Published:Updated:

திருவையாறு இளைஞர்... சர்வதேச நடுவர்!

திருவையாறு இளைஞர்... சர்வதேச நடுவர்!

##~##

மேஷ்குமார்... சர்வதேச அரங்கில் காலடி வைத்திருக்கும் தஞ்சாவூர் தமிழன். கடந்த வருடம் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேஸ்கட் பால் விளையாட்டின் நடுவர் இவர்தான். அதற்கு முன்னும் பின்னும் சர்வதேசப் போட்டிகளுக்கு நடுவராகப் பல நாடுகளுக்கும் பறக்கிறார்.

திருவையாறு இளைஞர்... சர்வதேச நடுவர்!

 தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி கிராமத்தில் ரமேஷ்குமாரைச் சந்திக்கப்போனால், அமைதியாக வரவேற்கிறது சர்வதேசக் கூடைப்பந்து நடுவரின் இல்லம்.

திருவையாறு இளைஞர்... சர்வதேச நடுவர்!

'பள்ளிக்கூட நாட்களில் 'கிரிக்கெட்’ மீதுதான் ஆர்வம் இருந்தது. ஆனால், முழுமையான மனநிறைவு அதில் இல்லை. உடற்கல்வியில் பி.எஸ்சி., பி.பி.எட்., எம்.பி.எட்., சி.எஃப்.சி, பி.ஜி.டி.எஸ்.எம்., எம்.பில். படித்திருக்கிறேன். வாலிபால், கிரிக்கெட், ஃபுட்பால்... இப்படி எல்லா விளையாட்டுகளிலும் மாநில அளவில் விளையாடியிருக்கிறேன். கேப்டனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால், எனது அதிகபட்சத் திறமை வெளிப்படக்கூடிய ஒரு துறையைக் கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. எனது நண்பர்கள் பெருமாள் மற்றும் பிரபாகரன் ஆகியோர்தான்  எனக்கு பேஸ்கட்பால் விளையாட்டை அறிமுகம் செய்தனர். விதிமுறைகள், பயிற்சிகள் என ஒவ்வொன் றாகக் கற்றுக்கொண்டேன். பகுதி நேர வேலையாக தஞ்சாவூர் பள்ளிகள் சிலவற்றில் கைப்பந்து, பேட் மிட்டன், கோ-கோ, கூடைப்பந்து போன்ற விளை யாட்டுகளில் பயிற்சியாளராகவும் இருந்தேன்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளையாட்டுத் துறையைப்பற்றி விரிவான, முழுமை யான விழிப்பு உணர்வு இல்லை. விளையாட்டு வீரர், கோச் என்பதைத் தாண்டி, நடுவர் என்ற வேலையை யாரும் கண்டு கொள்ளவில்லை. நான் நடுவரைக் குறிவைத்து நகர்ந்தேன். 1996-ம் ஆண்டு, முதல்முறையாக மாநில கோ-கோ நடுவராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு, மாநில அளவிலான அத்லெடிக், கபடி, கைப்பந்து நடுவராகப் பல போட்டிகளில் செயல்பட்டு இருக்கிறேன். 2001-ம் ஆண்டில்தான் கூடைப்பந்து நடுவராகத் தேர்ச்சி பெற்றேன். சர்வதேச நடுவர் பணி 2006-ல் தொடங்கியது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்த நடுவர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று, மலேசியாவில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கு இடையேயான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராகப் பணிபுரிந்தேன். ஏற்கெனவே நிறைய அனுபவம் உண்டு என்பதால், என்னிடம் பதற்றம் ஏதும் இல்லை.

சீனாவில் நடைபெற்ற 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டது எனது வாழ்வில் முக்கியமான நாட்கள். ஐந்து ஆண்கள் போட்டிகள், இரண்டு பெண்கள் போட்டிகள் என மொத்தம் ஏழு ஆட்டங்களுக்கு நான் நடுவர். இந்தியா பங்குபெறும் போட்டிகளில் மட்டும் நான் நடுவராகச் செயல்படக் கூடாது. பெண்கள் அணியின் இறுதிப் போட்டி சீனாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் சீனா ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நுணுக்கத்திலும் ஒழுக்கத்திலும் சீனா அணி மிகச் சிறப்பானது.

நடுவராகச் செயல்பட, கட்டுப்பாடான உணவும் சீரான உடற் பயிற்சியும் முக்கியம். ஒரு போட்டியில், ஆட்டத்தையும் கவனித்துக் கொண்டு சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு ஓடவும் வேண்டும். அதனால், ஒரு விளையாட்டு வீரருக்கு இணையாக உடம்பைப் பராமரிப்பது அவசியம்'' எனச் சிரிக்கிற ரமேஷ்குமாருக்கு, விரைவில் திருமணம்!

- அ.சரண்யா, படம்: கே.குணசீலன்

அசத்தல் பத்திரிகை!

திருவையாறு இளைஞர்... சர்வதேச நடுவர்!

னந்த விகடன் சைஸுக்கு ஒரு கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தது உண்டா? பிப்ரவரி 20-ம் தேதி, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மகேஷ் குமார்-திவ்யா திருமணப் பத்திரிகை 108 பக்கங்கள் கொண்டது. பார்க்கவே ஒரு புத்தகம்போல இருக் கிறது.

மண வீட்டார் பற்றிய தகவல்கள் ஆறு பக்கங்கள். மற்ற பக்கங்களில் மலைக்கோட்டை விநாயகர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சியம்மன் என்று சுவாமிகளின் திருவுருவப் படங்களுடன், ஆன்மிகம், மருத்துவம், பொது அறிவுச் செய்திகள், திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கங்கள் இடம் பெற்று இருக் கின்றன. பொன்மொழிகள், வரலாற்றுச் சிறப்புகள், விண் வெளிச் செய்திகள் என்று தனித் தனித் தலைப்புகளில் செய்திகள் வேறு.

மகேஷ்குமாரின் அப்பா பாலசுப்பிரமணி யன் ஒரு நகைக் கடை அதிபர். அவர்தான் இந்த பத்திரிகையைத் தயார் செய்தவர். ''கல்யாணப் பத்திரிகையை யாரும் பத்திரமா வெச்சுக்கிறது இல்லை. எங்க வீட்டுப் பத்திரிகையை ஒவ்வொருத்தரும் பாதுகாப்பா வெச்சிருக்கணும், அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, ஏற்கெனவே காரைக்குடியில் ஒருத்தர் இதுபோல பத்திரிகை அடிச்சி ருந்தது நினைவுக்கு வந்துச்சு. அதேபோல் நாங்களும் 108 பக்கத்தில் பத்திரிகை ரெடி பண்ணிட்டோம். நான் எதிர்பார்த்தது மாதிரியே பத்திரிகை கொடுக்கப் போன இடத்தில் எல்லாம் அமோக வரவேற்பு. முதலில் 1,200 பத்திரிகைதான் அடிச்சோம். அது பத்தலை. திரும்பவும் 1,000 பத்திரிகை அடிச்சோம். அதுவும் பத்தலை. கடைசியில் நியூஸ் பேப்பரில் 'இதையே அழைப்பிதழாக எடுத்துக்கொள்ளவும்’னு விளம்பரம் கொடுத்தோம்!'' என்கிறார் பெருமையாக!

-ஆர்.லோகநாதன்,படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு