##~## |
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட எட்டுப் பெருநகரங்களைச் சேர்ந்த சுட்டிகளில், 24.9 சதவிகிதம் பேர் கூடுதல் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு.
கிராமத்துச் சுட்டிகளுக்கு ஊட்டக் குறைவுப் பிரச்னை என்றால், நகர்ப் பகுதியில் வசிப்போருக்கு 'ஒபிசிட்டி’ (ளிதீமீsவீtஹ்) எனப்படும் கூடுதல் பருமன் பெரும் பிரச்னையாக இருக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கூடுதல் உடல் பருமன் காரணமாக அவதியுறும் சுட்டிகளுக்கு அன்றாட உணவு முறை எப்படி இருக்க வேண்டும்?
கூடுதல் பருமனான உடம்பைக் குறைப்பதற்கு பெரும்பாலானவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்கிறார்கள். அல்லது சில வேளை உணவை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. உணவைத் தவிர்க்காதீர்கள். மாறாக, உண்ணும் உணவில் கலோரி மிகுதியாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரியவர்களுக்கு இருக்க வேண்டிய எடை அளவை எட்டிய சிறியவர்களுக்கு, இயன்றவரை எண்ணெய் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம். பருமனான சுட்டிகள் உள்ள வீடுகளில், குடும்பமே சமையலில் எண்ணெயைக் குறைத்துக்கொள்வது நல்லது.
நொறுக்குத் தீனிகளை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். 'நாங்கள் சுட்டிகள்... நொறுக்குத் தீனி இல்லாமல் எப்படி இருக்க முடியும்?’ என்கிறீர்களா... உங்கள் கேள்வி நியாயமானது. ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிடலாம். வேகவைத்த பண்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.
சமையலில் கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளுக்குத் தடா விதியுங்கள். புரதம் மிகுதியாக உள்ள உணவை உட்கொள்வது நல்லது. வெண்ணெய், நெய் முதலானவற்றையும் தவிர்க்கலாம். பீட்ஸா, பர்கர் முதலான கொழுப்புப் பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. ஜங்க் உணவுக்கும் டாடா காட்டுங்கள்.


எந்தக் காரணத்தைக்கொண்டும் குளிர்பானங்கள், விதவிதமான டப்பாக்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் முதலானவற்றைக் குடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, பழங்களை நறுக்கித் தரச் சொல்லிச் சாப்பிடுங்கள். பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களைக்கொண்டு 'சாலட்' வகைகளைச் செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்; உடம்புக்கும் சத்து கிடைக்கும்.
கூடுதல் பருமன் உள்ள சுட்டிகளுக்கு உடல் உழைப்பு மிக மிக அவசியம். வீட்டுக்கு அருகிலேயே பள்ளி இருந்தால், நடந்தே செல்லுங்கள். கொஞ்சம் தூரம் எனில், சைக்கிளில் செல்லலாம். தினமும் அரை மணி நேரம் ஓட்டப் பயிற்சி செய்யுங்கள். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழுங்கள்.
நம்மில் பலருக்கு டி.வி., பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதை விட்டு ஒழியுங்கள். டி.வி. பார்த்தபடி சாப்பிடுவதால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடுவீர்கள்.
காலை உணவைத் தவிர்த்தால், நம் உடலில் கொழுப்பு அதிக அளவில் தங்கிவிடும். எனவே, பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் உணவைத் தவிர்ப்பதோ, குறைவாகச் சாப்பிடுவதோ கூடாது.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மேல் டி.வி., கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் முன்பு உட்காராதீர்கள். வீட்டில் இருக்கும்போது அம்மாவுக்கு உதவுங்கள். அதனால், உடற்பயிற்சி செய்வதற்கு இணையான பலனைப் பெற முடியும்.
6 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஓரளவுக்கு வளர்ந்த சுட்டிகள், கூடைப் பந்து, கைப் பந்து, கபடி போன்ற குழு விளையாட்டுகளிலோ அல்லது ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற தனி நபர் விளையாட்டுக்களிலோ ஈடுபடலாம்.
வளரும் பருவத்தில்தான் உடல் பருமனைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிது. இப்போது அலட்சியமாக இருந்துவிட்டால், பெரியவர் ஆனதும் உடம்பைக் குறைப்பது என்பது பெரும்பாடு ஆகிவிடும். எனவே, இப்போதே தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி உடம்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.