ஒரு வழியாக குமரம்பட்டியை அடைந்தேன். சில வீடுகளும் பெட்டிக் கடை ஒன்றும் வரவேற்க... பாலத்துக்குச் செல்லும் வழியைச் சிலர் காண்பித்தனர். களைப்பை மறக்கடித்து என்னை ஆச்சர்யப்படுத்தியது தொங்கும் பாலம்.

சராசரி நில மட்டத்தில்தான் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது என்றாலும், அதற்கு அடியில் கிட்டத்தட்ட 100 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி ரயில்வே இருப்புப் பாதை அமைத்திருக்கிறார்கள். 30 அடி நீளம் இருக்கும் பாலத்துக்கு அடியில் எந்தவிதமான தூண் பிடிமானமும் கிடையாது. மேலே நடை பாலம், அதற்குக் கீழே நீர் செல்வதற்கு ஐந்து அடி அகல கால் வாய், 100 அடிக்குக் கீழே ரயில் தண்டவாளம்.

''இந்தப் பாலம் கட்டி 15 வருஷங்கள் இருக்கும். இந்தப் பாலம் இருந்த இடத்தில்தான் முன்பு குமரம்பட்டி கிராமம் இருந்தது. பருத்தி, கடலை, தக்காளி, கத்திரி, மிளகாய்னு நிறைய விளைகிற கிராமம் இது. 'ரயில் பாதை ரொம்ப மேடா இருக்கி றதால, ரயில் போக கஷ்டமா இருக்கு’னு சொல்லி எங்க எல்லோ ரையும் காலி பண்ணச் சொல்லிட்டாங்க. இப்ப பாலத்துக்கு வடக்கே தெற்கேனு குமரம்பட்டி ரெண்டா பிரிஞ்சுடுச்சு'' என்கி றார் ஊர்க்காரரான சின்னத் தம்பி.

குமரம்பட்டி அதிசயம் தொங்கும் பாலம்!

மழைக் காலங்களில் மலையில் இருந்து வடியும் தண்ணீர் மலையடிவாரத்தில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுமாம். அந்தத் தண்ணீரை வெளியேற்றத்தான் பாலத்தில் கால்வாய்க்கான பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. ''ஞாயிறு ஆச்சுன்னா நிறையப் பேர் வருவாங்க. அதுல ஜோடியா வர்றவங்கதான் அதிகம். காலையில வரும்போதே சாப்பாடும் எடுத்துக்கிட்டு வந்துடுவாங்க. திரும்பிப் போக சாயந்திரம் ஆகிடும்'' என்கிறார் அங்கே ஆடு மேய்க் கும் மாரியப்பன்.

குமரம்பட்டி கிராம மக்கள் வழிபடுவது கருமலையில் இருக் கும் சப்த கன்னிகளைக்கொண்ட கன்னிமார் கோயிலின் பெண் தெய்வங்களைத்தான். ''ஆடி மாசத்துல நடக்குற திருவிழாவுல கரடி, குதிரை, சிங்கம், புலி சிலைகள் எடுத்துட்டு போவோம். அப்போ யாரும், 'இது என்ன கரடி சிலை, குதிரை சிலை’னு சொல்லிடக் கூடாது. சொன்னா சாமி கரடியா, குதிரையா வந்து நம்மளக் கொன்னுடும். 10 வரு ஷத்துக்கு முன்னாடி அப்படிச் சொன்ன இரண்டு பேர் செத்துட்டாங்க'' என்று திகில் கிளப்புகிறார் பூசாரி.

உள்ளிருக்கும் ஊர்களுக்கு எந்தவித வாகன வசதியும் கிடையாது. ''குமரம்பட்டிக்கு வாரம் ஒருநாள் வியாழக்கிழமை மட்டும் ஆட்டோ வரும். அன்னைக்குப் பக்கத்துல இருக்குற அய்யலூர்ல வாரச்சந்தை. அங்கே போய் வீட்டுக்குத் தேவையானப் பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம். இங்கே விளையுற பொருட்களையும் அங்கே கொண்டுபோய் வித்திட்டு வருவோம்'' என்கிறார்கள்.

இருட்டிக்கொண்டே வர... மெயின் ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படம்: ர.அருண் பாண்டியன்

அடுத்த கட்டுரைக்கு