Published:Updated:

''கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்!''

''கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்!''

##~##
டம் பிடித்துத் தேர் இழுக்கும் காட்சி எப்போதும் அழகு. அதுவே சுட்டீஸ்கள் சேர்ந்து தேர் இழுத்தால்? கும்பகோணம் சண்டிகேசுவரர் கோயிலின் மாசி மகத் திருவிழாவில் தேர் இழுப்பது முழுக்க முழுக்க சுட்டீஸ்கள்தான்!

கொண்டாட்டம், குதூகலம், டிரம்ஸ், செண்டை மேளம், ஆட்டம்பாட்டம் என ஏரியா களை கட்டியிருக்க... சிறுவர்களும், சிறுமிகளும் புது டிரெஸ்ஸில் வடம் பிடிக்கக் குழுமி இருந்தனர். தேர் இழுக்க வந்ததுல பாதிப் பேர் குட்டி இளவரசிகள்! பூஜை முடித்து, தீபாராதனை காட்டிய அடுத்த நொடி, 'ஹோ’வென்ற உற்சாகத்துடன் வடம் பிடித்துத் தேர் இழுக்கத் தொடங்கினார்கள்  சுட்டீஸ்கள். எங்கும் ஒரே சத்தம், சிரிப்பு, உற்சாகக் கூச்சல். தங்களால் இழுக்கப்பட்ட தேர் மெதுவாக நகர்ந்து வருவதைக்கண்டு ஒவ்வொருவர் முகத் திலும் அத்தனை சந்தோஷம்.

''கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்!''

'ம்மா... அண்ணா மத்தும் இதுக்குறான், நானும் போதேன், இதக்கிவிதும்மா' என அம்மாவின் இடுப்பில் இருந்தபடியே கெஞ்சிக்கொண்டு இருந்தான் ஒரு குட்டிப் பையன். தத்தமது பிள்ளைகள் தேர் இழுக்கும் காட்சியைப் பார்த்து பெற்றோர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! 'அந்தக் காலத்தில் நாங்க இழுக்கும்போது...’ என ஒவ்வொருவரும் தங்களின் இளமைக் காலத்தை நினைவில் கொண்டுவந்து ஃப்ளாஷ்பேக்குகளை உலவவிட்டார்கள்.

''கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்!''

தேர் செல்லும் வழிகளில் எல்லாம் இடை இடையே ராக்கெட் விட்டுக்கொண்டு இருந்த அண்ணன்களை சற்றே பொறாமையோடு பார்த்தனர் சுட்டிப் பையன்கள். குட்டீஸின் உற்சாகம் கொஞ்சம் குறைந்தாலும் தங்கள்  அதிரடி இசையால் சார்ஜ் ஏற்றியது டிரம்ஸ் ட்ரூப். சிறுவர்கள் தேர் இழுத்து வரும் காட்சியை புகைப்படங்களாக 'க்ளிக்’கிக்கொண்டே இருக்க, அதைப் பார்த்து இன்னும் உற்சாகமாக இழுத்தார்கள்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்த வந்த போலீ ஸிடம் பஞ்சாயத்து வைத்தான் ஒரு பையன். ''சார், தேர் இழுக்கும்போது கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்'' என்றான். இந்தப் புகாருக்கு என்ன தீர்ப்பு சொல்வது எனத் தெரியாமல் சிரித்த படியே, ''சரிடா, சரிடா... போ'' என்றார் அவர். கொஞ்சம் ஏமாற்றத்துடன் அவன் நகர, 'போலீஸ்கிட்டயே துணிச்சலாப் பேசிட்டியா?’ எனப் பக்கத்தில் வடம் பிடித்த பையன் ரெண்டடி நகர்ந்து நின்றான்.

அப்போது, அந்தப் பக்கம் அலங்கரித்த இரண்டு கோயில் யானைகள் வலம் வந்துகொண்டு இருக்க, வரிசையாக ஆசி வாங்கிச் சென்றுகொண்டு இருந்தார்கள் மக்கள். இந்தப் பரபரப்பைப் பயன் உள்ளதாகப் பயன்படுத்தி தத்தமது ஆட்களுடன் பார்வையால் பல்லாங்குழி விளையாடிக்கொண்டு இருந்தனர், இளம் வயது ஆண்களும் பெண்களும். 'தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ’ என்று முணுமுணுத்துச் செல்லும் இளைஞன், நாளை டீக் கடை மறைவில் தம் அடிக்கலாம், கோயிலுக்குள் காதலைச் சொல்லலாம், யார் கண்டது?!

நமது புராணங்களின்படி சண்டிகேசுவரர் ஆழ்ந்த தவத்தில் இருப்பவர். அதனால்தான் அவரைக் கும்பிடும் முன்பு கைதட்டிவிட்டுக் கும்பிட வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால், தேரில் வீதியுலா வந்த சண்டிகேசுவரர் குட்டீஸ்கள் போட்ட சத்தத்தில் நிச்சயம் தூக்கத்தில் இருந்து எழுந்து இவர்களையே வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருப்பார். ஒருவழியாக, நான்கு வீதிகளையும் வலம் வந்து, தேரடிக்கு தேர் வந்து சேர்ந்தபோது, குட்டீஸ்கள் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்! 'கை வலிக்குதா? ஐஸ்க்ரீம் சாப்பிடுறியா?’ என அம்மாக்கள் பிள்ளைகளைப் பார்த்து உருக, இதுதான் சமயம் என ஒன்றுக்கு இரண்டாகப் பலரது கைகளில் ஐஸ்க்ரீம்கள் உருகின!

- இரா.மங்கையர்க்கரசி, படங்கள்: ந.வசந்தகுமார்

''கேர்ள்ஸ் காலை மிதிக்கிறாங்க சார்!''
அடுத்த கட்டுரைக்கு