Published:Updated:

என் ஊர்!

''முறுக்கு முறுக்கேய்...''நடிகர் விமல்

 ##~##
ணப்பாறைன்னா... மாடும் முறுக்கும் பிரபலம். இப்போது விமலும்!

''மணப்பாறைக்குப் பக்கத்தில் இருக்கும் பன்னாங்கொம்பு கிராமம்தான் நான் பொறந்து, வளர்ந்த ஊர். எல்லாப் பசங்களும் லீவு விட்டா, அவங்களோட பாட்டி ஊருக்குப் போவாங்க. என்னோட அம்மாவும் அப்பாவும் ஒரே ஊருங்கிறதால, எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அஞ்சு வரைக்கும் இங்கே

என் ஊர்!

தான் படிச்சேன். அப்பா டிரான்ஸ்ஃபரான பிறகு, எல்லோரும் சென்னைக்குப் போயிட்டாலும், சொந்த ஊரை மறந்துடலை. மாசம் ஒரு தடவை யாவது ஓடி வந்திருவேன். எந்தப் பண்டிகையா இருந்தாலும் பன்னாங்கொம்புலதான் நம்ம கொண்டாட்டம். இப்பக்கூட மழை காரணமா கும்பகோணத்தில் ஷூட்டிங் கேன்சல். உடனே, ஊருக்கு ஓடி வந்துட்டேன்.

வீட்டுல இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துலதான் ஸ்கூல். பையைத் தோள்ல மாட்டிக்கிட்டுக் கிளம்புனா, வழியில இருக்கும் ஒரு இலந்தை மரத்தை, கொடுக்காப்புளி மரத்தை-ம் விடுறது இல்லை. அடிச்சு, பறிச்சுச் சாப்பிட்டுட்டே போவோம். ஸ்கூல் பக்கத்தில் ஒரு டீக் கடையில எனக்கு செலவுக்குப் 10 காசு கொடுக்கச் சொல்லி சொல்லியிருப்பாங்க. வட்டமான பெரிய 10 காசு கொடுத்தாத்தான் நான் வாங்குவேன். நாலணா, எட்டணாகூட வாங்குறது இல்லை. ஒன்லி பெரிய 10 பைசா. அப்போ ஸ்கூல் வாசல்ல ஒரு பாட்டி கேசரி, கடலை மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கல்கோனா எல்லாம் விற்பாங்க. கேசரி அஞ்சு பைசா. இன்னோர் அஞ்சு பைசா வுக்கு மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவோம்.

எங்களுக்கு மூணு தோட்டம் இருக்கு. ஸ்கூல் லீவு விட்டா, ஒரே கும்மாளம்தான். காலையில எந்திரிச்சதும் நேரா தோட்டத்துக்கு ஓடிப் போயிருவேன். மாங்காய் சாப்பிடணும்னு ஆசைப்பட்டா, மாந்தோப்பு. கரும்பு சாப்பிடணும்னு ஆசைப்பட்டா, கரும்புத் தோட்டம். பம்ப் செட்டுல குளிக்க... நெல் வயல். மதியச் சாப்பாடு தோட்டத்துக்கே தேடி வரும். மூக்குப் பிடிக்க நல்லா சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிட்டு, சாயந்திரம்தான் வீட்டுக்குப் போறது. ஊர்ல விசேஷம்னா... அது அம்மன் கோயில் திருவிழாதான். திரை கட்டி சாமி படம், எம்.ஜி.ஆர் படம்லாம் போடுவாங்க. வள்ளித் திருமணம், அரிச்சந்திரன் நாடகம் நடத்துவாங்க. ஊர்ப் பசங்க எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுவாங்க. அதுல நாமளும் நடிக்கணும்னு ஆசையா இருக்கும். ஆனா, நடிக்க விட

என் ஊர்!

மாட்டாங்க. நாடகம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி டான்ஸ் ஆடுறதுக்கு மட்டும் என்னை அனுப்புவாங்க. நானும் கையைக் காலை ஆட்டி, ஏதோ ஆடி வைப்பேன். சினிமா பார்க்கணும்னா, மணப்பாறைக்குத்தான் போகணும். அப்போ இந்திரா, முருகன்னு ரெண்டு தியேட்டர்தான். டிக்கெட் விலை ஒரு ரூபா, ஒண்ணரை ரூபாதான். 'என் தங்கை கல்யாணி’ படத்துக்குப் போயி, அப்பத்தா அழுதுகிட்டே வீடு வந்தது இன்னமும் ஞாபகத்துல இருக்கு.

வீட்டுல எப்பவும் முறுக்கு இருந்துகிட்டே இருக்கும். இப்பக்கூட வரும்போது மணப்பாறை ரயில்வே கிராஸிங்ல முறுக்கு விக்கிற ஆட்களைப் பார்த்தேன். கிராஸிங்ல பஸ் ஸ்லோ ஆகும்போது சர்ரக்குனு உள்ளே ஏறி, 'முறுக்கு முறுக்கேய்... மணப்பாறை ஸ்பெஷல் முறுக்கேய்’னு பரபரன்னு அவங்க வியாபாரம் பண்ற சுறுசுறுப்பே ஆச்சர்யமா இருக்கும். ஊருக்குத் தெற்கே மலையாண்டி சாமி கோயில் இருக்கு. அங்க மஹா சிவராத்திரி நல்ல விசேஷம். கடைகள், ராட்டினம்னு ஊரே களை கட்டும். சுத்துப்பட்டுல இருக்குற வயசுப் பொண்ணுங்க எல்லாரும் வருவாங்க. பசங்களோட சேர்ந்துக்கிட்டு செம லூட்டிதான். ஊருக்குக் கிழக்கே வளையப்பட்டி கருப்பு கோயில் இருக்குது. அங்கே மூணு வருஷத்துக்கு ஒரு தடவை ஆடு, கோழி, பன்னி எல்லாம் பலி கொடுத்து பூஜை செய்வாங்க. 'முப்பூஜை’ன்னு பேரு. அதுதான் எங்க குலசாமிங்கிறதால தவறாமக் கலந்துக்குவேன்.

என் ஊர்!

இத்தனை வருஷத்துல ஊரு இன்னமும் மாறாம அப்படியேதான் இருக்குது. கொடுக்காப்புளி, இலந்தை மரங்கள் மட்டும் காணாமப் போயிருச்சு. 'பசங்க’ படம் வந்ததும் ஊருக்கு வந்தப்போ, செம வரவேற்பு. எங்க ஊர் பள்ளிக்கூடத்துல 'நம்ம ஸ்கூல்ல படிச்ச பையன்தான் ஹீரோ’ன்னு பெருமையாப் 'பசங்க’ படத்தைப் போட்டுக் காட்டி இருக்காங்க. ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. எல்லார் மனசுமே ஒரு சின்ன பாராட்டுக்குத்தானே ஏங்கித் தவிக்குது!''

சந்திப்பு: ஆர்.லோகநாதன் படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு