Published:Updated:

ஒலிம்பிக்குக்கு நாங்க ரெடி!

##~##

வழ்வதை மறந்து, நடக்க ஆரம்பித்தே சில மாதங்கள்தான் ஆகி இருக்கும் போல் இருக்கிறது. குட்டிக் குட்டியாக அவ்வளவு குழந்தைகள் தினமும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் மீன் குஞ்சைப் போல நீந்துகிறார்கள்.

 ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காகவும் நீச்சல் கற்றுக்கொள்ளவும் வந்தவர்கள், இப்போது மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றுப் பதக்கம் வெல்கிறார்கள். மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வகுப்புப் படிக்கும் ரிச்சர்ட், ''நான் மாநில அளவிலான போட்டிகள்ல தங்கம் வாங்கி இருக்கேன். தினமும் நாலு மணி நேரம் ஸ்விம் பண்ணுவேன் அங்கிள். ஐ லவ் டு ஸ்விம்'' -மழலை மொழி பேசியவன் திடீரென தண்ணீரில் குதிக்க... என் மீது சாரலாக தண்ணீர்த் தெறித்தது.

ஒலிம்பிக்குக்கு நாங்க ரெடி!

புதிதாக வந்தக் குழந்தைகள் நீரில் இறங்கப் பயப்படவே, ''வாப்பா... ஜாலியா இருக்கும், அழுவாதே'' என்று சமாளிஃபிகேஷன் செய்கிறார்கள் பழகியப் பழைய குட்டீஸ்கள்.

நம் புகைப்படக்காரர் போட்டோ எடுப்பதைப் பார்த்த ஒரு குட்டிப் பாப்பா,  ''அங்கிள், எதுக்கு போட்டோ எடுக்கிறீங்க?'' என்றாள் அலட்டலாக. ''பாப்பா உன் போட்டோவைப் புத்தகத்துல போடத்தான்'' என்று 'க்ளிக்’க... பாப்பா கலவரமாகி, ''ஐயோ... நான் ஸ்விம்மிங் டிரெஸ்ல இருக்கேனே. இப்படியேவாப் போடு வீங்க?'' என்று ஓடி ஒளிந்தாள்.

குட்டீஸ்கள் பயிற்சி எடுப்பதை அருகிலேயே அமர்ந்து ரசிக்கிறார் கள் அவர்களின் பெற்றோர்கள். சேட்டைச் செம்மல்களாகஇருக் கும் குழந்தைகள் பயிற்சியாளர் சதீஷ் சொன்னால் மட்டும் சட்டென்று சைலன்ட் ஆகிறார்கள்.

ஒலிம்பிக்குக்கு நாங்க ரெடி!

''இன்றைய சூழல்ல குழந்தைகள் விளையாட எந்த வசதிகளும் இல்லை. பள்ளி, வீடுன்னேஅவங் களோட பொழுது போயிடுது. இங்கே வர்ற குழந்தைகளும் ஆரம்பத்துல பொழுதுபோக்கா வந்தவங்கதான். சில நாட்கள்ல தீவிரமாப் பயிற்சி எடுத்துக்கிட்டு, போட்டிகள்ல கலந் துப் பரிசுகளை வெல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இங்க இவங்களுக்கு நிறைய நண்பர்களும் கிடைக்கிறதால காலையில ரெண்டு மணி நேரம், மாலையில ரெண்டு மணி நேரம் சந்தோஷமா இருக்காங்க. கூடவே பயிற்சியும் எடுத்துக்கிறாங்க. கிட்டத்தட்ட எட்டு வய சுல இருந்து 16 வயசு வரைக்கும் இங்க 60 குழந்தைகள் பயிற்சி எடுத்துக்கிறாங்க'' என்றார் சதீஷ்குமார்.

ஒலிம்பிக்குக்கு நாங்க ரெடி!

''இங்க வர்றதால குழந்தைகளோட நேரம் வீணாகுறது கிடையாது. ஸ்விம்மிங் கிளா ஸுக்கு வரணும்கிறதுக்காகவே தினமும் சீக்கிரமே எழுந்துடுறாங்க. தினமும் சத்தான உணவுகள் சாப்பிடுறாங்க. குழந்தைகளைப் பார்த்துக்கணுமேனு கூடவே வந்துடுறதால, நாங்களும் புத்துணர்ச்சியோட இருக்கோம்'' என்கிறார் ஓர் அம்மா.

''அங்கிள்... இங்கே பாருங்க'' என்று அழைத்துக்கொண்டே... நீரில் பாய்கிறான் ஒரு சிறுவன். நான் அவன் அழைத்தத்திசை யையே பார்த்துக்கொண்டு இருக்க... சட் டென்று எதிர் திசையில் நீரில் இருந்து எழுந்தான்.

''தேசிய அளவு போட்டிகள்வரை கலந்துக்கிட்டு கலக்கி இருக்கோம். அடுத்த லெவல் ஒலிம்பிக்தானாமே... அதுலேயும் கோல்டு மெடல் வாங்கணும்'' என்கிறார்கள் குட்டீஸ்கள் கோரஸாக!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ர.அருண் பாண்டியன்