Published:Updated:

சகல கலா டாக்டர் டாக்டர்!

சகல கலா டாக்டர் டாக்டர்!

##~##

35 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் புகழ்பெற்ற காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரின் அறைக்குள் நுழைந்தால் என்னவெல்லாம் இருக்கும்? திருவாரூர் தெற்கு ரத வீதியில் மருத்துவமனை நடத்திவரும் திருநாவுக்கரசுவின் அறைக்குள் நுழைந்தால் நாம் யோசிக்கும் எந்த மருத்துவப் பொருட்களும் இருக்காது.

 வரவேற்பறையில், சுவரில், ஷோ-கேஸில், மேஜையில், நோயாளியைப் பரிசோதிக்கும் படுக்கையில் என்று எங்கு பார்த்தாலும் ஓவியங்கள்தான் காட்சி அளிக்கின்றன. அதுவும் சாதாரண வகை ஓவியங்களோ, மாடர்ன் ஆர்ட் ஓவியங்களோ இல்லை. நானூறு வருடங்களுக்கும் முற்பட்ட ஆட்சியாளர்களான நாயக்கர் மன்னர்கள் காலத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள். அனைத்தும் இவருடைய கைவண்ணம்தான்!

சகல கலா டாக்டர் டாக்டர்!

''என் தந்தை 1964-ல் கும்பகோணத்தில் வேலை பார்த்தபோது நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். கும்பகோணத்தில் இருந்து ரயிலில் தஞ்சாவூர் போவேன். ரயிலில் ஏறும்போது மாணவர்கள் பலர் கையில் சார்ட், பிரஷ், வண்ணங்களை எடுத்துக்கொண்டு இறங்குவார்கள். விசாரித்தபோது, அவர்கள் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படிப்பவர்கள் என்று தெரிந்தது. அதில் ஆர்வமான நான், மருத்துவக் கல்லூரிக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, அந்த மாணவர்களோடு ஓவியப் பள்ளிக்குப் போய்விடுவேன். அவர்கள் வரைவதைப் பார்த்துவிட்டு, நானும் தனியாக வரைந்து பார்ப்பேன். அப்போது அங்கு கல்லூரி முதல்வராக இருந்தவர் ஓவியர் தனபால். நான் தினம்தோறும் வந்து வரைவதை பார்த்துக்கொண்டு இருந்த அவர், என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். 'ஒழுங்காப் போய் மருத்துவம் படி. டாக்டரான பிறகு ஓவியம் வரைய ஆரம்பித்தால் அதன்

சகல கலா டாக்டர் டாக்டர்!

மதிப்பே தனி’ என்று அறிவுரை கூறி என்னை  மருத்துவக் கல்லூரியின் பக்கம் அனுப்பி வைத்தார்.

படிப்பை முடித்துவிட்டாலும் என் ஆர்வம் ஓவியத்தின் மேல்தான் இருந்தது. காஞ்சிபுரத்தில் கேன்சர் மருத்துவமனையில் முதல் டியூட்டி. அங்கே வேலை அதிகம். அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அதுவே வாடிக்கையாகி, ஓய்வு நேரங்களில் எல்லாம் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன்.'' என்று தான் ஓவியரான கதையை விரிவாகச் சொல்லும் திருநாவுக்கரசு, இதுவரை எட்டு ஓவியக் கண்காட்சிகள் நடத்தி இருக்கிறார். சென்னை, பெங்களூரு, கொச்சின், டெல்லி என்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்திருக்கிறது அந்தக் கண்காட்சிகள்.

சகல கலா டாக்டர் டாக்டர்!

அதெல்லாம் சரி... எப்படி நாயக்கர் கால ஓவியக் கலையின் மீது ஆர்வம் வந்தது? ''திருவாருர் பெரிய கோயிலில் அதிகம் இருப்பது நாயக்கர் கால ஓவியங்கள்தான். அங்கு உள்ள தேவாசிரிய மண்டபத்தில் மேற்கூரை முழுவதும் ஓவியங்களால் நிறைந்து உள்ளது. அவற்றைப் பார்த்தபோதுதான் இந்த வகை ஓவியங்களை வரைந்து பார்த்தால் என்ன என்ற எண்ணம்வந்தது. ஆனால், அது மிகவும் சவாலான விஷயம். தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டுதான் கூரையில் இருக்கும் அந்த ஓவியங்களை நன்றாகப் பார்க்க முடியும். அப்படி படுத்தபடி பார்த்துதான் அந்த ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் இந்த ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்தும் அழிந்துவரும் இதனைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சொன்னார். அதனால், இந்த ஓவிய மரபை விடாமல் பிடித்துக் கொண்டேன்'' என்கிறார்.

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு