Published:Updated:

என் ஊர்! - தஞ்சாவூர்

Tanjore
News
Tanjore

பெரிய கோயிலும், மாரியம்மன் கோயிலும்!

##~##
ன்றைவிட்டு நீங்கும்போதுதான் அதன் அருமை தெரிய வரும் என்பார்கள். உண்மையில், ஊரும் அதன் நினைவுகளும் அத்தகையதே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு காலம் வரை சோறுடைத்த சோழ வள நாடு என்ற பெருமை தாங்கிய தஞ்சாவூர்தான் எனக்குப் பூர்வீகம். நான் பார்த்து வளர்ந்த தஞ்சாவூர், வளமையைத் துறந்து வறுமை பூண்டு இருந்தது. தி.ஜானகிராமனின் எழுத்துக் களில் வாசித்த இயற்கையும், வனப்பும் இல்லாமல் போயிருந்தன. தஞ்சை நகரத்தில்தான் என் கால்கள் தோயத்தோய நடந்து திரிந்தன.

என் ஊர்! -  தஞ்சாவூர்
என் ஊர்! -  தஞ்சாவூர்

கீழ ராஜ வீதியில், எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் ரப்பர் ஸ்டாம்பு செய்து தரும் கடை வைத்திருந்தார். அந்தக் கடையில் தொழிலுக்குப் பதிலாக இலக்கியம் நடந்துகொண்டு இருந்தது. தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் பலரும் அந்தக் கடைக்கு ஒருமுறையாவது வந்து இருப்பார்கள். ப்ரகாஷை எல்லோரும் ஆசான் என்றே அழைப்பார்கள். நான் அவரை அவ்விதம் அழைக்காமல் 'அய்யா’ என்றே விளிப்பேன். அவருடைய பரிச்சயத்துக்குப் பிறகுதான், நல்ல இலக்கியங்களைத் தேடி வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.  வாரந் தோறும் வெள்ளிக் கிழமை மாலையில் பெரிய கோயிலுக்கு அருகில் இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்குக் கீழே வட்டமாக அமர்ந்து இலக்கியப் பேரவை நண்பர்கள், தங்கள் படைப்புகளை விவாதிக்கத் தொடங்குவார்கள். அது ஓர் இனிய அனுபவம். வாரத்தில் ஒரு இலக்கியப் பிரபலத்தையாவது அங்கே சந்திக்க முடியும்.

கீழ வாசலுக்குப் போகும் வழியில் நிறைய நாட்டுப்புறக் கலைஞர்களின் வீடுகள் இருக்கும். அந்தந்த வீட்டு முகப்பில் ஒரு பெரிய விளம்பரப் பலகை இருக்கும். அதில் அவர்களுடைய பெயரும் அவர்கள் வைத்திருக்கும் குழுவின் பெயரும் பொறிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பலகையிலும் தவறாமல் வானொலி புகழ், சினிமா புகழ் என்றோ அல்லது கலைமாமணி என்றோ எழுதி இருப்பார்கள். கரகாட்டம் தொடங்கி நாட்டுப்புறக் கலைகள் அத்தனைக்கும் தஞ்சாவூர் சிறப்பு வாய்ந்தது. பெரிய கோயிலின் புறத்தே அமைந்துள்ள சிவகங்கை பூங்கா வாயிலில் வீணை செய்துகொண்டு இருப்பார்கள். ஒரு நாளைக்கு எத்தனை வீணை செய்வார்கள் என்று யூகிக்க முடியாதவாறு ஒரு ஆசாரி எப்போதும் மரத்தை இழைத்துக்கொண்டே இருப்பார்.

தஞ்சாவூருக்குக் குறுக்கே ஓடும் வெண்ணாற்றங் கரையில் சமயத்தில் நீரும் வருவது உண்டு. அங்கே போய்க் குளிப்பதும் நீச்சல் அடிப்பதும் தனி சுகம். ஒரு ஊருக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் குடிகொண்டிருந்தபோதும் எவ்விதப் பரபரப்பும் இல்லாததே தஞ்சாவூருக்கான அடையாளம் எனத் தோன்றுகிறது. தமிழகத்தின் தொல் இயல்களும் தஞ்சையைத் தலைமையாகக் கொண்டவையே. நூலகங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சரஸ்வதி மஹாலும், மராட்டியர் அரண்மனையும், அதைக் காண வரும் சுற்றுலாப் பயணி களும் என தஞ்சாவூரில் பார்த்து வியக்க எத்தனையோ உண்டு.

என் ஊர்! -  தஞ்சாவூர்

தஞ்சாவூரின் மற்றுமொரு சிறப்பு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் களைகட்டும். பிரார்த்தனை முடித்துத் திரும்புகிறவர்கள் மறக்காமல் அரிசி முறுக்கை வாங்கத் தவற மாட்டார்கள். அந்தக் கோயிலுக்கு என்று தனியான சக்தியும், வேண்டுதல் பலிக்கும் கருணையும் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகிவிட்டன. விவசாயமே பிரதானம் என்பதால், தஞ்சாவூரின் வாழ்க்கை நடவுக் காலத்தில் புலம்பலும், அறுப்புக் காலத்தில் தடபுடலுமாக இருக்கும். தஞ்சாவூரில் பேசும் தமிழ் குறிப்பிடத்தக்கது. வேறு ஊர்களில் வழக்குச் சொற்கள் திரிந்து உச்சரிப்பு வேறுவிதமாக இருக்கும். ஆனால், இங்கு எழுத்துத் தமிழை எவ்வாறு உச்சரிப்போமோ, அவ்விதமே பேசுவதுதான் வழக்கம். நான் சொல்வது தஞ்சை நகரத்தில் வசிப்பவர்களின் உச்சரிப்பே அன்றி, தஞ்சை மாவட்டம் முழுவதற்குமானது அல்ல.

என் ஊர்! -  தஞ்சாவூர்

ஓர் ஊரின் வரைபடம் அங்கே வசிக்கும் மக்களால் மட்டுமல்ல, அவர்களின் தொழில் மற்றும் விருப்பம் சார்ந்தே அமைகிறது. அவ்வகையில் தஞ்சாவூரின் எழுத்து, இசை, பேச்சு, தொழில், சடங்கு என எல்லாவற்றிலும் புராதன அடையாளம் மிச்சம் இருக்கும். அவற்றை சாதிவாரியாக, மதவாரியாக உணரலாம். மூப்பனாரும், வாண்டையாருமாக நீளும் பட்டியலில்... வெண்மணி விவசாயிகளும் வீழ்ந்துவிட்ட திராவிடப் பெருந்தகை களும் சேருவார்களா எனத் தெரியவில்லை. தஞ்சாவூரில் பிறந்ததால், எனக்கு இரண்டு சகாயம். ஒன்று, நான் உலகத்தை எளிதாகப் பார்க்க முடிந்தது. இரண்டு, உலகம் என்னை எளிதாகப் பார்க்க விரும்புவது இல்லை!''