Published:Updated:

காதல் சரக்கு!

காதல் சரக்கு!

காதல் சரக்கு!

காதல் சரக்கு!

Published:Updated:
##~##

''சத்திரம் பேருந்து நிலையத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுப்பா'' இனிப் பேருந்தில் மட்டும் அல்ல; தியேட்டரிலும் இந்தக் குரலை நீங்கள் கேட்கலாம். ஆம், திருச்சியின் பரபர ஹாட் ஸ்பாட்டான 'சத்திரம் பேருந்து நிலையம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படமே தயாராகிவருகிறது.

 திருச்சி மக்களின் பேருந்துப் பயணம் மட்டும் அல்ல... பலருடைய வாழ்க்கைப் பயணமும் இதன் வழியேதான் பயணித்திருக்கும். காதல், காத்திருப்பு, கவலை, சந்தோஷம், ஆச்சர்யம் எனக் கலவையான மக்கள் இருக்கும் இந்த இடத்திலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல் சரக்கு!

''ஸ்கூல் படிக்கிற பையன்ல ஆரம்பிச்சு பூ விக்கிற பாட்டி வரைக்கும் இங்கே தினம் தினம் நிறைய முகங்கள் கூடுமிடம் இது. அதுலேர்ந்து நாலு பேரோட வாழ்க்கை யைத்தான் படமாக்கி இருக்கோம்'' என்கிறார் 'சத்திரம் பேருந்து நிலையம்’ படத் தயாரிப்பாளரான ரோஷன். இவர் படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவர்.

''இரண்டு ஹீரோயின், இரண்டு ஹீரோ. இரண்டு ஹீரோக்களும் படிச்சுட்டு வேலை இல்லாதவங்க. அரசாங்க வேலை வேணும்னு ஆசைப்பட்டு ஒரு டாஸ்மாக் கடையில வேலைக்குச் சேர்றாங்க. அப்ப காலேஜ்போறதுக் காக இந்த பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் வர்ற ஹீரோயினைக் காதலிக்கிறாங்க. இதற்கிடையில் ஹீரோவுல ஒருத்தர் மதுக்கு அடிமையாகி குடிகாரர் ஆகிடுறாரு. அவங்க காதல் என்னாச்சு என்பதுதான் படம்'' சீரியஸாகக் கதை சொல்கிறார் படத்தின் இயக்குநர் ரவிபிரியன்.

'டாஸ்மாக்’ கடை செட் போட்டு அமர்க்களமாக நடந்து கொண்டு இருக்கிறது ஷூட்டிங். கூட்டத்தினர் ஹீரோயினை லுக் விடுகிறார்களோ இல்லையோ... டாஸ்மாக் செட்டில் இருக்கும் சரக்கு பாட்டில்களை குறுகுறுவெனப் பார்க்கிறார்கள். ஒரு பெரியவரோ ஒரு படி மேலே போய், ''புதுசா கடைதான் திறந்துருக்காங்கனு ஆசையோட வந்தா... ஷூட்டிங்கா? அட, போங்கப்பா'' என்று சலித்துக்கொண்டார்.

தயாரிப்பாளர் ரோஷன் திருச்சிக்காரர். ''காந்தி மார்க்கெட்லதான் சார் வீடு. நிஜப் பெயர் அலாவுதீன். படத்துக்காக ரோஷன்னு மாத்திக்கிட்டேன். 10 வருஷமா கூத்துப் பட்டறையில பயிற்சி எடுத்துக்கிட்டு, பாரதிராஜா சார் ஆபீஸுல  கொஞ்ச நாள் ஆபீஸ் பாயா வேலை பார்த்தேன். இடையில  ஃபாரின் போயிட்டேன். திரும்பி வந்து இப்பதான் சார் கனவு நினைவாகுது'' என்று மூச்சு வாங்கச் சொல்கிறார்.

காதல் சரக்கு!

படத்தில் 'டிவிங்கிள்’ சர்மிளா, ரோஹிணி என இரண்டு ஹீரோயின்கள். 'டிவிங்கிள்’ சர்மிளா ஹைதராபாத் இறக்குமதி. ''இப்புதான் டமில் கத்துட்டு இருக். பட் ஐ கேன் அண்டர் ஸ்டாண்ட் யுவர் டமில். சீக்கிரம் தெரிஞ்சுருவேன்'' என்று பேசி 'நானும் தமிழ் பட ஹீரோயின்தான்’ என நிரூபிக்கிறார்.

இரண்டாவது ஹீரோயின் ரோஹிணி கோயம்புத்தூர் பொண்ணு. ''எம்.எஸ்ஸி. படிச்சுட்டு இருக்கேன். ரோஷன் எனக்கு தெரிஞ்சவரு. ஃப்ரெண்ட்லியாதான் இந்த ரோல் பண்றேன்'' என்கிறார் உதட்டுச் சாயத்தை ஒற்றிக்கொண்டே.

''திருச்சி, இப்படி எல்லாமா இருக்குனு நீங்களே ஆச்சர்யப்படுற அளவுக்கு டைட்டில் கார்டுலேயே திருச்சியோட 24 இடங்களை வித்தியாசமாக் காட்டுறோம். இந்த ஷாட்டை எங்கிருந்து எடுத்திருப்பாங்கனு நீங்க யோசிச்சுக்கிட்டே இருப்பீங்க. இங்கே இருக்கிறவங்களுக்கே தெரியாத புதுப் புது இடங்கள்ல ஷூட் பண்ணி இருக்கோம். 'சுப்ரமணியபுரம்’ படத்துக்கு அப்புறம் எப்படி மதுரையை மையமா வெச்சு படங்கள் வந்துச்சோ, அதுபோல இந்தப் படத்துக்கு அப்புறம் திருச்சியை மையமாக வைத்து  படங்கள் வரும்'' என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் இயக்குநர் ரவிபிரியன்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism