Published:Updated:

கரூரின் கடைசி சவுரி தாத்தா!

கரூரின் கடைசி சவுரி தாத்தா!

##~##

''கரூர் தான்தோன்றிமலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு தெருவின் பெயர் சவுரிமுடி தெரு!''- என் விகடன் வாசகர் காமராஜ் வாய்ஸ் ஸ்நாப்பில் சொன்ன தகவல் இது. 'இப்படி ஒரு பெயரா?’ என்று ஆச்சர்யத்துடன் விசாரணையில் இறங்கினேன்.

 சவுரிமுடி தெருவுக்குச் சென்று விசாரித்தால், ''சுந்தரம் பெரியவரைக் கேட்டாதான் விவரமா சொல்வாரு'' என்று அவருடைய வீட்டுக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

நரை முடியை அடிக்கடி கோதி விட்டபடி பேசினார் சுந்தரம். ''கரூர் மட்டும் அல்ல, சுத்து வட்டாரத்தில்

கரூரின் கடைசி சவுரி தாத்தா!

சவுரிமுடிக்குப் பிரபலமானது  இந்தத் தெருதான். அப்ப இந்தத் தெருவுல ஐம்பது குடும்பங்களுக்கு மேல இருந்தோம். எல்லோருக்கும் இதே தொழில்தான். பக்கத்துல இருக்குற தாந்தோன்றிமலை பெருமாளுக்கு மொட்டை போட அப்ப எக்கச்சக்க பேர் வருவாங்க. அந்த முடியை கிலோ 30 காசுன்னு எங்கப்பா வாங்கிட்டு வருவாரு. அந்த முடியை  தண்ணியில ஊறப்போட்டு, அரப்பு, சீயக்காய் பவுடர் போட்டு நல்லா கழுவி, வெயில்ல காயப்போடுவோம். அப் புறம் எடுத்துப் பார்த்தா முடி பளபளன்னு இருக்கும். கோரை முடி, சுருள் முடினு தரம் பார்த்து பிரிச்சு வெச்சுக்குவோம். வாசனைக்கு ஜவ்வாது போட்டு, தண்ணியில கழுவி மறுபடி முடியைக் காயப்போட்டா இந்தத் தெருவே கம கமக்கும். இந்த வேலைகளை எல்லாம் காலை நேரத்துல பண்றதால, அப்போ தெருவுல எங்கே பார்த்தாலும் சவுரியா இருக்கும். அதனாலேயே அபசகுனம் ஆகிடும்னு வெளியாட்கள் யாரும் இந்தத் தெருவுக்குக் காலையில வரமாட்டாங்க.  கையால நெய்யத் தொடங்கினா ஒரு சவுரியை நெய்யறதுக்கு நாலு மணி நேரம் பிடிக்கும். ஒவ்வொரு முடியா எடுத்து எடுத்து சேர்க்கணும். எல்லாம் ஒரே அளவுல இருக்கணும். பார்த்துப் பார்த்து சிலை செதுக்குறது போல, சவுரியை நெய்வோம். இந்த சவுரியைப் போட்டுக்கிட்டு பொண்ணுங்க கையை வீசி நடந்து வந்தா, எல்லாப் பசங்க கண்ணும் அவங்க பக்கம்தான் இருக்கும்.

கரூரின் கடைசி சவுரி தாத்தா!

இதுல ஸ்பெஷல் சவுரியும் இருக்கு. வாசனைக்கு ஜவ்வாது, சந்தனம் போட்டு, சாம்பிராணி புகையைக் காட்டி நெய்வோம். அந்த சவுரியை கல்யாணமான பொண்ணுங்க தங்களோட முடியோட சேர்த்துக் கட்டிக்கிட்டா, அந்த வாசனைக்கே புருஷனுங்க சுத்திச்சுத்தி வருவாங்க. அதனாலதான் அப்ப இருந்தவங்க பத்துப் புள்ள பெத்துகிட்டாங்க. இப்ப ரெண்டு புள்ளகூட பெத்துக்காததுக்கு காரணம் இந்த சவுரி முடி வியாபாரம் குறைஞ்சதுதான். (அப் படிப் போடு அருவாளை).

கரூரின் கடைசி சவுரி தாத்தா!

காலங்காத்தால, 'சவுரி முடி வாங்கலையோ... சவுரி முடி’னு தெருவுல இறங்கிக் கூவினா, ஒரு தெருவுக்கு ஒண்ணாச்சும் வித்துடும். ஒரு பை நிறைய அள்ளிட்டுப் போனாகூட பொழுது சாயும்போது கையில ஒண்ணும் மிச்சம் இருக் காது.

முடி விலை அதிகமானதுனால தொழில் அப்படியே மங்கிடுச்சு. பொண்ணுங்களும் சவுரி முடி வெச்சுக்குறதுல இப்ப ஆர்வம் காட்டுறது இல்லை. ப்யூட்டி பார்லர் பக்கம் போறதுலதான் ஆர்வம் காட்டுறாங்க. அதனால, இப்போ எல்லாரும் வேற தொழிலுக்கு மாறிட்டாங்க. சவுரி முடி விக்குறதுல இந்தத் தெருவுல நான் தான் கடைசி!'' - என்பவரின் குரலில் வருத்தம் இழையோடுகிறது!

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ர.அருண் பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு