Published:Updated:

நான் என்ன தப்பு செஞ்சேன்?

செங்கல் சூளையில் வேதனை சாந்தி

நான் என்ன தப்பு செஞ்சேன்?

செங்கல் சூளையில் வேதனை சாந்தி

Published:Updated:
##~##

தோஹாவில் 2006-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, பின்னர் பாலின சர்ச் சையில் பதக்கத்தை இழந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் துவங்கி இருக்கும் நிலையில், தனது சொந்த ஊரான கத்தக்குறிச்சியில் ஒரு செங்கல் சூளையில் சாந்தி வேலை செய்துகொண்டு இருக்கிறார்.  

 சுட்டெரிக்கும் வெயிலில் சூளையில் செங்கல் அறுத்துக்கொண்டு இருந்த சாந்தி, ''தினமும் 20 கி.மீ., 30 கி.மீ. தூரம் ஓடிப் பயிற்சி எடுத்து இருக் கேன். அதுலகூட இந்த அளவுக்கு வலியை நான் அனுபவிச்சது இல்ல. ஆனா, இந்தச் செங்கல் சூளை வேலை அவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, வேற வழி இல்லை. இதுல வர்ற வருமானத்தை வெச்சுதான், எங்க குடும்பத்தையே பிழைக்க வைக்கணும். என்னோட சொந்தக்காரங்க, என்னைச் சுத்தி இருக்கிறவங்க யாருமே உதவிக்கு வரலை. என்னோட குடும் பத்தைக் கவனிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கிறதால, என்னால் தடகளப் பயிற்சியை எடுக்க முடியலை.  

நான் என்ன தப்பு செஞ்சேன்?

எனக்குத் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்துல தடகளப் பயிற்சியாளரா தற்காலிகப் பணி கொடுத்தாங்க. மூணு ஆண்டு கள்ல 80 மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்தேன். அவங்கள்ல பலர் தேசிய தடகள வீரர்களாக ஜொலிக்கிறாங்க. ஆனா, அரசாங்கம் கொடுத்தஅஞ்சு ஆயிரம் ரூபா மாசச் சம்பளம் என் குடும்பத்துக்குப் போதுமானதா இல்லை. அதனால அந்த வேலையை விட்டுட்டேன். சாப்பாட்டுக்கு வேற வழி இல்லை. அதனால இந்தக் கூலி வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த ஒலிம்பிக் போட்டியைப் பத்தி பேப் பர்ல படிக்கிறப்பலாம் கண்ணுல தண்ணி முட்டும். அந்தப் போட்டிகள்ல கலந்துக்கவேண் டிய நான், இப்ப இங்கே இருந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். எல்லாம் தலைவிதி. நான் வெளியே போறப்ப எல்லாரும் என்னைப் பார்க்குற விதம் ரொம்ப சங்கடமா இருக்கு.நான் என்ன தப்புசெஞ்சேன்? ஏன் எனக்குஇந்த நிலைமை? என்னைப்போல் தென் ஆப்பிரிக் காவைச் சேர்ந்த செமனியாவுக்குப் பாலினப் பிரச்னை வந்தது. அந்த நாட்டு அரசு, அவரை அந்தப் பிரச்னையில் இருந்து விடுவிச்சிருச்சு. பரிசையும் பதக்கத்தையும் திரும்பக்கொடுத்து விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கஉதவி யும் பண்ணுச்சு. ஆனா, நம்ம நாட்டுக்காக விளையாடி பல பதக்கங்கள் குவிச்சஎனக்குப் பிரச்னை வந்தப்ப, இந்திய அரசாங்கம் வேடிக்கை மட்டும்தான் பார்த்துச்சு. எனக்குத் தர வேண்டிய பரிசுத் தொகையைக்கூட மத்திய அரசு எனக்குத் தரலை. கடந்த ஆட்சியில் தமிழக அரசு தந்த 15 லட் சம் பரிசுத் தொகையை வெச்சுதான் என் தங்கச்சிக் கல்யாணம், தம்பியோட படிப்பு எல்லாத்தையும் பார்த்துகிட்டேன்.

என் குடும்பத்தைக் காப்பாத்த எனக்கு ஒரு நிரந்தர வேலை வேணும். தமிழக அரசுக்கு ரெண்டு மனுக்கள் அனுப்பினேன். முதலமைச்சர் எனக்குஉதவி செய்வாங்கன்னு நம்பி இருக்கேன்.  

முக்கியமா நான் மத்திய அரசுகிட்ட வேண்டிக் கேட்டுக்கிறது ஒண்ணே ஒண்ணு தான். அது, ஒலிம்பிக்ல ஓட எனக்கு வாய்ப்புத் தரணும். என்னோட பரிசுத் தொகையை மத்திய அரசு தராம இருக்காங்க. தயவுசெய்து அதைத் திரும்பக் கொடுங்க. என் குடும்ப நிலைக்கு உதவியா இருக்கும்!'' என்றார் வேதனையான குரலில்.

இந்த நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜெய் மக்கான், ''சாந்தியின் இன்றைய நிலை கவலை அளிக்கிறது. தென் ஆப்பிரிக்க வீராங்கனை செமன்யாவுக்கு அந்த நாடு போராடியது போல் நாங்களும் இந்த விஷயத்தில் போராடுவோம். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்த விவகாரத்தைக் கொண்டுசெல்வோம். அவருடைய பதக்கத்தையும் மீண்டும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்!'' என்று சொல்லி இருக்கிறார்.

சாந்தியின் கனவு மெய்ப்படட்டும்!

க.அபிநயா