Published:Updated:

அலறல் சத்தங்கள்... ஆனந்தப் புன்னகை!

அலறல் சத்தங்கள்... ஆனந்தப் புன்னகை!

##~##

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம்.

 சைரன் விடாமல் அலற, விபத்தில் சிக்கி கை, கால்களை இழந்தவர்கள் ஸ்ட்ரெக்சரில் தள்ளப்படும் அதே வேளையில், நீண்ட தவத்துக்குப் பிறகு தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தைச் சாக்லேட் கொடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார் ஒரு தந்தை.

உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் அழுக்கேறிப் போய், தள்ளாத வயதிலும் மருந்து வாங்க க்யூவில் நிற்கும் பெரியவர்... மரத்தடிக் குழாயில் பத்துப் பதினைந்து பேர் நிற்க, கூச்சத்துடன்  குளிக்கும் பெண்கள்... அப்பா ஐ.சி.யு-வில் இருக்க வாசலில் கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள்... என எங்கும் நிறைந்து இருக்கின்றன எளிமையான மனித முகங்கள்.

மருத்துவமனையின் முகப்பில் புற நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் இருக்கிறது அந்த மரம். மஞ்சள், குங்குமம், பட்டுத்துணி எனப் பார்ப்பதற்கு அது ஒரு மினி கோயில். ''வீட்டுக்காரருக்கு கால்ல அடிபட்டுடுச்சிங்க. எலும்பு உடைஞ்சுடுச்சாம். ஓடி ஓடி குடும்பத்தைக் காப்பாத்துன மனுஷனுக்கு இப்படி ஆயிடுச்சு'' -சொல்லி முடிக் கும்போதே கண்ணீர் முட்டிக்கொண்டு வர, ஈரத் துணி யோடு மரத்தைச் சுற்றத் தொடங்குகிறார் அந்தப் பெண்.

அலறல் சத்தங்கள்... ஆனந்தப் புன்னகை!

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேர் எதிரே இருக்கிறது மகப்பேறு நலப்பிரிவு. பூட்டப்பட்ட கேட்டுக்கு வெளியே குடும்பம் குடும்பமாக காத்திருக்கிறார்கள். ''ஊரு ஆத்தூரு. இப்பதான் முதல் புள்ள... பொம்பளப் புள்ள பொறந்துருக்கு'' -தெரிந்தவர் தெரியாதவர் என எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் ஆனந்தப் புன்னகையோடு சொல்லிக்கொண்டு இருக்கிறார் சிவக்குமார்.

மகப்பேறு நலப் பிரிவுக்கு முன்னால் இருக்கும் புங்க மரம் கண்ணாடி வளையல்களால் நிரம்பி வழிகிறது. ''குழந்தை வரம் இல்லாதவங்க, சாமிக்கு வேண்டிகிட்டு இங்கே வந்து வளையலைக் கட்டி வெச்சாக் குழந்தை பிறந்துடும்னு நம்பிக்கை'' என விளக்கம் கொடுக்கிறார்கள். மரத்தின் இலைகளுக்குச் சமமான அளவில் வளையல்களும் காற்றில் ஆடுகின்றன.

அலறல் சத்தங்கள்... ஆனந்தப் புன்னகை!

தன் இரண்டு வயதுக் குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட சிகிச்சைக்கு வந்து இருந்தார் தென்னூரைச் சேர்ந்த பாத்திமா. ''நேத்துலேர்ந்து வயித்தால போகுது. அழுதுட்டே இருக்கா. வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்காரு'' -சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நர்ஸ் ஊசியைத் தயார்படுத்தக் கலவரமாகிறது அவருடைய முகம். குழந்தைக்கு ஊசி குத்திய வலி அவரின் முகத்தில் பரவிக் கண்களில் வழிகிறது.

மருத்துவமனையின் கடைசியில் இருக்கிறது சவக்கிடங்கு. வெறும் கட்டடம் என்றாலும், அதைக் கடப்பவர்கள் ஒருவித திகிலோடுதான் கடக்கிறார்கள். ''வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்காரு. இங்க பொண்டாட்டிக்கு என்ன பிரச்னையோ... மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பத்த வெச்சிட்டா. ஊர்ல இருந்து யாராச்சும் பெரியவங்க வந்து கையெழுத்துப் போட்டாதான் பாடியைத் தருவாங்களாம். யாரும் இன்னும் வரல'' -தெரிந்தவரிடம் போன் போட்டுப் பேசுகிறார் பிராட்டியூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

தொழு நோய், தோல் நோய், பாலியல் நோய் என உச்சபட்ச அபாயப் பிரிவுகள் மருத்துவமனையின் கடைக்கோடியில் இருக்கின்றன.

''சோரியாஸிஸ் வந்துடுச்சு தம்பி. ஒன்றரை மாசமா இங்கதான் இருக்கேன். இன்னும் எவ்ளோ நாள் இருக்கணும்ன்னு தெரியல. வெளியில வந்தே ரொம்ப நாள் ஆயிடுச்சுப்பா. ஒரு கட்டு பீடி மட்டும் வாங்கித் தாயேன்'' எனக் கெஞ்சுகிறார் ஒருவர்.

ஊன்றுகோல் உதவியுடன் கக்கத்தில் மஞ்சள் பையுடன் வந்த முதியவர் ''தம்பி... வார்டு நம்பர் முப்பதுக்கு எப்படிப் போகணும்?'' கேட்கும்போதே சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ்  அலறிக்கொண்டு வர... ஊர்தியைக் கலவரமாகப் பார்க்கிறது கூட்டம்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு