Published:Updated:

என் ஊர் : கயத்தூர்

கயத்தூர் பண்ணையம்... காசு நிச்சயம்!

##~##

திரைப்பட இயக்குநர் எழில் தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், கயத்தூர் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

 ''எங்க கயத்தூர் கிராமம், கோயில்களுக்கு ரொம்பப் பிரசித்தி பெற்ற ஊர். இங்கே இருக்கிற திருக்கண்டபுரம் பெருமாள் கோயிலும் திருப்புகலூர் கோயிலும் தமிழகம் முழுவதும் பிரபலமான கோயில்கள். திருக்கண்டபுரம் கோயில் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியான  முக்கியமான வைணவ ஸ்தலம். திருப்புகலூர் கோயில் வாஸ்துவுக்குப் பெயர்பெற்றது. இந்தக் கோயிலில் இருந்து ஒரு சின்னக் கல்லை எடுத்துட்டுப் போய், வீடு கட்டத் தொடங்கும்போது பயன்படுத்தினா, ரொம்ப நல்லதுன்னு நம்பிக்கை இருக்கு.

பள்ளி நாட்களில் திருப்புகலூர் கோயில் கோபுரம் மேல ஏறி உக்கார்ந்து நானும் என் நண்பர்களும் பாடம் படிப்போம். அங்க இருந்து, காவிரிக் கரையில் அமைந்து இருக்கும்  கயத்தூரைப் பார்த்தோம்னா அவ்வளவு அழகாகத் தெரியும். வளர்ந்த பிறகு எனக்கு சைக்கிள்தான் எல்லாமே. இங்கே இருந்து மாயவரம், காரைக்கால், நாகை போன்ற ஊர்களுக்கு எல்லாம் நண்பர்களோட சேர்ந்து சைக்கிள்லயே போவேன். பார்க்குறவங்களுக்கு அது ஒரு சைக்கிள் பேரணி மாதிரியே இருக்கும்.

என் ஊர் : கயத்தூர்

அப்போ எங்க ஊர் மக்களுக்கு விவசாயம்தான் எல்லாமே. முப்போகமும் தண்ணீர் கிடைச்சு, விவசாயம் செழிப்பா இருந்தது. காவிரிதான் முக்கிய நீர் ஆதாரமே. தண்ணீர் பஞ்சம்னு ஒண்ணை அப்ப நாங்கல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் வந்து விவசாயம் பார்த்துட்டுப் போவாங்க. 'கயத்தூர்ல பண்ணையம் பண்ணா காசு நிச்சயம்பா!’னு வெளியூர் விவசாயிகள் மத்தியில் எப்பவும் ஒரு பேச்சு இருக்கும். அப்படி விவசாயமே பிரதானமா இருந்த கயத்தூர்ல இப்ப முன்பு மாதிரி விவசாயம் நடக்குறதில்லை.

என் படங்கள்ல வரும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு எங்க ஊரும் ஒரு முக்கியக் காரணம். எங்க வீட்டுக்குப் பக்கத்துல 'வவ்வாலடி’னு ஒரு கடைத்தெரு இருக்கு. அங்கதான் எங்க ஊர்க்காரங்க எல்லாரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவாங்க. வயசுப் பசங்களுக்கு அதுதான்  பொழுதுபோக்கு ஏரியா. என்னோட இள வயசுல பாதி நேரம் அங்கேதான் இருப்பேன். அங்கே நடந்த பல சம்பவங்களை என் படத்துல காட்சிகளா வெச்சு இருக்கேன்.

என் ஊர் : கயத்தூர்

எங்க ஊர்ல கபடிக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க. இந்தியக் கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம், இ.பி. கணேசன் ரெண்டு பேரும் எங்க ஊர்ல பிறந்தவங்கதான்.  'கணேஷ் பிரதர்ஸ் கபடி டீம்’னா சுத்து வட்டாரத்துல எல்லாருக்குமே தெரியும். கபடி மேட்ச் விளையாட ஊர் ஊராக் கிளம்பிடுவோம். எங்ககிட்ட பஸ்ஸுக்குப் போறதுக்கு மட்டும்தான்  காசு இருக்கும். திரும்ப வர்றது நாங்க ஜெயிச்சு வாங்குற பரிசுப் பணத்துலதான். தோத்துப் போற சமயங்கள்ல பக்கத்துல எங்கேயாவது கபடி மேட்ச் நடக்குதான்னு விசாரிச்சு, அங்கே போய் ஜெயிச்சுட்டு ஊருக்குத் திரும்பிவருவோம்.

எங்க வீட்டுக்குப் பின்னாடியே காவிரி ஆற்றுக்கரை. ஆடிப்பெருக்கு விழா அன்னைக்கு ஊர்ப் பெண்கள் எல்லாம் அந்த ஆற்றங்கரையில் கூடி, பேரிக்காய் வெச்சுப் படையல் போட்டு வழிபட்டு மஞ்சள் கயிறு கட்டிக்கிட்டு அந்தத் திருநாளைக் கொண்டாடுவாங்க. சிறுவயதில் நாங்கள் கொண்டாடிய ஒவ்வொரு ஆடிப்பெருக்கு விழாவும் இன்னும் என் மனசில் அப்படியே இருக்கு. ஆனா, கடந்த 18 வருஷமா கயத்தூர்ல ஆடிப்பெருக்கு விழாவை விசேஷமா கொண்டாடுறதில்லை. காரணம்... காவிரியில் தண்ணியே இல்லை.

என் ஊர் : கயத்தூர்

இப்படி என் படங்கள் போலவே என் ஊரும் எனக்கு வெவ்வேறு வகையான காட்சிகளைத் தந்திருக்கிறது. எப்பவும் அது என் மனதில் இருக்கும்!''

- உ.அருண்குமார் படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு