Published:Updated:

''ராமையா பொண்ணுக்கு பரிசமாம்!''

ஒரத்தநாடு

##~##
ன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே, உன் மேல ஆசைப்பட்டு பார்த் துக் காத்து நின்னேனே!’ - ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்டில் தயாராக நிற்கும் மினி பஸ்ஸில் இருந்து கசிகிறது ராஜாவின் இசை. டாப்பில் காய்கறிக் கூடைகளும், உள்ளே உர மூட்டை களுமாக மினி பஸ் முழுக்க கிராமத்து சனம். 'பள்ளிக்கூடப் புள்ளவள உள்ளே விடுங்கப்பா’ எனக் கூட்டத்தைத் தள்ளி தனக்கும் இடம் பிடித்துக்கொள்கிறார் ஒருவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''ராமையா பொண்ணுக்கு பரிசமாம்!''

காதில் பேனா, வலது கையிடுக்கில் கேஷ் பேக், இடது கை விரலிடுக்கில் நீளவாக்கில் மடித்துவிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எனப் படிக்கட்டில் சாய்ந்து நிற்கும் நடத்துநர், 'தென்னம நாடு, சோழ புரம், தெக்கூரு, ஆண்டிபட்டி, அவுசிங்கப்பட்டி’ என்று கூவிக்கொண்டே இருக்கிறார். ''கண்டக்டரே... அதான் பஸ் ரொம்பிடுச் சுல்ல... கிளம்ப வேண்டியதுதானே? இன்னும் எதுக்கு ஏலம் போடுற?'' என்று ஒருவர் ஆரம்பித்துவைத்து, இன்னும் நான்கு பேர் முணுமுணுத்து, சில பல நிமிடங்கள் கடந்த பிறகு, மெள்ளக் கிளம்புகிறது மினி பஸ். 'அரைச்ச சந்தனம், மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே’ ஒலிக்கையில் பேருந்து தென்னம நாடு கீழத் தெருவுக்குள் நுழைகிறது. பாடல் சத்தத்தையும் மீறி வெளியே பட்டாசுகளின் சத்தம். வெளியே தலை நீட்டி அரை நிமிடத்தில் விசாரித்து, ''ராமையன் பொண்ணுக்கு இன்னிக்குப் பரிசமாம்!'' எனத் தகவல் சொல்கிறார் பெரியவர் ஒருவர்.

''ராமையா பொண்ணுக்கு பரிசமாம்!''

கீழத் தெரு கடந்து இருபுறமும் வயல்வெளி சூழ்ந்த சாலையில் பேருந்து நுழைய... பாதி வயல்களில் இன்னும் மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. ''இந்த மானம் காய்ஞ்சும் கெடுக்குது... பேய்ஞ்சும் கெடுக்குது. நல்லாப் பால் புடிக்கிற பருவத்துல அடைமழை பேய்ஞ்சா என்னத்துக்கு ஆவ? இந்த வருஷம் குடோன் அரிசிலதான் குடும்பம் நடத்தணும் போலருக்கு!'' - சவரம் செய்யாத வெள்ளை முள் தாடியைத் தடவிக்கொண்டே அருகில் இருப்பவரிடம் கவலையைப் பகிர்ந்துகொள்கிறார் சேதுராயன் குடிகாடு ராமசாமி.

''ராமையா பொண்ணுக்கு பரிசமாம்!''

அந்தப் பக்கம் கல்லூரி முடித்து வீடு திரும்பும் பையன் கள் ஆளுக்கு ஓர் ஆளாக ஆள் பிரித்து 'கண்கள் இரண்டால்’ பேசுகின்றனர். 'முல்லைப் பூ போலே உள்ளம் வைத்தான். முள்ளை உள்ளே வைத்தான்’- லயித்துத் தலை அசைப்பவரின் உள்ளத்தில் தைத்த முள்ளை யார் எடுப்பது? பழநி முருகனுக்கு மாலை போட்ட ஒரு 'ஸ்டூடன்ட் சாமி’ கொரியன் போனை லவுட் ஸ்பீக்கரில் அலறவிட்டு டிரைவருக்கு டஃப் கொடுத்தார். வரிசையாக வடிவேல் டயலாக்குகளாக அவர் ஒலிக்கவிட, இடுக்கில் தெரிந்த நீல கலர் சுடிதாரிடம் இருந்து கசிந்து வந்தது சிரிப்பு!

'சோழபுரம் எறங்கு’ தேங்கிக்கிடந்த ரோட்டோரத் தண்ணீரில் தன் பிம்பம் காட்டி நிற்கும் மினி பஸ்ஸில் கசிகிறது, 'செவ்வந்திப் பூவெடுத்து அதில் உன் முகம் பார்த்திருந்தேன்’! கம்பியில் கை பிடித்திருந்த சில விரல்கள் தன்னிச்சையாய் தகரத்தில் தாளம் போட்டன. கேஷ் பையில் இருந்த புது சீப்பு எடுத்துத் தலை சீவிக்கொண்ட நடத்துநர், சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த முகப் பவுடர் பொட்டலம் பிரித்து வாசனையாகத் தடவிக்கொண்டார்.

ஆண்டிபட்டியில் நான்கு டிராப். ஒரே ஒரு பிக்-அப். பஸ்ஸின் முன் பக்கம் அமர்ந்திருந்த இளம் பெண்களைப் பார்த்த ஒரு கிழவி, ''இந்த டிரைவர் பய, குட்டியளை மட்டும் தூக்கி முன்னாடிவெச்சுக்குறான். நம்மளை விரட்டி விட்டுர்றான்'' என்று கருவியது யாருக்கும் கேட்கவில்லை.

கருக்காடிப்பட்டியில் கூலி வேலை முடித்து ஏறியவர்கள் பொட்டலம் பிரித்து வெற்றிலை போட ஆரம்பித்தனர். ஒருவர் புகையிலைக்குப் பதில் ஹான்ஸ் அமுக்கினார். வழியில் கை நீட்டி பஸ்ஸை மறித்த ஒருவர், ''செத்த நில்லு... என் பொண்டாட்டி சீல கட்டிக்கிட்டுருக்கா'' எனக் குடும்ப பஸ் கணக்காக ஐந்து நிமிடங்கள் நிறுத்திப்போட்டார்.

கடைசி ஊரான அவுசிங்கப்பட்டிக்குள் நான்கு பேரை இறக்கிவிட்டு, டீ குடிக்கப் போனார்கள் டிரைவரும் கண்டக்டரும். மினி பஸ்ஸில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது... 'மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ...’

- காசி.வேம்பையன்
படங்கள்: செ.சிவபாலன்