##~##

''தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டைக்குச் செல்லும் வழியில் நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது  அணைக்காடு. வரலாற்றின் பக்கங் களில் எங்கள் ஊர்நிறையவே இடம்பெற்று இருக்கிறது'' என்று தன் ஊரைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் நடிகர் ராஜேஷ்.  

 ''அணைக்காட்டின் பூர்வீக மக்கள் அனைவருமே கண்ணந்தகுடி எனும் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்ததாகக் கூறப் படுகிறது. அணைக்காடு கிராமத்துக்கும் வெட்டிக்காடு, மேலநத்தம், தஞ்சாவூர் போன்ற  ஊர்களுக்கும் எப்பவும் நீங்காத தொடர்புஇருக் கும். இந்த இருபது ஊர்களில் இருந்துதான் நாங்கள் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது உட்பட எல்லாமே நடக்கும்.

என் ஊரு : அணைக்காடு

1900-களிலேயே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பணக்காரர்களுக்கும் அணைக்காடு பற்றித் தெரியுமாம். அந்த அளவுக்கு அப்போதே எங்கள் ஊர் புகழ்பெற்று இருந்தது. மற்ற ஊர்கள் எல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் வளர்ச்சியடையத் தொடங்கின. ஆனால், அணைக்காட்டில் 100 வருடங்களுக்கு முன்பே பெண்கள் படிப்பறிவு பெற்று இருந்தார் கள்.  

1930-களிலேயே ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்து இங்கே வந்துவிட்டது. இன்றும் நிறைய இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக் கும் தனித் தனிச் சாப்பாடு பந்திகள் போடுகிறார்கள். ஆனால், அணைக்காட்டில் 80 வருடங்களுக்கு முன்பே ஆண்களும் பெண்களும் ஒரே பந்திகளில் அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார் கள். அப்போது பெரும்பாலான திருமணங்கள் அவரவர் வீடுகளிலேயே நடக்கும். திருமணம் முடிந்த அன்று மாலை மணமக்களை காரிலோ அல்லது சாரட் வண்டியிலோ ஏற்றிக்கொண்டு ஊர்வலமாக ஊரில் உள்ள அனைவரின் வீட் டுக்கும்  அழைத்துச் செல்வார்கள். அப்போது ஒவ்வொரு வீட்டின் சார்பாகவும் ஒரு சொம்பு நிறையப் பாலை மணமக்களுக்கு வழங்குவது வழக்கம். இதுபோக ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலுமே ஒவ்வொருத்தராக அந்த மணமக்க ளுக்கு விருந்து வைப்பார்கள். அந்த விருந்து வைபோகம் திருமணம் முடிந்து ஒரு வருடம் வரைகூட நீடிக்கும்.  

அணைக்காடு மக்கள் அப்போது இருந்து இப்போது வரை தோப்புக்குள்ளே வீடு கட்டி வாழ்ந்துவருகிறார்கள். அதாவது, ஒரு வீடு இருந் தால் அதனைச் சுற்றி நிறைய மரங்கள் இருக் கும். இதுபோன்ற இயற்கை சார்ந்த அமைப்பில் தான் இன்றும் இங்கு உள்ள வீடுகள் இருக் கின்றன.

என் ஊரு : அணைக்காடு

பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான பட்டுக்கோட்டை தாஸ் எங்கள் ஊரில் பிறந்த வர்தான். 1920-களிலேயே டி.டி.தாசன் என்பவர் வெளிநாட்டில் உள்ள 'லிவர் பூல்’ எனும் கடல் படிப்பு பற்றிய பல்கலைக்கழகத்தில் 'ஓசோனோகிராஃபி’ துறையில் பி.ஹெச்டி. பட்டம் பெற்று இருக்கிறார். அந்தத் துறையில் பி.ஹெச்டி. பட்டம் பெற்ற முதல் இந்தியர் அவர். திராவிடக் கழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை டி.வி.டேவிஸ் என்பவரும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்தான். இன்றும் அண்ணா அறிவாலயக் கருவூலத்தில் அவருடைய புகைப்படம் இருக்கிறது.

1940-களில் பைக்கில் ஒரு வெள்ளைக்காரர் அணைக்காடு வழியாக சென்றிருக்கிறார். அப்போது அவருடைய பைக்கில் ஏதோ கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் சரிசெய்ய முடியவில்லை. அப்போது அங்கு மாடு மேய்த்துக்கொண்டு இருந்த எங்கள்

என் ஊரு : அணைக்காடு

ஊர்க்காரர் ஒருவர் வந்து சரிசெய்து இருக்கிறார். அவருடைய திறமையைக் கண்டு வியந்த அந்த வெள்ளைக்காரர் அவருக்கு 50 ரூபாயை சன்மானமாக வழங்கி இருக்கிறார். அவருடைய ஊருக்குச் சென்ற பின்னும் தான் இறக்கும் வரையிலும் மாதா மாதம் 50 ரூபாயை எங்கள் ஊர்க்காரருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.

அப்போதைய அணைக்காடு மக்கள் மிகவும் முரடர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால், வெள்ளையர்கள் காலத்திலேயே எங்கள் ஊர்க்காரர்களுக்குத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கக் கூடாது என்று சட்டம் போடப்பட்டு, அது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இன்றும் உங்கள் சொந்த ஊர் அணைக்காடு எனக் குறிப்பிட்டால் நீங்கள் துப்பாக்கிக்கு லைசென்ஸ் வாங்க முடியாது.  எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தினர் அப்போது மாடு திருடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் அணைக்காடு கிராமத்து மாடுகளை மட்டும் திருடவே மாட்டார்களாம். அப்படியும் தெரியாமல் திருடிவிட்டால், ஊர் எல்லையில் விட்டுவிட்டுப் போய்விடுவார்களாம். அந்த அளவுக்கு எங்கள் ஊர்க்காரர்கள் வீரமானவர்களாக இருந்திருக்கிறார்கள்!''

- உ.அருண்குமார்
படங்கள்: கே.குணசீலன்,    ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு