Published:Updated:

வில்லேஜ் வாக்கிங்!

வில்லேஜ் வாக்கிங்!

வில்லேஜ் வாக்கிங்!

வில்லேஜ் வாக்கிங்!

Published:Updated:
##~##

ளர்வான அரைக்கால் சட்டை, தொள தொளா டி-ஷர்ட், வாக்கிங் ஷூ, காதில் ஹெட்போன் (அ) கையில்  தனது செல்ல நாயைப் பிடித்துக்கொண்டுதான் நகரப் பெருமக்கள் வாக்கிங் செல்கிறார்கள். நகரத்தில் மட்டும்தான் வாக்கிங் போவார்களா? கிராமத்து வாக்கிங் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாகை மாவட்டக் கிராமம் ஒன்றில் அதிகாலை நேரத்தில் கிராம மக்களோடு இணைந்தேன்.

 விடிந்தும் விடியாத அதிகாலை நேரம். கொள்ளிடம் அருகே இருக்கும் நல்லூர் கிராமத்தில் கோழிகளும் காக்கைகளும் விழித்துக்கொண்டு கத்துகின்றன. விவசாய வேலைகள் எதுவும் இல் லாத நிலையில், மனிதர்கள் இன்னும் அவ்வள வாக எழுந்து இருக்கவில்லை. ஆனாலும்,

வில்லேஜ் வாக்கிங்!

கோபாலகிருஷ்ணன் டீக்கடையில் நாலைந்து பேர் உட்கார்ந்து டீ குடிக்கிறார்கள். தனது சைக்கிளை நிறுத்தி, அதில் சாய்ந்தவாறு எதிரே இருந்த மதில் சுவரில் உட்கார்ந்திருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி, பெயின்டர் கருப்பையன் ஆகியோடு பேசிக்கொண்டு இருக்கிறார் விவசாயி கலியன். இதுதான் அவர்களின் மீட்டிங் பாயின்ட். ஒவ்வொருவராக வந்து சேருகிற வரையில் யார் முன்னால் வந்தாலும், இங்கே வந்து உட்கார்ந்து ஒரு டீயை உறிஞ்சிய படியே காத்திருப்பது அவர்கள் வழக்கம். காலடித் தடம் தெரிகிற அளவுக்கு இருட்டு மறைந்து வெளிச்சம் வந்ததும்தான் நடப்பதற்குப் புறப்படுவர்களாம். வயல்காட்டு சாலையில் பூச்சி பொட்டு வரும் என்பதால்தான் இந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கை. பாம்பு, நட்டுவாக்கிளி போன்ற விஷ ஜந்துக்கள்தான் அந்தப் பூச்சி, பொட்டுக்கள்.    

கைகளை வீசி மிலிட்டரி கிருஷ்ணமூர்த்தி எட்டி நடைபோட, அவரைத் தொடர்கிறார்கள் மற்ற மூவரும். நடை ஆரம்பித்துமே பேச்சும் ஆரம்பித்துவிட்டது. கருப்பையனிடம் மெல்ல வாயைப் பிடுங்கினார் மிலிட்டரி. ''என்னப்பா, நேத்து தாசில்தார் எல்லாம் வந்தாங்களே... என்னா விஷயம்?'' என்று கேட்க... கருப்பையன் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார். ''இப்பல் லாம் வயல்ல இருந்து மண் எடுத்தாக்கூட அந்த தாசில்தார் வண்டியைப் பிடிச்சு ஃபைன் போட்டுடுறார். நேத்து யாரோ அப்படி மண் அடிக்கிறாங்கனு தகவல் வந்துச்சாம். அதனால, இங்க ஓடியாந்துருக்காரு'' என்று அலுத்துக்கொன்டு பதில் சொன்னார்.

வில்லேஜ் வாக்கிங்!

இவர்களின் வேக நடைக்கு மிரண்டு கண்ட மேனிக்குக் குரைத்துக்கொண்டு ஓடிவந்தது கோதண்டம் டெய்லர் வீட்டு நாய். அதைப் பார்த்து நடையை நிறுத்துகிறார்கள். உள்ளே இருந்து கோதண்டத்தின் மகன் வந்து நாயை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றதும் தொடர்கிறது பேச்சும் நடையும். அடுத்த ஊரான கோதண்டபுரம் கடைத் தெரு வரைக்கும் போகிறது இவர்களுடைய நடைப்பயணம். அங்குஇருக்கும் ஒரு வேகத் தடைதான் இவர்களின் பவுண்டரி லைன். அங்கே ஒரு யு டர்ன் அடித்துத் திரும்புகிறது இந்த நால்வர் கூட்டணி.

வழியில் ஆரப்பள்ளம் சாலையில் எரி யும் பஞ்சாயத்து லைட்டுகளுக்கான சுவிட்சை நிறுத்துகிறார் கலியன். வாத நாராயணன் மரத்தில் இருந்து தழை களைப் பறித்துப் பத்திரப்படுத்துகிறார் ஆசிரியர்.

வில்லேஜ் வாக்கிங்!

''எங்க வீட்டுல ரெண்டு நாளா முழங்கால் வலிக்குதுனுசொன்னாங்க. அதான் இதைப் பறிச்சு எடுத்துட்டுப் போறேன்''என்றவர், வைத்திய முறைகளையும் சொல்கிறார். ''இதை நல்லாக் கசக்கிச் சாறு பிழிஞ்சு முழங்கால்ல ஊத்தி, சக்கையைக் கொஞ்ச   நேரம் அதில் கட்டிவெச்சிருந்தா மூட்டு வலி பறந்துடும். வாதத்தில் இருந்து காப்பதால்தான் இதுக்கு பேரு வாத நாராயணன்'' என்கிறார். வழியில் தென்படும் வேப்ப மரத்தில் இருந்து வேப்பிலைக் கொழுந்தைக் கிள்ளி வாயில் போட்டு மெல்கிறார்கள். அது சர்க்கரை வியாதி வருவதில் இருந்து காப்பாற்றுமாம்.

பேச்சு விவசாயம்குறித்துத் திரும் புகிறது. ''இந்த வருஷம் சாகுபடி கிடையாதுனுதான் நினைக்கிறேன்'' என்று ஆசிரியர் சொல்ல, ''இல்லை யில்ல. ஆடி கடைசிக்கு விதைப்பு விதைச்சு வெச்சுடுவோம். எப்படியும் மழை பேஞ்சா முளைச்சிடும். அப்பு றம் மேல் மழையை வெச்சுப் பயிரைக் காப்பாத்திடலாம்'' என்று திட்டம் தீட்டுகிறார் மிலிட்டரி. ''என்னத்தை விதைச்சு என்னத்த செய்ய? வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது. விதைச்சா, களை எடுப்புக்குக்கூட ஆள் கிடைக்கலை'' என்று அதில் உள்ள சிரமத்தை விளக்குகிறார் கருப் பையன். மீண்டும் கோபாலகிருஷ்ணன் டீக்கடை வந்துவிட... திக்குக்கு ஒருவராகப் பிரிகிறார்கள்!

- கரு.முத்து