Published:Updated:

திலகவதி ஆடினால் தடியடி!

புதுக்கோட்டை

##~##
'க
ளவாணி’ படத்தில் ரீட்டா என்ற பெண் ரெக்கார்டு டான்ஸ் ஆடும்போது 'திலகவதியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கலாம்ல?’ என்பார் ஒரு பெரியவர். அந்த புதுக்கோட்டை திலகவதி இவர்தான்! தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஒரு காலத்தில் திலகவதி இல்லாமல் திருவிழா சிறக்காது. இவர் ஆடும் கிறுகிறு ஆட்டத்தில் இரண்டு தலை முறைகளே கிறங்கிக்கிடந்தன. புதுக்கோட்டை போஸ் நகரில் திலகவதியைச் சந்தித்தால், ''பேட்டியா... என்னையா?'' என நம்பவே முடியாத ஆச்சர்யத்தில் பேசுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திலகவதி ஆடினால் தடியடி!

''எங்க வீட்டுக்கும் ஆட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்குப் 10 வயசு இருக்கும்போது, எங்க வீட்டுல திருநெல்வேலியைச் சேர்ந்த கரகாட்டக்காரங்க குடியிருந்தாங்க. அவங்க வீட்டுல நாகஸ்வரம் வாசிச்சு, மேளத்தை அடிக்கும்போதே எனக்கு ஆடணும்போலத் தோணும். ஆனா, வீட்ல விட மாட்டாங்க. அதனால யாருக்கும் தெரியாம தனியா ஆடிப் பார்ப்பேன். ஒருநாள் அந்த ஆட்டக்காரங்க ளோட வேடிக்கை பார்க்கப்போறதா சொல் லிட்டு, புதுக்கோட்டையில நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்குப் போய் ஆடினேன். அதுதான் என் முதல் ஆட்டம். அதுக்கப்புறம் அவங்க போற இடத்துக்கு எல்லாம் நானும் போய் ஆடுவேன். எங்க வீட்டுக்குத் தெரிஞ்சு, கண்டிச்சுப் பார்த்தாங்க. நான் கேக்கலை. அப்படியே விட்டுட்டாங்க. முதல் சம்பளம் 25 காசு வாங்குன காலத்தில் இருந்து, ஆயிரக்கணக்கில் வாங்குற வரைக்கும் 30 வருஷங்களுக்கும் மேல ஆடித் தீர்த்தாச்சு!''

''தனியாக ஆடிய நீங்கள், எப்போது ஜோடி சேர்ந்து ஆடினீர்கள்? முதல் ஜோடி யார்?''

''என்னோட பதினஞ்சாவது வயதில் கந்தசாமி என்பரோடு  ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பிச்சேன். ஆட ஆரம்பிச்சா,  கூட்டம் கைதட்டி விசில் அடிக்கும். சினிமாப் பாட்டெல்லாம் அப்ப கிடையாது. கிராமியப் பாட்டுக்கள்தான். அதுக்கே எக்கச்சக்கமா ரசிகர்கள். சில ஊர்கள்ல எனக்கு ரசிகர் மன்றமே இருந்துச்சு. பட்டுக்கோட்டை பக்கத்துல ஆம்பலாப்பட்டுனு ஒரு கிராமம். அந்த ஊருக்கு நான் ஆட வர்றேன்னு தெரிஞ்சு, ஏகப்பட்ட கூட்டம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் தடியடி நடத்துனாங்க. அதை எல்லாம் மறக்க முடியுமா?''

''நீங்கள் மறக்க முடியாத நபர்கள்?''

''என்னோட கரகம் ஆடுன திருவப்பூர் மாரிக்கண்ணு, குளித்தலை தனம் அக்கா, பொன்னமராவதி கல்யாணி, தஞ்சாவூர் மாலா இப்படி எத்தனையோ பேரை நான் மறக்க முடியாது. இப்பவும் அவங்களைப் பார்க்கணும்னு தோணும். அவங்க புள்ளைங்களுக்குக் கல்யாணம்வெச்சா, என்னையக் கூப்புடுவாங்கள்ல. அப்பப் போயி எல்லாரையும் பார்ப்பேன்!''

திலகவதி ஆடினால் தடியடி!

''உங்களின் திருமண வாழ்க்கை...''

''எனக்கு அப்போ 17 வயசு. நான் எங்கே போனாலும், ஒருத்தர் என்னையவே சுத்திச் சுத்தி வருவார். காய்கறி வாங்கப் போனாலும் அங்கே வந்து நிப்பார். எந்த ஊருக்காச்சும் ஆடப் போனேன்னா, அங்கேயும் வந்து நிப்பார். முதலில் கோபமானாலும் பிறகு, அன்பாப் பேசினேன். அப்போ அவர் புதுக்கோட்டை காலேஜுல படிச்சுட்டு இருந்தார்.

படிப்படியா ரெண்டு பேருக்கும் காதல் வந்துருச்சி. விஷயம் ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு, பயங்கர எதிர்ப்பு. ஆனா, ரெண்டு பேருமே விட்டுத்தரலை. யாருக்கும் தெரியாம வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய் கல்யாணம் பண்ணிக் கிட்டோம். எனக்கு ஒரு பொண்ணும் மூணு பையன்களும் பொறந்தாங்க. பொண்ணைக் கட்டிக்குடுத்துட்டேன். மூத்தவனுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன். சின்னவன் இன்ஜினீய ருக்குப் படிச்சிட்டு இருக்கான். இவன் கடைக்குட்டி!''

''எப்போது ஆடுவதை நிறுத்தினீர்கள்?''

''என் பொண்ணும் என்னை மாதிரியே ஆட்டத்துலதான் விருப்பமா இருந்தா. அவ போக்குக்கே விட்டுட்டேன். என் பொண்ணு ஆட ஆரம்பிச்சதுமே, என் வீட்டுக்காரர் என்னை ஆட வேணாம்னு சொல்லிட்டார். எனக்குன்னு எப்படி ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்துச்சோ, அதே மாதிரி என் பொண்ணுக்கும் இருந்துச்சு. அவளும் கல்யாணம் முடிஞ்சு குஜராத்தில் செட்டில் ஆகிட்டா. இருந்தாலும், ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதே. அதனால் இப்பவும் 10 கரகாட்ட செட்டை வெச்சிக்கிட்டு பல ஊர்களுக்கும் அனுப்பிக்கிட்டு இருக்கோம். தை மாசம் வரைக்கும் ஒண்ணும் சீஸன் இல்ல. அதான் வீட்டுக்குள்ளயே சின்னதா ஒரு பொட்டிக் கடையைப் போட்டு உட்கார்ந்துட்டேன்!''

- வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: பா.காளிமுத்து